சிறார் இலக்கியம் செழிக்க முற்போக்காளர்களின் பங்கு!

என்னுடைய பால்யத்தை வண்ணமிக்கதாக மாற்றியவர்கள் அப்போதைய சிறார் எழுத்தாளர்கள்தான். திக்குவாய் குறைபாடும், கற்றல்குறைபாடும் சேர்ந்து இருந்த ஒரு மாணவன் நான். இக்குறைபாடுகளினால் பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் எப்படி எல்லாம் ஆட்பட்டுப் போயிருப்பேன் என்பதை இதனை வாசிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

பிறரின் கேலிக்கு ஆட்படும்போதெல்லாம் உள்ளுக்குள் உடைந்து அழுவேன். இதன் காரணமாகவே தனித்து இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தை புத்தக வாசிப்பு பக்கம் திருப்பினேன். உடன்பிறந்தோருக்கும் வாசிப்பு பழக்கம் இருந்ததால், அவர்கள் படிக்கும் சிறுவர் பத்திரிக்கைகளை நானும் படிக்கத்தொடங்கியவன் பின்னாலில் எனக்கான இதழ்களை நானே வாங்கிக்கொண்டேன். அப்புறம் நூலகத்தில் சேர்ந்து, நூலகரின் வழிகாட்டுதலோடு நூல்களைத் துணைகொண்டேன். இதெல்லாம் எட்டாம் வகுப்பு படிக்கும்போதெ நடந்துவிட்டது.

எழுத்தாளர்களின் கதை உலகம் எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அந்த கதாபாத்திரங்களே கனவுகளில் வந்தன. சிறுவயதில் நான் படித்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் கொடுத்த ஆனந்தத்தை இன்று யோசித்துப் பார்த்தாலும் அதே மகிழ்ச்சி பொங்கும்.

பத்து வயதில் ஒரு சிறார் படைப்பைப் படிக்கும் ஓர் இளம் வாசகனின் மனதில் இருபது ஆண்டுகள் கழித்தும் அந்தப் படைப்பு அசைக்கமுடியாத இடத்தில் இருந்தால் அதுவே சிறந்த சிறுவர் படைப்பாக இருக்கமுடியும் என்பது எனது கருத்து. இதை நான் சிறுவர் இலக்கியத்திற்குள் நுழையும் முன்பு இருந்தே சொல்லி வருகிறேன்.

எல்லோருக்கும் ஒரே எழுத்தாளரின் படைப்பே மனதில் நிற்க வேண்டும் என்பதில்லை. அதனால்தான் ஒருவருக்கு வாண்டுமாமா, இன்னொருவருக்கு கல்வி கோபாலகிருஷ்ணன், மற்றொருவருக்கு தூரன் என ஆளாளுக்கு அவர்களுக்குப் பிடித்தவர்களின் ஒவ்வொரு படைப்புக்களை குறிப்பிடுகின்றனர்.

தொன்னூறுகளின் மத்தியில் சிறுவர் இலக்கியத்தில் ஒரு தொய்வு விழுந்தது. அதுவரை பிரபலமாக இருந்த எழுத்தாளர்களின் புதியபடைப்புகள் பெரியதாக வரவில்லை. வழக்கமான நீதி சொல்லும் பாரம்பரிய கதைகள் மட்டும் வந்துகொண்டிருந்தன. தொலைக்காட்சிகள் வீட்டுக்குவீடு வரத்தொடங்கின காலகட்டமும் அதுதான். ஆங்கிலவழிக்கல்வியின் பக்கம் மக்கள் அதிகமாகத் திரும்பியதும் அப்போதுதான்.

விளைவு, வாசிப்பில் தேக்கம். தொலைக்காட்சியினால் பெரியவர்களிடமும், பாடமுறையில் ஏற்பட்ட மாற்றத்தினால் பிள்ளைகளிடமும் வாசிப்பில் தேக்கம் ஏற்படத்தொடங்கியது.

மறுமலர்ச்சி

இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின் பாரதி புத்தகாலயம், புக்ஸ் பார் சில்ட்ரன் என்றும் நிறுவனத்தின் மூலம் குழந்தைகளுக்கான நூல்களை வெளியிடத்தொடங்கியது நல்ல தொடக்கம். பிறமொழிகளில் இருந்தும் நல்ல பல நூல்களை தமிழுக்கு கொண்டுவரத்தொடங்கியதும் சிறப்பான முயற்சி.

அதன் பின் சில ஆண்டுகளிலேயே சிறார் இலக்கிய உலகம் சூடுபிடிக்கத்தொடங்கியது. நிறையபேர் எழுதத்தொடங்கினர். பல பதிப்பகங்களும் வந்தன. சந்தைக்கும் புதிதுபுதிதாக பல நூல்கள் வரத்தொடங்கின. அவற்றில் எத்தனை சிறப்பானவை என்பது பற்றி நாம் இங்கே பேசாமல் இருப்பது நல்லது என்றே எண்ணுகிறேன்.

