
படம் நன்றி:- pixabay
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா? கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொண்டால் உடல்ரீதியிலும் அறிவுவளர்ச்சியிலும் இயலாமை கொண்ட எல்லா சிறப்புக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
உடல் மற்றும் அறிவு வளர்ச்சியில் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை ஊனமுற்றோர் என்று குறிப்பிடுவது அவர்களை காயப்படுத்துவதாக இருப்பதை கண்டுகொண்டதால் இப்போது அவர்களை சிறப்புக் குழந்தைகள் என்று அழைக்கத்தொடங்கி இருக்கிறோம். இச்சிறப்புக் குழந்தைகளுக்கும் கல்வி என்பது அவர்களின் பிறப்புரிமையே என்பதை அரசு உணர்ந்ததன் விளைவே அனைவருக்கும் கல்வி இயக்கம் – சர்வ சிக்ஷா அபியான் (sarva siksha abhyan) ஆகும். இத்திட்டம் பின்வரும் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் முக்கிய கவனம் கொள்கிறது.
- பார்வைக் குறைபாடு(Visual Impairment)
- காது கேளாமையும், பார்வைக் குறைபாடும்(Deaf & Blindness)
- காது கேளாமை(Hearing Impairment)
- மன வளர்ச்சி குன்றுதல்(Mental Retardness)
- ஆட்டிசம்(Autism)
- மூளை முடக்குவாதம்(Cerebral Palsy)
- ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள்(Multiple Disabilities)
பொதுவாக சிறப்புக்குழந்தைகள் அவர்களின் பாதிப்பின் தீவிரத்தன்மையைப் பொறுத்து பிரிக்கப்படுகின்றனர். அதாவது, எப்போதும் பிறர் துணையோடு வாழவேண்டிய சிறப்புக்குழந்தைகள், ஒரளவுக்கு பிறரின் துணை தேவைப்படுவோர், பிறர் புரிந்துகொண்டால் தனித்து இயங்கக்கூடியவர்கள். இவர்களுக்கான கல்விமுறையிலும் சின்னச்சின்ன மாற்றங்கள் இருக்கின்றன. அவை:
- சிறப்புக்குழந்தைகளுக்கான கல்வி முறை (special education)
- சிறப்புக்குழந்தைகளை ஒருங்கிணைந்த கல்வி முறை (Integrated education)
- சிறப்புக்குழந்தைகளை உள்ளடக்கிய கல்விமுறை (Inclusive education)
சிறப்புக்குழந்தைகளுக்கான கல்வி முறை (special education)
இது முழுக்க முழுக்க சிறப்புக்குழந்தைகளை மையப்படுத்திய கல்விமுறையாக இருக்கும். இவ்வகை சிறப்புப் பள்ளிகள் தனியான வளாகத்தில் மிகக் குறைவான மாணவர் ஆசிரியர் விகிதம், தேவையான கட்டமைப்பு வசதிகள், சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் என விரிவான திட்டமிடலோடு இயங்கும். ஒவ்வொரு சிறப்புக்குழந்தையும் வெவ்வேறு விதம் என்பதால், தனித்தனியாக ஒவ்வொரு குழந்தைகளின் திறன்களையும் ஆராய்ந்து, அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை முடிவு செய்து அதன்படி கற்பிப்பார்கள். (Individualized Education Plan).
ஒருங்கிணைந்த கல்வி முறை (Integrated education)
இம்முறையில் ஒரே பள்ளி வளாகத்தில் சிறப்புக் குழந்தைகள் தனிப்பட்ட வகுப்புகளில் படிப்பார்கள். அவர்களுக்கென தனிப்பட வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் படித்தாலும்கூட சில பொதுப்பாடங்களை சிறப்புக்குழந்தைகள் அல்லாத இதர குழந்தைகளுடன் கலந்து படிக்க வாய்ப்பு ஏற்பாடு செய்துகொடுப்பார்கள்.
