மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 8]

பள்ளியில் வந்து இறங்கியதும், நேராகப் பூஜாவின் வகுப்பறைக்குச் சென்றாள் ஷாலு. அவளது இருக்கை காலியாக இருந்தது. யாரிடமும் பேசாமல் தன்னுடைய வகுப்பறையில் வந்து அமர்ந்து கொண்டாள். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தாலும் ஷாலுவின் கவனம் அதில் பதியவே இல்லை. பூஜா அமரவேண்டிய இடம் காலியாக இருப்பதையே நினைத்துக் கொண்டிருந்தாள். முதல்நாள் பயந்த அவளது முகம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.

அவள் இல்லாத வெற்றிடம் மனதை சங்கடப்படுத்தியது. யாரிடம் விசாரிப்பது என்றும் தெரியவில்லை. பூஜாவின் வீட்டிற்கு அருகில் இவள் மட்டும்தான் இருப்பவள். இவளுக்கே விபரம் தெரியாதபோது, வகுப்பறையில் வேறு யாருக்கு என்ன தெரிந்துவிடப்போகிறது.

இனிமேல் அவளைப் பள்ளிக்கூடத்துக்கே அனுப்பாமல் இருந்துவிட்டால்… நினைத்துப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. வயிற்றைப் பிசைவது போல… என்னவோ செய்தது. ஆசிரியர் நடத்தும் பாடத்தில் இவளது கவனம் செல்லவே இல்லை. இவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே இண்டர்வெல் பெல் அடித்தது. ஆசிரியர் வெளியேறும் வரை காத்திருந்துவிட்டு, மரப்பாச்சியையும் தூக்கிக்கொண்டு, வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள்.

எதிரே பூஜா இவளைத்தேடி வந்துகொண்டிருந்தாள். பூஜாவைப் பார்த்ததும் ஷாலுவிற்கு உற்சாகம் பொங்கியது. ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டாள்.

“ஏண்டி.. வேன்ல வரல…”

“நைட்டே மாமா வீட்டுக்குப் போயிட்டோம்டி.. அங்கே இருந்து அப்பாவோட பைக்கில் ஸ்கூலுக்கு வந்துட்டேன். அதனாலதான் வேனில் வரலை”

“அட.. ஆமால்ல… மரப்பாச்சி சொல்லிச்சு. நான் தான் மறந்துட்டேன். “

“ஏய்… சாரிடி… மாமா வீட்டுக்குப் போற அவசரத்துல மரப்பாச்சியை மறந்து, விட்டுட்டுப் போயிட்டேன்.” என்றாள் பூஜா.

“பரவாயில்லைடி. அதுவே வீட்டுக்கு வந்திடுச்சு. சரி வா.. கிரவுண்ட் பக்கம் போகலாம்” என்றாள் ஷாலு.

இருவரும் மைதானத்திற்கு ஓடினர். அங்கே ஒரு பக்கம் சிலர் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் கோகோவும், மற்றொரு பக்கம் கபடியும் விளையாடிக் கொண்டிருந்தனர். கொஞ்ச தூரம் நடந்து மைதானத்தின் ஓரமாக இருந்த அந்த வேப்ப மரத்தினடியில் ஒதுங்கினர்.

“ம்.. சொல்லுடி..” என்றாள் ஷாலு.

“மாமா வீட்டுக்குப்போனோமா… அத்தை, அம்மா, அப்பா, மாமான்னு எல்லோரும் கலந்து பேசினாங்க. அந்தத் தாத்தா சொன்னது மாதிரி, வீட்டுக்குள்ள வச்சு எல்லாம் பூட்டலை. திட்டலை. அம்மாட்ட எதையும் மறைக்காம சொல்லனும் சொன்னாங்க. இனி அந்த வீடு வேணாம்னு பேசிகிட்டாங்க. சீக்கிரமே வேற வீடு மாறிடுவோம். அதுவரை மாமா வீட்டுல இருந்துதான் ஸ்கூலுக்கு வருவேன்”

“அதுவும் நல்லதுதான். அந்தக் கிழவன் மூஞ்சியில இனி விழிக்கவே வேணாம்” என்று சொன்னது மரப்பாச்சி.

“நம்ம மரப்பாச்சி, என்ன செஞ்சிருக்கு தெரியுமா..? அந்தத் தாத்தாவுக்குத் தண்டனை கொடுத்துட்டு வந்திருக்கு” என்று சிரித்தாள் ஷாலு.

