சினேகிதனின் அப்பா

அப்போது நான் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருந்த அரசியல் வார இதழின் மும்பை செய்தியாளன். அப்படியே அங்கே வந்துகொண்டிருந்த தமிழ்ப் பத்திரிக்கைகளில் கதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவன் பழக்கமானான். அவனும் மும்பை நாளிதழ்களில் கதை,கவிதை எழுதிக்கொண்டிருந்தவன். பத்திரிக்கை வாயிலாக தொலைபேசி எண் கிடைத்து, கிங்சர்கிளில் உள்ள பூங்காவில் ஒரு ஞாயிறு மதியம் சந்திப்பதென்று முடிவாகிறது.

அங்கே இருந்தவரை, ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களை ஏதேனும் ஒரு இடத்தில் சந்திப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு ஞாயிறு மகேஸ்வரி பூங்காவுக்கு அருகில் காத்துக்கொண்டிருந்த அந்த இளைஞனை சந்தித்தேன். ஒல்லியான உருவம். கல்லூரி மாணவன் போன்ற தோற்றம். என்னைவிட சின்னபையனாக இருந்தான். பேசப்பேச.. அவனுக்கும் எனக்கும் ஒரே பெயர் என்பது தெரியவந்தது.

வாங்க வீட்டுக்கு போகலாம் என்று அழைத்துப்போனான் இன்னொரு சந்திப்பில். நண்பனுடன் அவன் வீட்டுக்கு போய் இருந்தேன். மாகிம் ரயில் நிலையத்திலிருத்து நடந்து போகும் தூரம் தான் அவன் வீடு. அங்கே சாரம்(கைலி-லுங்கி) கட்டிய ஒரு மனிதரை பார்த்தேன். அவர் நண்பனின் அப்பா என்பது அவன் சொல்லி இருந்த அடையாளங்களில் தெரிந்தது. என்னை வீட்டினருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் இவன். வீட்டுக்குள் போனதும் யாரோ வந்து அழைக்க அவர்களிடம் பேசுவதற்கு சென்று விட்டான் நண்பன். அவரும் அழகான ஆங்கிலத்தில் பேச தொடங்கிவிட்டார்.

இரண்டுமூன்று நாட்களாய் சவரம் செய்யாத முகம், மேல் பட்டனை கழட்டி விட்டிருந்த சட்டை. கட்டம் போட்ட சாரம். அவரின் உருவத்திற்கும் அவர் பேசிய மொழிக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. மிகச்சாதரணமாக ஒரு மனிதரிடமிருந்து மிக அழகான ஆங்கிலம் உச்சரிப்பு சரளமாக வருவதைக்கண்டு கொஞ்சம் வியப்பு தான் மேலிட்டது எனக்கு. தயங்கித் தயங்கி அவரிடம் சொன்னேன், ’அப்பா.. எனக்கு இங்லீஸுல பேச வராது. நாம தமிழிலேயே பேசலாமேன்னு’, அவரும் சிரிச்சுகிட்டே தமிழில் பேசத்தொடங்கினார். இங்லீஸ் கத்துக்குங்கப்பா… வாழ்கையில ஒரு லாங்வேஜ் கத்துகிடுறது நல்லது என்றார். தமிழில் பேசிக்கொண்டிருந்தவர் கொஞ்ச நேரத்திலேயே அவரையுமறியாமல் ஆங்கிலத்துக்கு தாவிவிட்டார். 🙁 நான் அசடு வழிய சிரிச்சுகிட்டே உட்கார்ந்திருந்தேன்.
**
இன்னொரு சமயம் நண்பனைத்தேடி அவன் வீட்டுக்கு போய் இருந்தேன். அவன் வெளியே போய் இருந்தான். வரும் சமயம் தான் உட்காருங்க என்று உட்கார வைத்துவிட்டார்கள். அப்போதும் அவனின் அப்பாவிடம் பேசிக்கொண்டிருதேன். இம்முறை அவரின் தமிழிலேயே தான் பேசினார். வீட்டுக்குள் சென்று நண்பன் எழுதிய படைப்புக்களை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் காட்டினார். சின்னப்பையன் தான் சுமாரா எழுதுறான் என்றார். உள்ளுக்குள் ஒரு பெருமை இருந்தாலும், என்னப்பா.. இப்படியெல்லாமா எழுதுறது? ஜெயகாந்தன் மாதிரி எழுதவேணாம். நான் சொன்னா கேட்க மாட்டான் நீ சொல்லு என்ன? என்றார்.

