குறிப்பு: நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் என எல்லோருக்குமான வேண்டுகோள். சிறப்புக்குழந்தை, ஆட்டிச நிலைக்குழந்தைகள் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதால் எழுதப்பட்டுள்ளது.

1. பொதுவெளியில் – பயணத்திலோ, திருமண மண்டபத்திலோ, கோவிலிலோ எந்த இடமாக இருந்தாலும், ஓர் ஆட்டிச நிலைக்குழந்தையை எதிர்கொண்டால் அவரின் பெற்றோரிடம் துருவித் துருவி விசாரணைகள் ஏதும் செய்யாமல் இருக்கலாம். கூடவே அதைச்செய், இதைச்செய் என்பதுபோன்ற இலவச அறிவுரைகளையும் தவிர்க்கலாம்.

2. ஆட்டிச நிலைச்சிறுவர்களுக்கு புலனுணர்வு சார்த்த சங்கடங்கள் எப்போதும் இருக்க வாய்ப்புகள் உண்டு என்பதால், கைகளை உதறியபடியோ, முன்னும் பின்னும் உடலை ஆட்டியபடியோ, தனக்குத்தானே சத்தமாக பேசிக்கொண்டோ அல்லது வினோதமான ஓசைகள் எழுப்பிக்கொண்டோ இருப்பர். அச்சமயங்களில் அவர்களை அதட்டுவதோ,அடக்குவதோ, அவர் பெற்றோரை கடிந்துகொள்ளவோ வேண்டாம்.

3. இப்படியான புலனுணர்வு பிரச்சனையின் காரணமாக இவர்கள் செய்யும் விநோத செயல்பாடுகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டாலே, இவர்கள் கொஞ்ச நேரத்தில் அமைதிக்குத் திரும்பிவிடுவர். அதைவிடுத்து, குறுகுறுவென உற்று நோக்க வேண்டாம். அது இவர்களின் செயல்களை அதிகப்படுத்தவே செய்யும் என்பதை உணருங்கள்.

4. உங்கள் வீட்டுக்குழந்தைகள், சக வயதுடைய இவர்களை விநோதமாகவும், கேலியாகவும் பார்க்காமலிருக்கக் கற்றுக்கொடுங்கள். குறைபாடுகள் இருந்தாலும் இவர்களும் சக மனிதர்களே என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு தெளிபடுத்துங்கள்.

5. வாய்ப்புக் கிடைக்கும்போது அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, (குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையாவது) சிறப்புக்குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கோ அல்லது தனி இல்லங்களுக்கோ உங்கள் பிள்ளைகளை அழைத்துச்சென்று, சவால்களுடன் தினமும் போராடும் இவர்களை அறிமுகப்படுத்துங்கள். இடர்பாடுகளுடன் வாழும் இக்குழந்தைகளைக் காணும்போது, அவர்கள் தனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வதோடு, இக்குழந்தைகளின் சிரமங்களும் புரியவரும். (இங்கே- ஒரு குழந்தை வைத்திருக்கும் பெற்றோரைக் குறிப்பிடவில்லை. பலகுழந்தைகள் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுகிறேன்)

6. சிறப்புக்குழந்தைகளும் இந்தப் பூமியில் வாழத் தகுதியானவர்களே… அவர்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. நன்றாக இருக்கும் நாம்தான் அவர்களுக்கு ஆதரவாக உறுதுணையாக இருக்கவேண்டும். காயப்படுத்தக்கூடாது என்பதை உணரச்செய்யுங்கள்.

7. ஆட்டிச நிலைக்குழந்தைகளுக்கு பெரிதும் சவாலான விஷயம் தினப்படி வாழ்க்கையின் சம்பிரதாயங்கள் தான். (ADL- Activities of daily living) அதாவது ரூல்ஸ் கடைப்பிடிப்பது. (செருப்பை அறைவாசலில் விடுவது, வரிசையில் நிற்பது, பந்து போட்டு விளையாடும் போது, அடுத்தவருக்குப் பந்தை கொடுக்கத்தெரியாமல் தானே வைத்துக்கொள்வது போன்று) இவற்றை தெரபிஸ்ட்கள், பெற்றோரை விட இன்னொரு குழந்தை எளிமையாகக் கற்றுக்கொடுத்துவிடும். உங்கள் குழந்தைகளின் மூலம் அதற்கு நீங்கள் உதவலாம். சிறப்புக்குழந்தைகள் எல்லா விஷயங்களிலும் மெதுவாகவே ரியாக்ட் செய்வார்கள் என்பதால் உடனடி பலரை எதிர்பார்க்கவேண்டாம் என்பதை உங்கள் பிள்ளைக்கு புரியவையுங்கள்.

8. குறைபாடு உடையவர்களை ஒருபோதும் உடல் அளவிலோ, மனதளவிலோ, கேலி கிண்டல் செய்தோ காயப்படுத்தும்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதைப் புரியவையுங்கள்.

9. நீங்கள் மேற்சொன்ன வழிகளைப் பின் பற்றினால்.. வளரும் உங்கள் பிள்ளையும் எதிர்காலத்தில் சிறப்புக்குழந்தைகளையும் தம்முடன் இணைத்துக்கொண்டு பயணிப்பர். இது லட்சக்கணக்கான சிறப்புக்குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும், அவர்தம் பெற்றோருக்கு பெரும் ஆறுதலையும் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

10. குழந்தைக்கு எதிராக எது நடந்தாலும் குரல் கொடுப்பவராக, நீங்கள் இருப்பீர்கள். அதுபோல, உங்கள் பார்வையில் எங்காவது சிறப்புக்குழந்தையையும் அதன் பெற்றோரையும் எவரேனும் அவமானப்படுத்தும்போதோ, நெருக்கடி ஏற்படுத்தும் சமயங்களிலோ, அவர்களுக்காகவும் சேர்த்தே ஒலிக்கட்டும் உங்கள் குரல்.

இவை எல்லாம் கட்டளைகள் அல்ல! வேண்டுகோள்கள் அவ்வளவே!!

http://blog.balabharathi.net