“என்னது தண்டனையா… என்ன பண்ணினே, எங்கிட்டேயும் சொல்லேன்” என்று மரப்பாச்சியிடம் கேட்டாள் பூஜா. அதுவும் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கம் தனது தோழிகளுடன் மைதானத்திற்குள் வந்தாள் நேத்ரா.

ஷாலுவின் வகுப்பில் இருப்பவள். நன்றாகப் படிக்கக் கூடியவளாக இருந்தாலும் இயல்பிலேயே சேட்டை குணம் கொண்டவள். அவளுக்கு எப்போதுமே தான்மட்டும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டு. தனக்குப் போட்டியாக வகுப்பிலேயே ஷாலு மட்டும் இருப்பதாக நம்பினாள். ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் எப்போதுமே இருவருக்குமிடையில் கடும்போட்டி நிலவும். அதனாலேயே இவளுக்கும் ஷாலுவிற்கும் ஆகாது.

பூஜாவையும் ஷாலுவையும் அருகில் இருந்த தோழிகளிடம் சுட்டிக்காட்டினாள் நேத்ரா.

“ஏய்… அங்க பாருங்கடி.. ஷாலினியும், பூஜாவும் அங்க தனியா நின்னு என்னடி பண்ணிகிட்டு இருக்காளுங்க…”

“எனக்கென்னடி தெரியும். நானும் இங்கே தானே இருக்கேன்.” என்றாள் மஹா.

“ஒருவேள செல்போன் எடுத்துகிட்டு வந்திருக்காளோ…?”

“அதையேன் முகத்துக்கு நேர பிடிச்சு பேசிக்கிட்டு இருக்கா… காதுல வச்சுதானே பேசனும்” என்று கேட்டாள் சம்யுக்தா.

“வீடியோ காலாக இருக்கும்டி.. வாங்க அவ கிட்டப்போய்ப் பார்க்கலாம்”

“வீடியோ காலா…” நேத்ரா சொன்னதைக் கேட்டதும் தோழிகள் எல்லோருக்கும் ஆர்வம் அதிகமானது. ஷாலுவும் பூஜாவும் அறியா வண்ணம் எல்லோரும் மெதுவாக அவர்களைப் பின் பக்கமாக நெருங்கினார்கள். இவர்கள் வருவது தெரியாமல், இருவரும் மரப்பாச்சியிடம் பேசிக்கொண்டிருந்தனர். செல்போனாக இருக்கும் என நினைத்துக் கொண்டு, கிட்ட வந்து பார்த்த எல்லோருக்கும் புஸ்ஸென்று போனது.

“ஏய்… இவங்க ஏதோ பொம்மை மாதிரி எதையோ வச்சி பேசிக்கிட்டு இருக்காடி…”

“இது மர பொம்மைடி” என்றால் சம்யுக்தா.

“கவுன் எல்லாம் மாட்டி விட்டு, வித்தியாசமா இருக்கே… கொடு பார்ப்போம்” என்று ஷாலுவின் கையில் இருந்து, மரப்பாச்சியைப் பிடுங்கிக்கொண்டாள் நேத்ரா.

“மர பொம்மை மாதிரி இருந்தாலும் இது ரப்பர் பொம்மை போலச் சாஃப்டா இருக்குடி..” என்று நேத்ரா சொன்னதும், ஆளாளுக்கு அதைக் கையில் வாங்கித்தடவிப் பார்த்தனர்.

“ஆமாண்டி…”

“கொடு நான் பார்க்கிறேன்… அட! ஆமாண்டி”

“குடுங்கடி… அதை…” என்று அவர்களின் கையில் இருந்து, மரப்பாச்சியைப் பிடுங்கிக்கொண்டாள் ஷாலு.

“இந்தப் பொம்மையை வச்சுகிட்டு, இங்க என்னடி செஞ்சுகிட்டு இருக்கீங்க..?”

“அது என்னோட தனிப்பட்ட விஷயம். எங்க மூனு பேருக்குள்ள இருக்கிறது… நீங்க போங்கடி….” என்று அவர்களை விரட்டியடித்தாள்.

“உங்க மூனு பேருக்குள்ளயா… இங்க நீங்க ரெண்டுபேர் மட்டும் தானடி நிக்கிறீங்க…” என்று குழப்பத்துடன் கேட்டாள் நேத்ரா.

