
நூலின் அட்டை
சாகசகம் பிடிக்காத குழந்தைகளே இருக்கமுடியாது. அப்படியொரு சாகசக் கதைதான் இந்த நாவல். கடல் சூழ்ந்த ஊரில் பிறந்ததாலோ என்னவோ, எனக்கு எப்போதும் கடல் பிடிக்கும்.
அந்த கடலுக்குள் போய்ப்பார்த்தால் என்ன என்று தோன்றியது. அற்புதங்கள் நிறைந்தது அது. கணக்கில் வராத, கோடானுகோடி உயிரினங்கள் அதன் உள்ளே வாழ்கின்றன என்பது அறிவியலாளர்களின் கருத்து.
பால்யத்தில் நான் நீச்சல் பழகி, விளையாடிய, பாறைகள் நிறைந்த, அதே இடத்தில் இருந்து கதையைத் தொடங்கியிருக்கிறேன். ஓர் உண்மையைச் சொல்வதானால் சிறுவயதில் அடிக்கடி எனக்கு தோன்றும் கனவு இது. இன்று கதையாக உங்கள் கைகளில் இருக்கிறது.
இக்கதையை எழுதியபின், குழந்தைகள் புரிந்துகொள்ளுபடி எளிமையாக எழுதியிருக்கிறோமா என்ற சந்தேகம் வந்தது. சந்தேகத்தை உரசிப்பார்க்கும் உரைகல்லாக ஏழு வயது சமர்சேந்தன் நினைவும் வந்தது. உடன்பிறவா சகோதரி சுந்தரிநடராஜனின் மகனார் இவர்.
ஒவ்வொரு அத்தியாயமாக சமருக்கு வாசித்துக்காட்டும்படி, அனுப்பி வைத்தேன். சமருக்கு கதை மிகவும் பிடித்திருந்ததாகவும், புரிந்துகொண்டதாகவும் பதில் எழுதி இருந்தார். இதற்கென நேரம் ஒதுக்கிய சமருக்கும், அவனது அம்மாவுக்கும் நன்றியும் அன்பும்.
இக்கதை குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. வெறும் சாகசத்துடன் இந்நாவல் நின்றுவிடவில்லை. சூழலியலையும் அறிவியலையும் சேர்த்தே பேசுகிறது. அன்பும் பிறருக்கு உதவிடும் குணமும் உயிர் நேசிப்பும் இதில் பேசப்படுகின்றன. இவை பெரியவர்களுக்கும் உரியதே. அவர்களும் இந்நாவலை வாசிக்கலாம். இயற்கையை அழிக்கும் நமது செயல்கள் குறிந்து அவர்களை அது கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கும்.
இந்நாவலை வெளியிடும் பாரதி புத்தகாலயத்திற்கும், அதன் மேலாளர் திரு. க.நாகராஜன் அவர்களுக்கும் என் நன்றி.
(விரைவில் வரவிருக்கும் சிறார் நாவலுக்கான முன்னுரை)
அருமை அண்ணா.
ஆவலுடன் வெயிட்டிங்.
நன்றி விஷ்வா. மீ டூ வெயிட்டிங் 🙂