**
ஒரு ஞாயிறு மதியம் அந்த நண்பனைப் பார்க்க போய் இருந்தேன். மதியம் அவன் வீட்டில் தான் சாப்பாடு. சாப்பிட்டு முடித்த பின், உட்காந்து பேசிக்கொண்டிருக்கும் போது தான் பார்த்தேன். சுவரில் ஒரு படம் வரைந்து ஒட்டப்பட்டிருந்தது. யார்ரா அது? என்று அவனிடம் கேட்டபோது அவன் சொன்னான் – அம்மாவை ஓவியமாக வரஞ்சு இருக்கேன் என்று. அடப்பாவி.. இது ஓவியம் மாதிரி இல்ல.. கார்டூன் மாதிரி இருக்கு.. பேசாம நீ கார்டூன் வரைய ஆரம்பி என்று சொன்னேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அவன் அப்பா உள்ளறைக்குச் சென்று ஒரு நோட்டை எடுத்து வந்து என்னிடம் நீட்டினார். இதுல நிறைய வரஞ்சு வச்சு இருக்கான் என்று. நண்பர் அவரை எரித்துவிடுவது போல பார்த்தான். அந்த நோட்டு முழுவதும் இவன் வரைந்து வைத்திருந்தது ஓவியங்கள் அல்ல.. கார்டூன்கள்.

கடைசி பக்கம் பாருப்பா.. என்றார் அப்பா.

பார்த்தேன். நண்பனின் அப்பா மாதிரியான தோன்றத்தில் ஒருவருடைய கார்டூன் அது. என்னையத்தான் இப்படி வரஞ்சு இருக்கான் என்று சிரித்தார். எத்தனை பேருக்கு இந்த சகிப்புத்தன்மை வரும். தன் பையன் தன்னை கேலிச்சித்திரமாக வரைந்து வைத்திருந்ததைப் பார்த்து சிரித்துக்கொண்டும், பெருமைப்படவும் எத்தனை பேரால் முடியும். அவருக்கு முடிந்தது. அவர் பையனை மிகவும் நேசித்தார். பெண்குழந்தைகளுக்கு பிறகு பிறந்த ஆண் மகன் என்பதால் இவன் மீது அவருக்கு பாசமும், கர்வமும் அதிகம். என்மீதும் மரியாதையான அன்பைச் செலுத்தினார் அவர்.

கேலிச்சித்திரங்களில் கவனம் செலுத்திய நண்பன், பின்னாளில் கார்டூன் படங்கள் மட்டும் போடத் தொடங்கினார். மும்பை தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார். பின்பு குமுதம் வார இதழின் மூலம் உலகம் அறிந்த ஒரு கார்டூனிஸ்ட்டாக மாறி இருக்கிறார் அந்த நண்பர் – கார்டூனிஸ்ட் பாலா தான் அவர்.
என் அப்பாவிடம் இருக்கும் பல குணங்களை நான் இவரிடம் கண்டிருக்கிறேன். அவரை ஒவ்வொரு முறையும் அப்பா என்று அழைக்கும் போதெல்லாம் அது வெறும் சத்தமாக வந்த சொல் அல்ல. என் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தை என்று பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

