– மனநலம் குறைந்த மகளை ஆசிரியையாக்கிய சாதனையாளர்
சாதனை

 

p81a
“அப்பா… நாளைக்கு ஸ்கூல்ல பிங்க் கலர் ஆக்டிவிட்டி. எனக்கு டிரெஸ், வளையல், பொட்டு எல்லாம் பிங்க் கலர்ல எடுத்து வைப்பா’’ என்று தன் தந்தை சதாசிவத்திடம் கேட்கும் நந்தினி, மாணவி அல்ல… பள்ளியில் ஆசிரியை. மனநலம் குறைந்த அவரை ஆசிரியராக்கியது, அந்தத் தந்தையின் அடர்த்தியான அன்பும், அக்கறையும், முயற்சியும், பயிற்சியும்!

மனவளர்ச்சி குறைந்த 32 வயதாகும் நந்தினிக்காக அந்த பாசத்தந்தை வாழ்ந்து வரும் போராட்ட வாழ்க்கை, அன்பின் ஊற்று! இதில் 40 வருடங்களாக மனநலமின்றி இருக்கும் மனைவியையும் அவர் தாங்கி வருவது, மண வாழ்க்கையின் மாண்பு.

“கடலூர் மாவட்டம்தான் எனக்கு சொந்த ஊரு. அக்கா பொண்ணுக்குக் கொஞ்சம் விவரம் பத்தாது என்பதால, நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் மூத்த பையனும், ரெண்டாவது பொண்ணும் ஆரோக்கியமா பிறந்தாங்க. மூணாவது பொண்ணான நந்தினியும் பிறக்கும்போது ஆரோக்கியமாதான் இருந்தா. பொதுப்பணித் துறையில வேலை பார்த்த நான், வீட்டிலும் என் மனைவியையும், மூணு பசங்களையும் கவனிச்சுக்கிட்டுனு ரொம்ப சிரமப்பட்டேன்.

சின்ன வயசுல நந்தினி தன் அண்ணன், அக்காவைத் தவிர வேற யார்கூடவும் பழகமாட்டா. நாலு வயசுவரைக்கும் பேச்சு வரலை. அஞ்சு வயசுல ஸ்கூல்ல சேர்த்தப்போ, அவளுக்கு சுத்தமா படிப்பு வரலை. இருந்தாலும், அட்டண்டன்ஸ் ஒழுங்கா இருந்ததால அவ ஸ்கூல்ல எட்டாவதுவரை அவளை பாஸ்செய்து விட்டுட்டாங்க. காரணமே இல்லாம அழுவது, சண்டை போடுவதுனு இருந்த அவளோட நடவடிக்கைகளை நானும் பெருசா எடுத்துக்கல. ஆனா, 13 வயசுல பெரிய பொண்ணானதுக்கு அப்புறமும் அவ குழந்தைபோலவே நடந்துக்க, அப்போதான் அவளுக்கு ஏதோ கோளாறுனே புரிஞ்சது. மனநல மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போனேன்.

p81b

‘உங்க குழந்தைக்கு ஆட்டிஸம் என்ற மனவளர்ச்சிக் குறைபாடு. இதை முழுமையா குணப்படுத்த முடியாது’னு டாக்டர் சொன்னதைக் கேட்டு, உயிரே போயிடுச்சு எனக்கு. பருவ வயசுல இருக்கிற பொம்பளப் புள்ளைக்கு புத்தி பத்தலை, மனைவிக்கும் அந்தப் பிள்ளையைப் பத்திரமா பாத்துக்கிற பக்குவம் இல்லை என்ற நிலை. நாளாக ஆக, என் பிள்ளையை பலரும் கேலிசெய்ய ஆரம்பிக்க, நான் உடைஞ்சுபோயிட்டேன். இன்னும் எத்தனை நாளைக்கு, எப்படி இந்தப் பிள்ளையைக் காப்பாத்தப் போறோம் என்ற துயரமான கேள்வி என்னைத் தற்கொலையை நோக்கித்தள்ள, நந்தினியைக் கூட்டிட்டு மேட்டூர் அணை வரை போயிட்டேன்’’

