மன நிறைவு கொடுத்த ஈரோடு பயணம்

ஓர் உரையாடல் என்னென்ன மாற்றங்களைச் செய்யும் என்பதை அறிந்தவன் நான். என்னுள் ஏற்பட்ட பல மாற்றங்களும் உரையாடல் வழியே நிகழ்ந்தவைதான்.

உரையாடல்களின் பலம் அறிந்ததால் தான் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் கலந்துரையாடல் அவசியம் என்று முடிவுசெய்து கொண்டேன். இதன் பொருட்டே, 2014ஆம் ஆண்டில் ஆட்டிச நிலைக்குழந்தைகளில் முதல் பெற்றோர் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தேன். மிகச்சிறப்பாக நடந்த அந்த கூட்டத்தில் குழந்தைகளை கவனித்துக்கொள்ள, எங்கள் பண்புடன் இணைய இலக்கியக்குழுமத்தில் இருந்து பல தம்பிகள் தன்னார்வலர்களாக வந்திருந்தனர். அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு, முழுகவனத்துடன் உரையாடலில் பெற்றோர் பங்குபெற்றனர்.

தொடந்து சில கூட்டங்களை முன்னெடுத்தேன். பலரையும் இதுபோலக் கூட்டங்களை ஒருங்கிணைக்க வலியுறுத்தினேன். ஆர்வம் உடைய பலரும் பல ஊர்களில் கூட்டங்கள் நடத்தத்தொடங்கினார்கள்.

சிறப்புக்குழந்தைகளில் அப்பாக்களுக்கு எனத் தனியாக நான் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய அப்பாக்களிடம் அன்றே சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. பிள்ளை வளர்ப்பு இருவரின் பொறுப்பு என்று உணர்ந்து, அம்மாக்களின் மேல் ஏற்றி வைக்கப்பட்ட சுமைகளைக் குறைக்க முன்வந்தனர். நன்றி கூறி, பல சகோதரிகள் அனுப்பிய செய்திகள் என்னிடம் சேமிப்பில் உள்ளன. இவையே என்னை இன்றும் உற்சாகமாகச் செயல்படவைப்பவையாக உள்ளன.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி, ஈரோடு சென்றிருந்தேன். தங்களது சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர்களிடமும், அப்பள்ளி ஆசிரியர்களிடமும் உரை நிகழ்ந்த வரும்படி, அப்பள்ளியில் தாளாளர் ஜெயபாரதி அம்மா அழைத்திருந்தார். (தங்கை
பாரதி கோபால் வழி- அவருக்கும் நன்றி)

ஜெயபாரதி அம்மாவின் தொடக்க உரை

புதியதாக வந்த எனது சிறுவர் நாடோடிக்கதைகள் நூலான, தாத்தா சட்டையை அங்கேயே வெளியிட்டு விடலாம் என்று தீர்மானித்தேன்.

முதல் நிகழ்வாக நூல்வெளியீடு சிறப்பாக நிகழ்ந்தேறியது.

பள்ளியில் முதல்வர் எஸ். சுபா வரவேற்புரை நிகழ்த்தினார். ஜெயபாரதி அம்மா நூல்களை வெளியிட, முதல் மூன்று பிரதிகளை அப்பள்ளியின் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

அதன் பின் பெற்றோருக்கான பயிலரங்கு தொடங்கியது. ஒரு மணி நேரம் என்று முடிவு செய்து, பவர் பாயிண்டில் தயாரித்து வைத்திருந்த ஒளிச்சுவடியை (presentation) ஓடவிட்டு, உரையாடத்தொடங்கினேன். ஆனால் நினைத்தை விட அதிக நேரம் அந்த வகுப்புச் சென்றது. ஆம்! அந்த நிகழ்வு மட்டும் இரண்டரை மணிநேரத்திற்கும் அதிகமாகச் சென்றது. அந்நிகழ்வில் பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய பல அடிப்படையான ஆனால் முக்கியமான விஷயங்களை வலியுறுத்தினேன்.

ஆட்டிசம் மருந்துகளினால் குணமாக்கக்கூடியது அல்ல; அடையாள அட்டையைப் பெறுவதின் நன்மைகள்; 18 வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு, பெற்றோர் தங்களைக் காப்பாளராகப் பதிவு செய்யவேண்டியது தேவை என்ன? நம்மிடமிருக்கும் சொத்துக்கள் அவர்களுக்குச் சரியானபடிச் சென்று சேர நாம் செய்ய வேண்டியதென்ன? இது பற்றியெல்லாம் நம் சட்டம் என்ன சொல்கிறது? இப்படியான பல்வேறு புள்ளிகளைத் தொட்டபடி நீண்ட அவ்வுரையின் முடிவில் செறிவான கேள்வி பதில் அமர்வும் நிகழ்ந்தது.

பெரியார் – அண்ணா நினைவகம்

மதிய உணவுக்குப் பின் பெரியார் நினைவு இல்லம் சென்று வந்தேன். பெரியாரின் இல்லத்தில் அறிஞர் அண்ணாவும் அங்கே சில காலம் தங்கி, பத்திரிகையில் பணியாற்றியதால் அந்த அறையை அண்ணா நினைவகமாக பராமரிக்கின்றனர்.

அதன் பின் அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கான வகுப்பு. அவர்களுக்கு எனத் தனியாகத் தயாரித்திருந்த ஒளிச்சுவடியை ஓடவிட்டு உரையாடினேன். இதுவும் சுமார் 3 மணி நேரம் நிகழ்ந்தது.


உண்மையில் இந்தப் பட்டறையில் கலந்துகொண்ட பெற்றோரும் ஆசிரியர்களும் சிறப்பாக உள்வாங்கிக்கொண்டனர் என்பதை அவர்களின் கேள்விகளில் இருந்து தெரிந்துகொண்டேன். இரவு ஊருக்குக் கிளம்பும் போது, ஜெயபாரதி அம்மாவிடம், நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடம் கருத்துக்களைப் பெற முடிந்தால் வாங்கி அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு வந்திருந்தேன். கண்டிப்பாக செய்கிறேன் என்று ஜெயபாரதி அம்மா கூறினார்.

சில நாட்களுக்கு முன் பெற்றோர்+ ஆசிரியர் இருதரப்பிலிருந்தும் அவர்கள் எழுதி அனுப்பி இருந்த கருத்துக்களைப் பெற்று கூரியர் செய்திருந்தனர்.
அவற்றைப் படிக்கப் படிக்கக் கண்கள் கசிந்தன. இரு தரப்பில் இருந்தும் தாங்கள் கற்றுக்கொண்ட புதிய விஷயங்களையும் குழந்தைகளிடம் தாங்கள் நடந்துகொண்ட விதம்/ தவற்றை உணர்ந்துகொண்டோம் என்றும் இனி மாற்றிக்கொள்வோம் என்றும் எழுதி இருந்ததைப் பார்த்ததும் உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. மன நிறைவைக் கொடுத்த பயணமாக இப்பயணம் அமைந்தது.

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 3 months old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.