எல்லாக் குழந்தைகளையும் உள்ளடக்கிய கல்விமுறை (Integrated education)
இம்முறையில் எல்லா குழந்தைகளுக்குமான ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்படும். ஒரே வகுப்பறையில் தன் வயதொத்த மற்ற மாணவர்களுடன் கலந்துதான் சிறப்புக்குழந்தைகளும் பாடங்களைப்படிக்க வேண்டியதிருக்கும். தேவைப்படுமெனில் நிழல் ஆசிரியர்(Shadow Teacher) அல்லதுபெற்றோர்/உதவியாளர் வகுப்பறையில் மாணவர்களுக்கு உதவுவர். தேர்வு காலங்களில் தேர்வு எழுதுவதற்கு உதவியாளர்(scribe) கிடைப்பார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம், நாடு முழுமைக்கும் கல்வியில் எல்லா குழந்தைகளையும் பாகுபாடின்றி நடந்தவேண்டும் என்று அறிவுத்துகிறது. குழந்தையின் தன்மைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த கல்வி, உள்ளடக்கிய கல்விமுறையை எல்லா பள்ளிகளும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறது.
அரசு பள்ளிகள் இதற்கான வாய்ப்புகளுக்கு வாயில்கதவை திறந்து வைத்திருக்கின்றன. சில தனியார் பள்ளிகளும்கூட மாணவர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. ஆனால் எல்லா பள்ளிகளும் இப்பணியை செய்கின்றவனா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக அறிவு வளர்ச்சி சார்ந்த குறைபாடுள்ள மாணவர்களை தங்கள் பள்ளிகளில் ஏற்றுக் கொள்வதில் பெரும்பான்மை பள்ளி நிர்வாகங்களுக்கு தயக்கம் இருக்கவே செய்கிறது. ஆட்டிசம், மனவளர்ச்சி குன்றுதல், டவுன் சிண்ட்ரோம் போன்ற பல்வேறு குறைபாடுள்ள குழந்தைகள் அவர்களின் பாதிப்பு மிக லேசானதாக இருக்கும் பட்சத்தில் பொதுப் பள்ளிகளில் படிக்க மருத்துவர்களாலும், சிகிச்சையாளர்களாலும் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் பொதுப் பள்ளிகள் இவ்விஷயத்தில் முயற்சிகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
சிறப்புக்குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கும் பள்ளிகளின் நிர்வாகம், பழியை இதர குழந்தைகளின் பெற்றோர்மீது சுமத்துகிறார்கள். சிறப்புக்குழந்தையைப் பார்த்து, தங்கள் பிள்ளையும் அப்படி மாறிவிடுவானோ என்று பல பெற்றோர் அஞ்சுவதாகத் தெரிகிறது.
உண்மையில் அனேக சிறப்புக்குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்சனைகள் தொட்டுக்கொண்டால் ஒட்டிக்கொள்ளும் நோய்களன்று. அவை பிறவிக்குறைபாடுகளாகவே இருக்கின்றன. அதனால் பெற்றோரும், பள்ளியும் தேவையின்றி அச்சப்படுவதைத் தவிர்க்கவேண்டும்.
”சிறப்புக்குழந்தைகளை அவர்களின் நிலை அறிந்து, அதற்கேற்ப பள்ளிகளுக்குப்போக சிபாரிசு செய்வோம். தீவிர கவனிப்பு தேவைப்படும் குழந்தையாக இருந்தால் அவர்களுக்கு சிறப்புப் பள்ளிதான் சரியானது.கொஞ்சம் பயிற்சியும், மற்றவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளும் திறனும் இருக்கும் சிறப்புக்குழந்தைகளை மட்டும்தான் இதர பள்ளிகளுக்கு அனுப்ப சிபாரிசு செய்கிறோம். மற்ற மாணவர்களுடன் இவர்களும் கலந்து பழகும் போது, சிறப்புக்குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. இப்படி முன்னேற்றம் காட்டும் குழந்தைகள் பதினெட்டு வயதைத்தொடும் போது, ஒரளவு பொதுவான சமூக வாழ்கைக்கு தயாராகிவிடுவார்கள்.