– பேச முடியாமல் உடைந்தவர், சில நொடிகள் மௌனத்துக்குப் பின் தொடர்ந்தார்…

‘‘அணையில இருந்து குதிச்சு சாகலாம்னு என் பொண்ணோடு நின்னேன். ‘அப்பா, என் கையை பார்த்து கெட்டியா புடிச்சுக்கோங்க… விழுந்துடப்போறீங்க’னு நந்தினி சொன்னப்போ, ‘இந்தப் புள்ளையைபோய் கொல்லப் பார்த்தோமே’னு அந்த வார்த்தைகள் என்னை அறைந்து, வாழ்க்கைக்கு திருப்பி கூட்டிட்டு வந்துச்சு. ‘மனநலக் குறையோடு பிறந்தது நந்தினியோட குற்றமா? அப்படிப் பிறந்த குழந்தைகளுக்கு எல்லாம் சாவுதான் விடிவா?’னு மனசு குமுற, மறுபடியும் டாக்டர்கிட்டபோய், ‘என் புள்ளை வாழணும், அதுக்கு வழி சொல்லுங்க’னு கேட்டேன்.

‘உங்க பொண்ணுக்கு வயசுக்கு ஏத்த மூளை வளர்ச்சி இருக்காது. நடவடிக்கைகள் இயல்பா இருக்காது. ஆனா, தொடர் பயிற்சி மூலமா முடிந்தளவு அவளை உலகத்தோட ஒட்டி வாழவைக்கலாம்’னு சொன்ன டாக்டர், அந்தப் பயிற்சிக்காக எங்க வீட்டில் எல்லோரும் மருத்துவமனையில் தங்கணும்னு சொன்னாங்க. என் மனைவி வரமுடியாத சூழல் என்பதால, நானும், என் மத்த ரெண்டு பிள்ளைங்களும் அங்கபோய் தங்கி, அவளை எப்படிப் பார்த்துக்கணும், அவகிட்ட எப்படி நடந்துக்கணும், அவளுக்கு ஒரு விஷயத்தை எப்படிக் கத்துக்கொடுக்கணும்னு பயிற்சி எடுத்துக்கிட்டோம்.

அப்போ நந்தினிக்கு வயசு 21. ஆனா, 8 வயசுக் குழந்தையோட மனவளர்ச்சிதான் இருந்தது. அதனால, 8 வயசுக்கான பாடங்கள், பயிற்சிகளில் இருந்தே அவளுக்குச் சொல்லித்தர ஆரம்பிச்சேன். தலை சீவுறதில் தொடங்கி, படிக்கிறது, சமைக்கிறது வரை ஒவ்வொரு விஷயமா கற்றுக்கொடுத்தேன். மிக மிக மெதுவாதான் எதையும் கத்துக்குவா. பொறுமையோட காத்திருப்பேன். கத்துக்கிட்டதும் அவளுக்குச் சின்ன சின்னப் பரிசுகள் கொடுப்பேன்.

p82a

நந்தினி தன்னை தாழ்வாவோ, தனிமையாவோ நினைச்சுடக் கூடாதுனு தெருக் குழந்தைகளோட அவ சேர்ந்துவிளையாடும் தருணங்களை உருவாக்குவேன். அப்போ இவளோட சேர்த்து எல்லோருக்கும் நல்வழிக்கதைகள், யோகானு கற்றுக்கொடுப்பேன். ‘புத்தி சரியில்லாத பிள்ளையை வெச்சுக்கிட்டு இவன் என்ன செஞ்சுட்டு இருக்கான்?’ என்ற உலகின் கேலிகளை எல்லாம் புறந்தள்ளி… பேச, எழுத, கைவேலைப்பாடுகள், க்ரியேட்டிவிட்டினு எல்லாத்தையும் என் மகளுக்குச் சொல்லிக் கொடுத்தேன். இந்த 11 வருஷமா நான் அவமேல வெச்ச அக்கறைக்கும், நம்பிக்கைக்கும் பலனா, ஆட்டிஸத்தால பாதிக்கப்பட்ட என் பொண்ணு, இன்னிக்கு ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலைபார்க்கிற அளவுக்கு வளர்ந்திருக்கா!’’

– கண்களில் நீர் திரையிடுகிறது சதாசிவத்துக்கு.

‘‘ஸ்கூல்ல இவளை டீச்சரா சேர்த்துக்கச் சொல்லி நான் கேட்டப்போ, ‘உங்க பொண்ணோட தன்னம்பிக்கையை வளர்க்க ஒரு வாய்ப்பு தர்றோம். ஆனா, சம்பளம் எல்லாம் தர முடியாது’னு சொல்லிட்டாங்க. அவ கத்துக்கிட்ட விஷயங்களை பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிற அளவுக்குத் தன்னைத் தானே அவ தெளிவாக்கிக்கிறதும், வெளியுலகில் பழகுறதும்தான் முக்கியம் என்பதால, சம்பளம் பத்திக் கவலையில்லைனு சொல்லிட்டேன்.