விபரம் புரியத்தொடங்கும் பதினைந்தாவது வயதில் என் அப்பா இறந்துபோனார். அவரின் நினைவுகள் எல்லாம் புகைமூட்டத்தின் நடுவே கொஞ்சமாய் தான் நினைவு இருக்கிறது. அப்பாவின் இடத்தில் இருந்து வளர்த்து எல்லாம் பெரிய அண்ணன் தான் என்பதால்.. அப்பா என்ற ஸ்தானத்தின் மீது எனக்கு எப்போதும் பாசமும், மரியாதையும் உண்டு. அதை அந்த பாலாவின் அப்பாவிடம் கண்டேன். குடும்பத்தின் மூத்தபிள்ளையாய் என்னை மதித்து பல முறை குடும்ப விஷயங்களை பகிர்ந்துகொண்டவர்கள் அவர்கள். பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் மணம் முடித்து, பேரன் பேத்திகளையும் கொஞ்சி மகிழ்ந்தவர்.

அந்த பாசம் காட்டிய அப்பா.. சமீபகாலமாய் கொஞ்சம் உடல் நலமில்லாமல் இருந்து வந்தார். நேற்று இரவு எட்டுமணியளவில் உயிர் பிரிந்தது என்ற துயரச்செய்தி கிடைத்தது. 🙁
அப்பாவை இழந்து பிரிவில் வாடும் நண்பனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட என்னால் சொல்ல முடியவில்லை. என் தகப்பனை இழந்து நிற்பது போன்ற உணர்வில் இருக்கும் நான் எப்படி அவர்களுக்கு ஆறுதல் சொல்லமுடியும். 🙁 🙁

This entry was posted in அஞ்சலி, அனுபவம், அப்பா, மனிதர்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

13 Responses to சினேகிதனின் அப்பா

  1. அப்பாவின் மரணம் என்பது எந்த வயதில் இருக்கும் மகனையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

    எனக்கு இந்த அனுபவம் 12 வயதிலேயே கடந்துவிட்டது.

    நண்பர் பாலாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

  2. ஹுஸைனம்மா says:

    ஆழ்ந்த வருத்தங்கள்.

  3. 🙁

    அன்னாரை இழந்து வாடும் நெஞ்சங்களுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

  4. //அப்பாவை இழந்து பிரிவில் வாடும் நண்பனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட என்னால் சொல்ல முடியவில்லை.//

    இதேத்தான் என்னுடைய நண்பனுக்கும் இரண்டு வாரம் முன்பு… போன் செய்து 10 நிமிடம் வார்த்தையே வராமல் திகைத்திருந்தேன்

    ஆழ்ந்த வருத்தங்கள் :((

  5. Mahalingam says:

    என் ஆழ்ந்த வருத்தங்கள். அஞ்சலிகள்.

  6. இரு சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தங்கள்.காலத்தின் கட்டாயம் மரணம்.அவர் ஒரு நல்ல தந்தையாக வாழ்ந்து இருகிறார்.இனி அவர் நம் நினைவில் வாழுவார்.எனக்கு பாலாவின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.(எப்பொழுதும் பாலா என்றாலே இந்தகவிதை தான் முன் நிற்கும்) திதி செய்ய மனமில்லை, மனதில் வாழ்கிறாள், அம்மா.(அப்பா)

  7. ஜெ. பாலா says:

    ஆழ்ந்த வருத்தங்கள்.. கார்டூன் பாலாவின் குடும்பத்தாருக்கு…

  8. இன்று காலையில் குளித்துவிட்டு வரும்போது என் அப்பாவின் வியர்வை படிந்த துண்டை எடுத்துத் துவட்டிக்கொண்டிருந்தபோது உணர்ந்தேன்… என் தகப்பன் எவ்வளவு ஆழமாக என்னுள் இறங்கி இருக்கிறார் என்று! நிச்சயம் ஒரு தகப்பனின் மறைவு மகனுக்குத் தாங்க இயலாததாய்த் தானிருக்கும்…

  9. என் ஆழ்ந்த வருத்தங்கள். அஞ்சலிகள்:(

    நானும் அப்பாவை 20 வயதில் இழந்தவன். அதன் வலி நன்றாக தெரியும்!

  10. 🙁 பாலாவை ஆறுதல் படுத்துங்கள் தல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.