மற்றகுழந்தைகளும் இவர்களிடம் அன்பை பகிர்ந்துகொள்வதைக் காணமுடியும். தாங்கள் மோசமில்லை, எல்லோரையும் போலத்தான் என்ற எண்ணமே சிறப்புக்குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பெரிதும் துணை செய்யும். அதனாலேயே எல்லோருக்குமான பொதுப்பள்ளிகள்தான் இவர்களுக்கு நல்லது.” என்று சொல்லுகிறார் சிறப்புக்குழந்தைகளுக்கான தொழில்முறை பயிற்சியாளர்.
தங்கள் குழந்தைகள் சிறப்புக்குழந்தைகளுடன் சேர்ந்து படிப்பதை பெற்றோர் ஊக்குவிக்கவேண்டும். கல்வி கற்பதற்கு எல்லோருக்கும் சம உரிமை உள்ளது என்பதை பெற்றோரின் வாயிலாக குழந்தைகளும் உணர வழிவகை செய்யவேண்டும். தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் அனுமதி மறுக்கப்படும் சிறப்புக்குழந்தை, பல கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு பள்ளியைத் தேடிப்போக வேண்டிய சூழலே நிலவுகிறது. இப்படி அக்குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் மிகுந்த மன உளைச்சலை கொடுப்பது நாகரீகமான ஒரு சமூகத்தின் செயலன்று.
______________________
செல்லமே மாத இதழ் எழுதிய கட்டுரை
அற்புதமான கட்டுரை பாலா. உண்மையில் எல்லா பள்ளி தாளாளர்களும். ஆசிரியர்களும், பெற்றோர்களுகம் படிக்க வேண்டிய கட்டுரை. அது மட்டுமல்ல அரசும் கூட கூடுதலாக கவனம் கொள்ள வேண்டிய கட்டுரை. பள்ளிகளில் அரசு கேட்கும் புள்ளிவிவரத்தில் கூட இந்த மாதிரியான குழந்தைகளின் என்னிக்கையையும் வசதியையும் கேட்கிறது. ஆனால் எனக்கு தெரிந்து அரசு பள்ளியில் இது நிறப்புவதே கிடையாது. அப்படியே சில குழந்தைகள் இருந்தாலும் அவர்களையும் நார்மல் சைல்டாக கணக்க காட்டிவிடுகின்றனர். அவர்கள் ஆரம்ப நிலையிலேயே அவர்கள் வெளியேற்றப்படுவதும் உண்டு. அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
அன்புள்ள பாலபாரதி அவர்களுக்கு,
உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். ஆட்டிசம், மனவளர்ச்சிக் குறைப்படுகள் பற்றி விழிப்புணர்வை உருவாக்க பாடுபட்டு வருவதை பாராட்டுகிறேன். மேலே உள்ள பதிவு பற்றி ஒரு சந்தேகம். நானறிந்தவரரை தமிழ்நாட்டில் ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி பெற வசதிகள் செய்து தரப்படவில்லை. இதில் உள்ள ‘அதிகாரபூர்வமான’ மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் உள்ள 10 இயலாமைகளில் ஆட்டிசம் காணப்படவில்லை. உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் படி இது சரியா என்பதைக் கூறினான் நன்றியுடையவனாக இருப்பேன்.
நன்றி
எம். எஸ். தம்பிராஜா
அன்புள்ள பாலபாரதி அவர்களுக்கு,
உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். ஆட்டிசம், மனவளர்ச்சிக் குறைப்படுகள் பற்றி விழிப்புணர்வை உருவாக்க பாடுபட்டு வருவதை பாராட்டுகிறேன். மேலே உள்ள பதிவு பற்றி ஒரு சந்தேகம். நானறிந்தவரரை தமிழ்நாட்டில் ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி பெற வசதிகள் செய்து தரப்படவில்லை. இதில் உள்ள ‘அதிகாரபூர்வமான’ மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் உள்ள 10 இயலாமைகளில் ஆட்டிசம் காணப்படவில்லை. உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் படி இது சரியா என்பதைக் கூறினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
நன்றி
எம். எஸ். தம்பிராஜா