“இதோ இந்த மரப்பாச்சியும் சேர்த்தா… மூனு பேர் இருக்கோமே…”

“என்னது மரப்பாச்சியா… ஓ… அந்தப் பொம்மையா! ஏண்டி அது ஒரு மர பொம்மைடி… அதையும் மனுஷங்க மாதிரியே ட்ரீட் பண்ணி, மூணுபேருன்னு சொல்லுற..” என்று கேட்டாள் ஷிவானி.

“அது அப்படித்தான்…”

“ஓ…! அப்படியா… அப்ப அதை எங்ககிட்ட கொடு. அதுல என்ன இருக்குன்னு பார்த்திடலாம்” என்று ஷாலுவின் கையில் இருந்த மரப்பாச்சியைப் பிடிங்கிக்கொண்டு, மைதானத்தின் அந்தபக்கம் பார்த்து நோக்கி ஓடினாள் நேத்ரா. அவள் பின்னாடியே மற்றவர்களும் ஓடினர்.

“ஏய்… அதைக்கொடுத்துடுடி…” என்று ஷாலுவும் பூஜாவும் துரத்தினார்கள்.

“லஞ்ச் பிரேக் வரைக்கும் எங்க கிட்டயே இருக்கட்டும். போடி…” என்று ஓடிக்கொண்டே சொன்னாள் நேத்ரா.

பின்னாடியே துரத்திக்கொண்டு இருவரும் ஓட, வகுப்புக்கு திரும்பும் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது. “இனி துரத்திப்பிடிக்க முடியாதுடி. விடு. லஞ்ச் டயத்துல மரப்பாச்சியை வாங்கிக் கொள்ளலாம்” என்று நின்றாள் பூஜா. ஷாலுவிற்கும் அது சரியெனப்பட்டது. ”சரி வாடி.. கிளாஸுக்குப் போயிடலாம்” என்றபடியே வகுப்பு நோக்கி திரும்பினார்.

மணிச்சத்தம் நேத்ரா குழுவினருக்கும் கேட்டது.

“ஏய்… பெல் அடிச்சுட்டாங்கடி… அடுத்து மேக்ஸ் பீரியட். லேட்டா போனால்… தொலைஞ்சோம். கிளாஸுக்கு ஓடுங்கடி” என்று ஷிவானி சொன்னாள். “ஏண்டி ஓடனும் நடந்தே போகலாம்.” என்று சொன்னாள் நேத்ரா, தன் கையில் இருந்த மரப்பாச்சியைப் பார்த்தாள். அது இவளைப் பார்த்துப் புன்னகை புரிவது போல இருந்தது. குழம்பிப்போய், திரும்பவும் கவனித்துப் பார்க்க நினைக்கும் நேரத்தில், அவள் கைபிடியில் இருந்து, அது நழுவி கீழே விழுந்தது. அந்த நேரம் பார்த்து, காற்று வீச, காற்றில் பறப்பது போல… சுற்றிச் சுற்றி பறந்து ஓடத்தொடங்கியது மரப்பாச்சி.

“ஏய்… அது காத்துல பறக்குது பிடிங்கடி…” என்று கத்தினாள் நேத்ரா. ஆனால் அவளது தோழிகள் வகுப்பறைக்குச் செல்லும் ஆர்வத்தில் சில அடிகள் முன்னே போய்க்கொண்டிருந்தனர். அவர்கள் சுதாரித்து, ஓடிவரும் முன்னே… மரப்பாச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினாள் நேத்ரா.

கோகோ விளையாடிக் கொண்டிருந்தவர்களின் கூட்டத்தினுள் புகுந்தது மரப்பாச்சி. அதை மட்டுமே குறிவைத்து ஓடிய நேத்ராவிற்கு அங்கே விளையாடிக் கொண்டிருந்தவர்களின் மேல் கவனம் செல்லவில்லை. வரிசையாக உட்கார்ந்திருந்தவர்களைத் தொடுவதும், எதிரே ஓடிவருபவர்கள் மீது மோதி கீழே விழுந்தாள். இதற்கிடையில் மரப்பாச்சியை நேத்ரா எட்டிப் பிடிக்க, இவள் மேல் சிலர் தடுக்கி விழுந்தனர். அங்கே ஏற்படுத்திய குழப்பங்களினால் இவளுக்குச் சரியான திட்டு விழுந்தது. எல்லோரிடமும் “சாரிப்பா…” “சாரிப்பா” என்று மன்னிப்புக் கேட்டுவிட்டு, அக்கூட்டத்தில் இருந்து வெளியே வந்தாள். தோழிகள் சூழ்ந்துகொண்டனர்.