முற்போக்காளர்களின் தேவை

இன்றைய காலகட்டம் என்பது எவ்வளவு நெருக்கடியானது என்பதை நாம் அறிவோம். மதவாதிகளும் சாதியவாதிகளும் அரசியல் அதிகாரம் பெற்று வளர்ந்து வரும் காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த சிந்தனையுடனேயே தான் இலக்கியத்தின் போக்கினையும் அணுகவேண்டியதிருக்கிறது. அதிலும் குறிப்பாக, சிறார் இலக்கியத்தை கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடனே பார்க்கவேண்டிய தேவை உள்ளது.

இவ்விஷயத்தில் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் இடதுசாரிகளுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பும் அக்கரையும் எழவேண்டும். ஏனெனில் இன்றைய சிறுவர்கள் தான் நாளைய இளைஞர்களாக வருவார்கள். சிறுவர்களாக இருப்பவர்களை நாம் கண்டுகொள்ளாமல் போகும்போது, அவர்கள் இலகுவாக அடிப்படைவாதிகளில் செயல்களினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் பக்கம் சென்றுவிடுகின்றனர். இலவசமாக தற்காப்பு கலைகள் சொல்லிக்கொடுக்கிறோம்; சிலம்பம் சொல்லித்தருகிறோம்; உடற்பயிற்சி சொல்லித்தருகிறோம்; யோகா சொல்லித்தருகிறோம், நல்லொழுக்கம் கற்றுத்தருகிறோம் என்று ஜெபக்கூட்டங்களுக்கும் மார்க்க வழி என்று என்று பிள்ளைகளை பள்ளிக்குச் சென்றே பிடித்துக்கொண்டு போய்விடுகின்றனர்.  ஜெபமும்  தொழுகையும் சொல்லிக்கொடுக்கிறோம் என தொடர் வகுப்புகளின் மூலம் அவர்களின் மூளை மழுங்கடிக்கப்படுகிறது.

அப்போதெல்லாம் விட்டுவிட்டு, அவர்கள் வளர்ந்து இளைஞர்களானதும் அவர்களிடம் சமதர்மக் கொள்கையைப் பேசியோ, முற்போக்கு முகாமுக்கு வா என்று அழைப்பதிலோ துளியும் பயனில்லை என்பதை உணரவேண்டும்.

கூடவே இங்கே சிறுவர் இலக்கியம் எப்படி இருக்கிறது என்பதையும் உற்றுநோக்கவேண்டும். பிரபலமான ஒரு எழுத்தாளர் எழுதும் சிறார் கதையில் ஒரு காகத்தின் பாத்திரம் வருகிறது. அது நல்ல காகம் என்று ஆசிரியர் எழுதுகிறார். ஓவியர் அதற்கு படம் போடுகிறார் எப்படி தெரியுமா?

நெற்றி நிறைய விபூதி பட்டை அடித்து, ருத்திராட்ச கொட்டை மாலை போட்டு அமர்ந்திருக்கிறது அந்த ‘நல்ல’காகம். – இக்காட்சியைப் பார்க்கும் ஒரு குழந்தையின் மனதில் என்ன பதிவாகும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பட்டை அடித்து, ருத்திராட்சம் அணிந்தவர்கள்தான் நல்லவர்கள் என்ற சித்திரம் மனதில் பதிவாகாதா? இதே போல, வேறு சில நூல்களிலும் பட்டை போட்ட பூனை, நரி போன்ற பல விலங்குகளின் சித்திரங்களை பார்த்தும் அதிர்ச்சியடைந்தேன்.

சாமி கும்பிடுவது, அதன் வழி ஏற்றதாழ்வுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மறைமுக உரைப்பது, உழைப்பை மலினப்படுத்தி மட்டம் தட்டுவது, லஞ்சம் கொடுத்து தப்பித்துக்கொள்வது போன்ற விஷயங்களை உள்ளடக்கி அறமோ, விழுமியங்களோ எதுவும் இல்லாமல் பல படைப்புகள் எழுதப்பட்டு வருகின்றன. இவைபோன்ற படைப்புக்களை கண்டிக்கவேண்டிய முற்போக்கு அமைப்புகள் சிறந்த சிறுவர் இலக்கிய விருதுகள் கொடுத்து, இப்படியான படைப்புகளை ஊக்குவிக்கும் கொடுமைகளும் இங்கே அடிக்கடி நடந்து வருகின்றன.

