உனக்கேன் இவ்வளவு அக்கறை..

ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகள் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன். தொடர்ந்து ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வுக்காக எழுதிக்கொண்டிருப்பேன் என்றாலும் இதுவொரு கமா தான்.

//..உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.. //பராசக்தி படத்திற்காக கலைஞர் மு.கருணாநிதி எழுதிய வசனம்.

மேற்கண்ட வசனம் அப்படியே எங்களுக்கும் பொருந்தும். தொடர்ந்து எழுதிவரும் ஆட்டிசம் குறித்த கட்டுரைகளுக்குப் பின் ஓர் உண்மை இருக்கிறது. உங்களில் பலர் எங்களது கனி அப்டேட்ஸ் வகை பதிவுகளில் வரும் செய்திகளில் ஒரு வித்யாசத்தை உணர்ந்திருக்கலாம் – மூன்றரை வயதுக் குழந்தையைப் பற்றி வருகின்ற குறிப்புகள் போலில்லையே, ஒன்னரை வயதில் செய்யக் கூடிய விஷயங்களாக அல்லவா இருக்கிறது என்று நினைத்திருக்கலாம்.

ஆம், உங்கள் யூகம் சரியே. எங்கள் மகன் கனிவமுதனுக்கு ASD எனப்படும் ஆட்டிசத்தின் வகைகளில் ஒன்றான.. PDD என்று அறிந்த போது முதலில் மிகவும் துவண்டுதான் போனோம். விழுவதல்ல வாழ்க்கை, மீண்டும் எழுவதுதான் என்று பலரும் சொல்லிக்கேட்டிருப்பதால், ஆட்டிசம் குறித்து, தேடத்தொடங்கினோம். எளியதமிழில் ஆட்டிசம் குறித்த கட்டுரைகள் ஏதும் இங்கே சரியாக இல்லை என்று படவே, நாங்கள் படிப்பதையும், பார்ப்பதையும், உணர்வதையும் எழுதுவது என்று தீர்மானித்து செயல்படத்தொடங்கினோம்.

இந்த கணக்கு நம்மூரில் வேறுபடலாம்.

கனிக்கு இப்பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட பின், சென்னை மட்டுமில்லாது, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று பல ஆட்டிசக்குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும், பல தெரபி நிலையங்களையும் பார்த்துவந்தேன். பலரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களை உள்வாங்கிய போது நிறைய விஷயங்களை உணர முடிந்தது. பலருக்கும் இப்படியான இன்னொருவரின் அனுபவங்கள் பாடமாக அமையும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, ஆட்டிசம் குறித்த இக்கட்டுரைகளை எழுதத்தொடங்கவேண்டும் என்று தீர்மானித்தேன்.

இப்படி ஒரு முடிவு எடுத்த உடனேயே சரியென ஒப்புதல் கொடுத்து, தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்த என் மனைவி லக்ஷ்மியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரின் தொடர் வற்புறுத்துதல் இல்லை என்றால்.. என்னை மாதிரியான ஒரு சோம்பேறி இவ்வளவு விசயங்களை எழுதி இருக்க முடியாது. தொடர்ந்து எழுதுவதை பகிர்ந்துகொண்ட இனைய நட்புகளுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒன்னரை வயதிலேயே கனிக்கு இப்பிரச்சனை இருப்பதைக் கண்டுகொண்ட உடன், உடனடியாக செயலில் இறங்கினோம். தொடர்ந்து பலதரப்பட்ட பயிற்சிகளை கொடுத்து வருகிறோம். இப்போதும் பயிற்சிகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. முன்னைக்கு இப்போது நல்ல முன்னேற்றங்களை அவனிடம் காணமுடிகிறது என்பது தெம்பூட்டும் நம்பிக்கை.

எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக தனிப்பட்ட முறையில் சுற்றுவட்டாரத்தில் சில குழந்தைகளுக்கு இப்பிரச்சனை இருப்பதை அறிந்து, வழிகாட்டி இருக்கிறோம். மேலும் ஆலோசனை கேட்டு கடிதங்கள் எழுதும் பல பெற்றோர்களுக்கும் உதவிக்கொண்டிருக்கிறேன். ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களில் அவா. ஆயிரம் பிட் நோட்டீஸ் அடித்து, விநியோகித்தோம். ஆனால்.. அது போதாது என்று தெரிந்த போது, சிறுநூலாக்கி கொண்டுவருவோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்டிசத்தின் பல்வேறு ஏரியாக்களையும் எழுத அதுவும் முக்கிய காரணமாயிற்று.

பொதுவாகவே ஏதேனும் ஒரு குறைபாடுள்ள குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் அதிகம் வெறுப்பது – பரிதாபப் பார்வைகளைத்தான். குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சமவாய்ப்பை உருவாக்கித் தருவது என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. ஆறுதலையும், பரிதாபத்தையும் அள்ளிச்சொரிவது அல்ல.

எனவே நண்பர்கள் யாரும் எனக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையோ, சோக ஸ்மைலிகளையோ இங்கே இடவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களால் ஆகக்கூடிய காரியம் ஒன்று உண்டெனில் அது, ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளைத்தொகுத்து வைத்திருக்கும்,

http://216.185.103.157/~balabhar/blog/?page_id=25

இந்தச்சுட்டியை பகிர்ந்து, விழிப்புணர்வுக்கு துணைநிற்பதைத்தவிர வேறெதும் இருக்க முடியாது.

பகிருங்கள்! தொடர்ந்து ஆட்டிசம் விழிப்புணர்வுக்கு தோள்கொடுங்கள்!!

ஆட்டிசம் தொடர்பாக தொடர்ந்து இயங்குவயதற்கு ஊக்கமும் உதவிகளையும் செய்துவரும் நண்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

தோழன்

பாலபாரதி

++++

 

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, மதியிறுக்கம் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to உனக்கேன் இவ்வளவு அக்கறை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.