“ஏண்டி, பார்க்க நல்லாத்தான இருக்கு. ஆனா காத்துல பஞ்சு மாதிரி பறந்துடுச்சே… நல்ல வேள க்ரவுன்ட்ல பீ.ட்டி மாஸ்டர் இல்லை.” என்றாள் மஹா.

“ஆமாண்டி.. வாடி கிளாஸுக்குப் போயிடலாம்” என்றாள் ஷிவானி. எல்லோரும் வகுப்பறையை நோக்கி ஓடத்தொடங்கினர். நேத்ராவிற்கும் கீழே உருண்டு விழுந்ததில் கையில் இரண்டு இடங்களில் சிராய்ப்புகள். எரிச்சலாக இருந்தது. ‘ஊபூ…ஊபூ…” ஊதி விட்டுக்கொண்டாலும் எரிச்சல் குறையவில்லை.

நடந்த சம்பவம் நேத்ராவிற்குக் குழப்பத்தை உண்டுபண்ணியது. தன் கையில் இருந்து, எதிர்பாராமல் மரப்பாச்சி நழுவி விழுந்ததா… அல்லது பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஓடியதா? என்ற சந்தேகத்துடனே வகுப்பறை நோக்கி மற்றவர்களுடன் வேகவேகமாக நடந்தாள்.

கரும்பலகையில் இரண்டாவது கணக்கு எழுதும்போது, நேத்ராவும் மற்ற தோழிகளும் வகுப்பறை வாசலில் நின்றார்கள். எல்லோருக்கும் மூச்சிரைத்தது.

“உங்களுக்கு மட்டும் இண்டர்வெல் எவ்வளவு நேரம்டி… ஏன் லேட்டு?” என்று கணக்கு ஆசிரியர் கேட்டார்.

எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று நேத்ராவின் மூளை யோசித்தாலும், “விளையாடிக்கிட்டு இருந்ததுல லேட் ஆகிடுச்சு மேடம்” என்று உண்மையை உளறிவிட்டாள். இவள் ஏன் இப்படிப் பேசுகிறாள் என்று கூடவந்தவர்கள் திகைத்துப் போய்ப் பார்த்தனர்.

அவர்களது திகைப்பைப் பார்த்ததும், ஷாலுவிற்குச் சிரிப்பு வந்தது. மரப்பாச்சி யாரிடம் இருந்தாலும், அவர்களால் பொய் பேசமுடியாமல் போய்விடும் என்பது ஷாலுவிற்கு மட்டும் தானே தெரியும். அதனால் அவர்கள் பார்த்துவிடாமல், அவர்கள் படும் அவஸ்தையை நினைத்து, தலையைக் குனிந்து கொண்டு சிரித்தாள்.

“ஓ…ஹோ..! விளையாடவா ஸ்கூலுக்கு வர்றீங்க..”

பிள்ளைகள் தயங்கியபடியே வகுப்பறைக்கு வெளியே நிற்க… “வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்களா… உள்ள வாங்கடி” என்று கத்தினார் ஆசிரியை.

“எழுதிப்போடுற இந்தக் கணக்கை நீங்க எல்லோரும் நாளைக்கு இம்போஸிசனா இருபத்தஞ்சு வாட்டி எழுதிட்டு வரனும்.” என்று சொல்லிவிட்டு, எழுதிக் கொண்டிருந்த கணக்கைத் தொடர்ந்து எழுதத் தொடங்கினார்.

(box news)

கோகோ ஆட்டம் : இதனைப் பாரம்பரியமாக நமது மண்ணில், பகுதிக்கு ஏற்றவாறு இஷ்டப்படி விளையாடிக் கொண்டிருந்தனர். புனேவில் உள்ள டெக்கான் ஜிம்கானா, கோக்கோ ஆட்ட விதிகளை 1914ஆம் ஆண்டில் உருவாக்கியது. அதில் சிலமாற்றங்கள் 1924ஆம் ஆண்டுச் செய்யப்பட்டன. அதன் பின்தான் கோகோ ஆட்டம் நாடு முழுவதும் முறையான விதிகளின்கீழ் ஆடப்பட்டது. இரு குழுக்கள் ஆடும் இதில் 12 பேரைக் கொண்டது ஒரு குழு. இதில் ஒன்பது பேரே ஆட்டத்தில் பங்குபெறுவர். மற்ற விபரங்களை உங்க ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொள்க.

*************************************************

This entry was posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 2 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.