ஆனா, என் பொண்ணு, ‘எல்லோருக்கும் சம்பளம் தர்றாங்க, எனக்கு ஏன் இல்ல?’னு எங்கிட்ட வந்து கேட்க, அப்புறம் நானே ஆயிரம் ரூபாயை ஒரு கவர்லபோட்டு ஸ்கூல்ல கொடுத்து, அதை இவகிட்ட சம்பளம்னு சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். அந்த முதல் சம்பளத்தை வாங்கிட்டு வந்து என் பொண்ணு எங்கிட்ட கொடுத்தப்போ அவபட்ட சந்தோஷத்தை ஆயுளுக்கும் என்னால மறக்க முடியாது. என் பொண்ணோட திறமையைப் பார்த்துப் பாராட்டிய பள்ளி நிர்வாகம், இந்த ஒரு வருஷமா அவங்களே இவளுக்குச் சம்பளம் தர்றாங்க. என் பொண்ணை கேலி செஞ்சவங்க எல்லாம் இப்போ ‘நந்தினி டீச்சர்’னு கூப்பிடுறாங்க. இது என் பொண்ணோட வெற்றி மட்டுமில்ல, அவளை மாதிரியான ஆட்டிஸ குழந்தைகளுக்கான நம்பிக்கையும்!’’

p83a

– அந்த அப்பாவின் வார்த்தைகளில் வலிகள் பல கடந்து வந்த நெகிழ்ச்சி.

சதாசிவத்தின் மற்ற இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி விட்டது. பணி ஓய்வுக்குப் பின் இப்போது தன் மனைவி மற்றும் மகள் நந்தினியை கவனித்துவரும் இவர், ‘தயா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, மனநலம் குறைந்தவர்களுக்கான சிகிச்சைகள், அதற்கான அரசின் நிதிஉதவிகள் பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வு அளித்து வருவதோடு, கருணைக் கொலைக்கு எதிராகவும் செயலாற்றி வருகிறார்.

‘‘என்னோட மத்த ரெண்டு பிள்ளைகளோட ஒவ்வொரு கட்ட வளர்ச்சி யையும்விட, நந்தினியின் சின்னச் சின்ன முன்னேற்றங்கள்தான் எனக்கு அதிக மகிழ்ச்சியா, நெகிழ்ச்சியா இருக்கும். ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பெற்றோரா இருக்கிறதைவிட, நந்தினி போன்ற தெய்வக் குழந்தைக்கு பெற்றோரா இருக்கிறதுதான் உலகின் உன்னதமான விஷயம். அதனால, ஆட்டிஸத்தால பாதிக்கப்பட்ட குழந்தைகளோட பெற்றோர்கள், அவங்களை முழுமனசோட, அன்போட, அக்கறையோட வளர்த்தெடுங்க. அவங்களோட வெற்றி உங்களுக்குத் தர்றது, உலகில் எல்லோருக்கும் தரிசிக்கக் கிடைக்காத பேரானந்தமா இருக்கும்!’’

தன் மகளின் தலைகோதி சிரிக்கும் சதாசிவத்தின் கண்களில் பெருமித மின்னல்!

கட்டுரையாளர்: தனலட்சுமி, படங்கள்: ச.ஹர்ஷினி

+++++++++++++++++++++++++++++++++

நன்றி: அவள்விகடன்


Comments

9 responses to “ஆட்டிசம்: “தெய்வக் குழந்தையை வளர்ப்பது உலகின் உன்னதம்!””

  1. Sushma Avatar
    Sushma

    Encouraging…

  2. God in father’s role!

  3. S.NAMBI Avatar
    S.NAMBI

    Dailu your practise is very Long day success is very happy sir

  4. இளங்கோ Avatar
    இளங்கோ

    உண்மையில் கைக்குழந்தைகள் தான்.

  5. இளங்கோ Avatar
    இளங்கோ

    என் சிறிய மகளும் இதே போல் தான். எங்களுக்கு தங்களின் வாழ்க்கை ஒரு சிறந்த வழிகாட்டி.

  6. Sivanesh Avatar
    Sivanesh

    Encouraging father and mother…..👀

  7. Prem Avatar
    Prem

    அவர்கள் தொலைபேசி எண் முகவரி தேவை

  8. இக்கட்டுரையை வெளியிட்டது விகடன் குழுமம். அவர்களிடம் தான் விசாரிக்கவேண்டும். என்னிடம் இல்லை. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *