ஆறாம் திணை- மருத்துவர் கு.சிவராமன்

”என் மகன் படிக்கவே மாட்டேங்குறான் டாக்டர். புத்தகத்தைக் கைல கொடுத்தாலே தூக்கி வீசிடுறான். எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. புத்திசாலித்தனம் வளர ஏதாச்சும் மருந்து எழுதித் தர முடியுமா?’ என்று மருத்துவமனைக்கு வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகம். பரிசோதனைக்குப் பிறகு, அந்தக் குழந்தைகள் ‘கவனிப்புக் குறைபாடுள்ள குழந்தை’ (attention deficiency syndrome) என மருத்துவர் விளக்க முற்படுகையில், ‘எனக்கு மட்டும் ஏன்?’ என்ற
வேதனையுடன் வழியும் பெற்றோரின் கண்ணீர், நம்  நாட்டு வளர்ச்சிக் குறியீட்டைக் காட்டிலும் அதிகம்.

ஆட்டிஸம், கவனக்குறைவு நோய், அஸ்பெர்கர் நோய், இன்னும் இன்னதென வரையறுக்க முடியாத நோய் pervasive development disorder ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, அமெரிக்காவில் 53 குழந்தைகளுக்கு ஒருவர். இந்தியாவில் அது நூற்றுக்கு ஒருவராக இருக்கக்கூடும் என்கிறது கணிப்புகள். குறிப்பாக 4:1 என ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஆட்டிஸத்துக்கான தெளிவான காரணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. மரபணுக்களின் சீரற்ற நிலை, சுற்றுச் சூழல் மாசு, காற்றில்… மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்களும், கனிமங்களும் காரணங்களாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

‘எல்லாம் ஒண்ணேகால் வயசு வரை ஒழுங்காத்தான் இருந்துச்சு. ‘அம்மா, அப்பா’னுகூட அழகாச் சொல்லிட்டே இருந்தான். ஒண்ணரை வயசுக்கு அப்புறம்தான் எல்லாத்தையும் மறந்துட்டான். சேட்டை கூடிப்போச்சு. ஒரு இடத்துல இருக்க மாட்டேங்குறான். ஒண்ணு, எல்லாப் பொருளையும் அடுக்கிவெச்சுட்டே இருக்கான். இல்லைன்னா, தூக்கி எறியறான். அவனை அடக்கவே முடியலை. பேச மாட்டேங்கிறான். படிக்க மாட்டேங்கிறான்’- இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளுடன் வரும் குழந்தைகளைப் பாதித்திருப்பது ஆட்டிஸம் எனும் நோய்.

ஆட்டிஸம் இரண்டு வயதுக்கு முன்னால் பெரும்பாலும் கணிக்கப்படுவது இல்லை. தாய் பாலூட்டும்போது குழந்தையுடன் கண்களால் பேச வேண்டும். தாயின் கண்ணசைவுக்கும் முக பாவனைக்கும் குழந்தை பதிலுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தாய் சொல்வதை அப்படியே இமிடேட் செய்ய எப்படி அந்தக் குழந்தையின் மூளையில் மென்பொருள் பொதிந்துவைக்கப்பட்டு இருக்கிறது என்பது இயற்கையின் புரியாத விந்தைகளுள் ஒன்று. ‘மூணாம் மாசத்துல குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும்’ எனப் பாட்டி சொல்வது அனுபவம் மட்டுமல்ல… அறிவியல். அதுபோல் முகம் பார்க்காமல் கண்களைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் இருக்கலாம் என்கிறது நவீன அறிவியல்.

‘அதல்லாம் அவங்க அப்பாவே மூணரை வயசுலதான் பேசினான். இப்பவே பேசலைன்னா, ஒண்ணும் குறைஞ்சிடாது’, ‘ஆம்பிளைப் பிள்ளை மெதுவாத்தான் பேசும். பொண்ணுங்க எப்பவுமே ரொம்ப சீக்கிரம் எட்டு மாசத்துலயே பேசிடுவாங்க’ எனச் சொல்லி, இரண்டரை வயது வரை பேசாமல் இருக்கும் தன் மகனுக்கு ஆட்டிஸமோ, அதை ஒட்டிய நோய்த்தொகுப்போ இருப்பதைப் பெரும்பாலான பெற்றோர்கள் கணிக்கத் தவறிவிடுவர். அந்தத் தாமதம் குழந்தையை முழுமையாக சீராக்கத் தரும் பயிற்சிக்குப் பெரும் தடையாக இருக்கும். ஆம்பிளைப் பிள்ளைக்கு மிகத் தாமதமாகத்தான் பேச்சு வரும் என்ற கருத்துக்குத் தெளிவான அறிவியல் விளக்கம் எதுவும் இல்லை. ஆனால், பெண் குழந்தைகளைக் காட்டிலும் அதிகம் தன் செயல் மற்றும் புலன்களை ஆளுமைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஆண் குழந்தைக்கு, பேச எடுக்கும் முயற்சி கொஞ்சம் தாமதமாகலாம் என்ற கருதுகோள் உண்டு.

புள்ளிவிவரக் கணக்குப்படி ஆட்டிஸக் குழந்தைகளில் 23 சதவிகிதத்தினர் பேரறிவாளராக வருவர். இலக்கியத்தில் நம்மாழ்வார், அறிவியல் உலகின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோர் ஆட்டிஸ நோய் பாதித்தவர்கள் என்று சில வரலாற்றுத் தகவல்கள் உண்டு. ஆனால், அனைத்து ஆட்டிஸக் குழந்தைகளும் அப்படி அல்ல. அதனால் அவர்களுக்கு வெகு விரைவில் பயிற்சி துவக்கப்பட வேண்டும். தன்னுடைய ஐம்புலன்களையும், தடுமாற்றம் இல்லா நிலையும் (vestibular sense), தன் மூட்டுகளை ஒருங்கிணைத்து ஓடியாடும் திறனிலும் இந்தக் குழந்தைகளுக்குச் சங்கடங்கள் இருப்பதால், சுற்றியிருக்கும் சூழலுக்கு இசைவாக அவர்களால் இத்தனை யையும் ஒருங்கிணைத்துச் செயல்பட முடியாது. ஒவ்வொரு புலனும் தனித்தனியே அதிகபட்ச ஆளுமையுடன் இருப்பதும் மிக முக்கியக் காரணம்.

ஹாவர்டு கார்னர் எனும் உளவியல் விஞ்ஞானி ஒன்பது வகை அறிவாற்றலை விளக்குகிறார். ஒரு மனிதனுக்கு, இதில் ஏதாவது ஒன்றோ, பலவோ கண்டிப்பாக இருக்கும். ஆனால், அதனை ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்துக் கணிக்க முடியாது. ஐ.க்யூ டெஸ்ட்டில் மிகவும் பின் தங்கியுள்ள பலர், இந்த அறிவாற்றல் சில வற்றில் அதீதத் திறமையுடன் விளங்குவதை உலகம் பார்த்திருக்கிறது. இயற்கையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அறி வாற்றல் (Naturalistic intelligence), இசை அறிவாற்றல் (Musical intelligence), கணக்கிடும் அறிவாற்றல் (Mathematical-logical intelligence), ஏன் பிறந்தோம், மரணத்துக்குப் பின் என்ன என உள்ளார்ந்த தத்துவத் தேடல்கொண்ட அறிவாற்றல் (Existential intelligence), பிறரிடம் முழுப் புரிதலுடன் இருக்கும் அறிவாற்றல் (interpersonal intelligence), நடன உடலசைவுகுறித்த அறிவாற்றல் (Body kinesthetic intelligence), மொழி அறிவாற்றல் (linguistic intelligence), உளவியல் அறிவாற்றல் (intrapersonal  intelligence), முப்பரிமாணத்தில் சிந்திக்கும் அறிவாற்றல் (Spatial intelligence) ஆகியவையே அந்த ஒன்பது திறமைகள். இவற்றில் எவை ஒரு குழந்தையிடம் ஒளிந்திருக்கிறது… எந்தப் புலனில் அவனுக்கு /அவளுக்கு ஆளுமை அதிகம் எனக் கண்டறிய பிராய்லர் கோழிகளைப் போலப் பிள்ளை களைக் கையாளும் பள்ளிகளுக்கு நேரம் கிடையாது. அதற்கென மெனக்கெடுவதும் கிடையாது. அம்மா, அப்பாவுக்குத்தான் அந்தக் கடமை இருக்கிறது.

100 பொருள் இருக்கும் இடத்தில், ஒன்று மட்டும் மாறுபாடாக இருந்தால், சில ஆட்டிஸக் குழந்தைகள் கண நேரத்தில் அதைச் சரியாகக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் பெற்றிருக்கும். பொதுவாக, கூட்டு விளையாட்டில் பரிமளிக்க முடியாத இவர்கள், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், முதலான தனி விளையாட்டுகளில் எக்குத்தப்பான திறமையுடன் இருப்பர். அவர்களை உரிய திசையில் முடுக்கிவிட்டால், ஆட்டிஸக் குழந்தைகளில் இருந்தும் ஒரு உசேன் போல்ட்டோ, வான்காவையோ உருவாக்க முடியும்.

ஆட்டிஸக் குழந்தைகளின் பராமரிப்பில் உணவுப் பழக்கத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, குளூட்டன் சத்துள்ள மைதா மாவில் செய்யும் உணவுகளும், கேசின் புரதம் அதிகம் உள்ள பாலும் அவர்களுக்கு நல்லதல்ல. ஆட்டிஸக் குழந்தைகளுக்கு அந்தப் புரதச் சத்துகள் அமினோ அமிலமாகப் பிரிவதற்கு முன்னரே, அரைகுறை நிலையிலேயே குடலில் உறிஞ்சப்படுவதால், ஆட்டிஸ நோயின் மூளைத் திறனில் பாதிப்பு அதிகம் என்கின்றனர் அறிவியலாளர்கள். குளூட்டன் புரதம் இல்லாத பாரம்பரிய அரிசி ரகங்கள், சிறுதானிய உணவுகள் அவர்களுக்கு உத்தமம். பெஞ்சமின் ஃபென்கோல்ட் என்ற மருத்துவர் எந்த அளவுக்கு, வண்ணமூட்டி ரசாயனங்களும், பிரிசர்வேட்டிவ்களும், ஆட்டிஸத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை ஆய்வில் விளக்கி, இப்போது ஃபென்கோல்ட் உணவுமுறை மேலை நாடுகளில் ஆட்டிஸ நோய்க்கான பிரத்யேக உணவாக இருக்கிறதாம். பாரம் பரிய உணவு வகைகளின் சாரம்தான் அது. நேற்றைக்குப் பிறந்து மிரட்டும் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைக்கூட விரிவாக வேறு வார்த்தைகளில் பேசும் பழமையான சித்த மருத்துவ நூற்குறிப்புகளில், ஆட்டிஸத்தை ஒட்டிய கருத்துகள் அதிகம் இல்லை என்பதை வைத்துப்பார்த்தால், அன்றைய ரசாயனம் இல்லா வாழ்க்கை, குளூட்டன் இல்லா பாரம்பரிய உணவு, பதற்றம்இல்லா வாழ்வியல் ஆகியவையே இந்த நோயைத் தரவில்லை என்பது புரிகிறது.

‘கர்ப்பமா இருக்கும்போது என் பேச்சைக் கேக்காம, அங்கே இங்கே அலைஞ்சல்ல! நான் சொல்லச் சொல்லக் கேக்காமக் கண்டதையும் சாப்பிட்டல்ல? அதான் குழந்தைக்கு இப்படி ஆயிருச்சு!’ என ஆட்டிஸக் குழந்தையின் தாயை விஷ வார்த்தைகளால் குத்தும் ஆணாதிக்கமும், ‘சீட் வேணும்னு சொல்லி கலெக்டர், கமிஷனர்னு யார் யாரையோ சிபாரிசுக்குக் கூட்டிட்டு வந்தீங்க. இப்ப பிள்ளை படிக்கிற லட்சணத்தைப் பாருங்க. மார்க் மட்டும் குறைஞ்சுதுனு வெச்சுக்கங்க… அடுத்த வாரமே டி.சி-தர்றேன். வாங்கிட்டுப் போயிட்டே இருங்க!’ எனப் பள்ளிகள் தரும் அழுத்தமும், கவனக்குறை நோய் மற்றும் ஆட்டிஸம் குழந்தையின் பெற்றோர் எதிர்கொள்ளும் அதிகபட்ச சவால்கள்.

காற்றிலும், மண்ணிலும், நீரிலும் கழிக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத கசிவுகளைத் தினம் தினம் சுவாசித்தும் நேசித்தும் வாழும் நமக்கு ஆட்டிஸம் சொல்லும் பாடங்கள் நிறைய. நம் சுவாசத்தில் தினம் உள் செல்லும் இந்தத் துணுக்குகள் நாளைய நம் சந்ததிக்கு இப்படியான பல விபரீதங்களை விட்டுச் செல்லும்  என்பதுதான் epigenetics எனும் வளர்ந்துவரும் மருத்துவ அறிவியல் துறை சொல்லும் உண்மை.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பழக்கம் மட்டுமே இந்தப் புவியையும் நம்மையும் இவற்றிலிருந்து பாதுகாக்கும்!

(நன்றி ஆனந்த விகடன் – 17ஜூலை 2013)

—-

மருத்துவ இதழ்களில் மட்டுமல்லாது எல்லோரும் படிக்கும் படியான சாதாரண இதழ்களிலும் ஆட்டிசம் குறித்த கட்டுரைகள் வெளிவருவது மகிழ்ச்சியானது. மரு.சிவராமன் அவர்களுக்கும், விகடனுக்கும் நன்றி

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.