பல சிறார் கதைகளில் ஆங்கிலக்கலப்பு என்பது மிதமிஞ்சி எழுதப்படுகின்றன. கூடவே உருவக்கேலி செய்வதும் தவறில்லை என்ற போக்கு சிறார்களுக்கான எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன. அரிதாக சில நல்ல படைப்புகள் வருகின்றன. ஆனால் அவையும் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுகின்றன.

சிறார் இலக்கிய உலக்கில் இன்றைய காலம் என்பது கொஞ்சம் சவாலானது. ஆம்! இங்கே சிறார் நூல்களை வாங்குபவர் வேறு; வாசிப்பவர் வேறு. அதனால் இரு தரப்பினரையும் திருப்தி படுத்தவேண்டிய தேவை, சிறார் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தினருக்கும் உள்ளது. இதில் பெற்றோரை திருப்திப்படுத்தும் பணியை மட்டும் செய்தால் போதும், புத்தகங்கள் விற்றுவிடும் என்று சிலர் எண்ணுகின்றனர். விற்பனை எண்ணிக்கையும், சுய விளம்பரமும் தற்காலிக வெற்றிகளே. வாசகர்களை சென்று அடையாத எந்த படைப்பும் காலம் கடந்து நிற்காது என்பதை எழுத்தாளர்கள் உணரவேண்டும்.

பெற்றோரின் பங்கு

பொதுவாகவே குழந்தைகள் பெற்றோரை நகலெடுப்பதிலேயே ஆர்வமிக்கவர்களாக இருப்பர். எனவே பெற்றோர்கள் வாசிப்பதில் ஆர்வமிக்கவர்களாக இருந்தாலே பிள்ளைகளும் அவர்களின் அடியெற்றிவருவர். இல்லையெனில் நூல் வாசிப்பு என்பது ஏதோ தண்டனை போல என பல பிள்ளைகள் எண்ணுகின்றனர். “அவங்க எல்லாம் டிவி, மொபைல்னு பார்க்குறாங்க. எங்களை மட்டும் படி படின்னு சொன்னா அது எப்படி மாமா?” என்று என்னிடம் கேள்விகேட்ட குழந்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி இருக்கிறேன்.

குறிப்பிட்ட நேரத்தை அதை வாசிப்புக்கான நேரம் என அறிவித்து ஒதுக்கி, குடும்பமாக உட்கார்ந்து புத்தகவாசிப்பில் ஈடுபடலாம். தொடக்கத்தில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட்டாலும் நாளடைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பது கண்கூடு.

கதைசொல்லிகளாக..

அதுபோலவே, குழந்தைகளுக்கு பெற்றோர்களே கதைசொல்லிகளாக மாறவேண்டும். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு அவர்தம் பெற்றோர் கதை சொல்லும்போது, நேரடியாக குழந்தைகளின் உணர்வு அறிந்து கதை சொல்லமுடியும். அப்படியே அவர்களை வாசிப்பின் பக்கம் திருப்புவதும் இயல்பாக நடந்துவிடும். ஆனால் இங்கே கதைசொல்லிகள் என்போரிடம் குழந்தைகளை அனுப்பிவிட்டு, பெற்றோர் நிம்மதி அடைந்துவிடுகின்றனர். இப்பழக்கம் நல்லதல்ல. குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான உறவு பலப்படுவதற்கும் குழந்தைகளிடம் பாடம் தவிர்த்த உரையாடல் நிகழ்த்துவதற்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு கதை சொல்லும் நேரம் தான். அதை வீணாக்குகிறோம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டும். என்றோ ஒருநாள் ஒரு மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக கதைசொல்லிகள் நிகழ்வுகளுக்கு அனுப்பலாம். தவறில்லைதான். இப்பணியை பெற்றோர் செய்வதே சிறந்தது.

சமூகத்தின் பால் அக்கறையும் சக மனிதர்களின் மீது நன்மதிப்புக் கொண்ட பிள்ளைகளாகவும் சுயசிந்தனையாளராகவும் குழந்தைகள் வளரவேண்டும் என்றால் அவர்களுக்கு நூல் வாசிப்பை அறிமுகப்படுத்துவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அப்படி அவர்கள் வாங்கிக்கொடுக்கும் நூல்கள் நல்ல கருத்துக்களை பேசுபவையாக இருக்கவேண்டும். அவற்றை உறுதி படுத்த முற்போக்கு அமைப்புகள் நல்ல நூல்களை கொண்டாடி மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை இன்னும் தீவிரமாக செய்யவேண்டும் என்பதே இப்போதைய எனது ஆசை!

(2021 நவம்பர் மாத செம்மலர் இதழுக்காக எழுத்தப்பட்ட கட்டுரையின் முழு வடிவம்!)

This entry was posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *