மேன்மை இதழில் வெளியான நேர்காணல்

சிறார்களிடம் தொடர்ந்து உரையாடுவது காலத்தின் கட்டாயம்

யெஸ்.பாலபாரதி – தொடர்ச்சியாகச் சிறார் இலக்கியத்தில் இயங்கி வரும் இவர்,  ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ மற்றும் ‘புதையல் டைரி’ ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். தனது படைப்புகளில் கதை சொல்வதோடு நின்றுவிடாமல் சிறார்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் முன்னிறுத்துவதால், தனக்கென ஒரு தனித்த அடையாளத்தைப் பெற்றுள்ளார்.

பெற்றோரிடையே ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஆட்டிசம் – சில புரிதல்கள்’ என்ற கட்டுரை நூலையும், ‘சந்துருவுக்கு என்ன ஆச்சு? ‘ மற்றும்  ‘துலக்கம்’ ஆகிய புனைவுகளையும் எழுதியிருக்கிறார். மேலும் இவர் ‘சாமியாட்டம்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும்,  மூன்றாம் பாலினத்தவர் குறித்த  ‘அவன் –  அது = அவள்!’  என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

 

எழுத்துத்துறைக்குள் வந்த பின்னனி என்ன?

பின்னனி என்றெல்லாம் பெரியதாக ஏதும் இருப்பதாகச் சொல்லத் தெரியவில்லை. சின்ன வயதில் எனக்கு திக்குவாய்க் குறைபாடு இருந்தது. அதனால் பலராலும் கேலி, கிண்டலுக்கு ஆளாகித் தனிமைப்படுத்தப்பட்டேன். அப்படித்தான் வாசிப்புக்குள் வந்தேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, கோகுலம் சிறுவர் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த அழ.வள்ளியப்பா அதில் மாணவர் கிளப் ஒன்றை நடத்தினார். அந்த உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து, கூடவே குழந்தைப் பாடல் போன்ற ஒன்றையும் சேர்த்து அனுப்பி வைத்தேன். உறுப்பினர் அட்டையும், அப்படைப்பு பிரசூரமான இதழும் அஞ்சலில் வீட்டுக்கு வந்தபோது, படிக்கிற வயசுல என்ன எழுத்துவேண்டியிருக்குன்னு என் அப்பா அடி பின்னிவிட்டார். அதுக்கப்புறம் எழுதுறதை மறந்துட்டேன். என்னுடன் பிறந்தவர்கள் பத்துப்பேர். நான் 8-வது நபர். என் வீட்டில் அம்மா தொடங்கி, அண்ணன்கள், அக்காக்கள் எல்லோரும் படிப்பவர்கள். அவர்களிடமிருந்து எனக்கும் வாசிக்கும் பழக்கம் ஒட்டிக்கொண்டது. எழுதும் எண்ணமெல்லாம் திட்டமிட்டு வந்ததில்லை. வாசிப்பு மட்டும் எப்போதுமே தொடர்ந்தது. பின்னர் அறிவொளி இயக்கத்தில் சில காலம் பணியாற்றினேன். அச்சமயத்தில் அங்கே பல தோழர்கள் கவிதை எழுதிட்டு இருந்தாங்க. ஓர் அரங்கக் கவியரங்கத்தில் கவிதை வாசிப்பு நிகழ்ந்தது. தோழர்கள் என்னை வற்புறுத்தவே, அங்கேயே எழுதி வாசித்தேன். தொடர்ந்து வாலிபர் சங்கம், த.மு.எ.ச. தோழர்களின் ஊக்குவிப்பும், விமர்சனங்களும் என்னை அதிகம் எழுதச்செய்தன. இன்று எழுதும் பலரைப்போலவே நானும் தொடக்கத்தில் கவிதையில் தொடங்கி,  சிறுகதை, நாவல் என்று பயணித்து, தற்போது சிறுவர் இலக்கியத்தின் பக்கம் வந்திருக்கிறேன்.

பெரியவர்களுக்கான நாவல், சிறுகதைகள் எழுதிவந்த தாங்கள் இப்போது தொடர்ச்சியாக குழந்தைகள் இலக்கியத்தில் கவனம் செலுத்துவது எதனால்?

சிலகாலம் முன்பு, குழந்தை வளர்ப்பு தொடர்பான பத்திரிக்கை ஒன்றில் உதவியாசிரியராக பணிபுரிந்துகொண்டிருந்தேன். அந்தப் பத்திரிக்கையில் குழந்தைகளிடையே வாசிப்புப்பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறந்த நூல்களை அறிமுகம் செய்யலாம் என்ற முடிவு செய்யப்பட்டு, அப்பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. அதற்காக, சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட பல சிறார் நூல்களைப் படிக்கத்தொடங்கினேன். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அப்படைப்புகள் ஏனோ எனக்கு எனது பால்யத்தை நினைவூட்டவில்லை.  சிறுவயதில் என்னைக் கவர்ந்த வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா, கல்வி கோபாலகிருஷ்ணன், முல்லை தங்கராசன், பூவண்ணன், தம்பி சீனிவாசன், தங்கமணி போன்றோர் கதைகளைப்போல இப்போது யாருமே இங்கே எழுதுவதில்லை என்று தோன்றியது. அப்போதும்கூட சிறார் இலக்கியம் எழுதவேண்டும் என்று எண்ணியதில்லை. ஓர் இடைவெளிக்குப் பின் வேறு வேலைதேடிக்கொண்டிருந்தேன். அப்போது புதியதாகத் தொடங்கப்பட்ட மாணவர் பத்திரிக்கையின் பொறுப்பில் இருந்தார் ரமேஷ் வைத்யா. அவரைத் தொடர்புகொண்டபோது, வெளியில் இருந்தே ஏதாவது கதை மாதிரிக்கொடுங்க, பயன்படுத்திக்கொள்கிறேன் என்றார். தொடர்கதைபோல எழுதி அவரிடன் கொடுத்தேன். கதை சிறப்பாக வந்திருக்கு. ஆனால் இதைப் பயன்படுத்த ஆறுமாத காலம் ஆகும் என்றார். எழுதி முடித்த கதையை அச்சில் பார்க்க ஆறுமாசம் பொறுக்க முடியாமல், அக்கதையை பாரதி புத்தகாலயத்தில் கொடுத்தேன். அப்படித்தான் என் முதல் சிறுவர் நாவலான ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’ வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு என்னைத் தொடர்ந்து சிறுவர்களுக்காக எழுதத்தூண்டியது.

நீங்கள் வாசிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இப்போதுவரை குழந்தை இலக்கியத்தில் எவ்வகையான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன?

அந்தக்காலத்தில் கல்வி கோபாலகிருஷ்ணன், வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா போன்றோர் தொட்ட இடங்களை இன்றைய சிறுவர் எழுத்தாளர்கள் முயன்றுகூட பார்க்கவில்லையோ என்ற எண்ணம் எனக்கு உள்ளது. தமிழைப் பொறுத்தமட்டில் இன்று சிறார் இலக்கியம் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகமென்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் பிறமொழியில் இருந்து தமிழுக்கு வரும் சிறார் நூல்களைப் படிக்கும் போது, பிறமொழி என்றால் ஆங்கிலம் மட்டுமல்ல; மலையாளம், பெங்காலி, இந்தி மாதிரியான மொழிகளில் இருந்து வரும் படைப்புகளைப் பார்க்கும் போது, அவர்கள் நம்மைவிட எந்தளவு முன்னேறிச் சென்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

வெளிநாட்டினரின் பல படைப்புகளில் மற்ற கதாபாத்திரங்களோடு, மாற்றுத்திறனுடைய கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டிருக்கும். கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ள பார்பி மொம்மையில்கூட, வீல்சேரில் அமர்ந்திருக்கும் பார்பி உண்டு. இதையெல்லாம் பார்த்து, படித்து வளரும் அக்குழந்தைகள் மாற்றுத்திறனுடையவர்களையும் சகமனிதனாகப் பார்க்கும் மனநிலையில் வளர்கின்றனர். சுற்றுச்சூழல், உயிர்களிடத்தில் அன்பு, சுரண்டலுக்கு எதிராக பேசுவது என்று  பிறமொழிப் படைப்புகள் மிகவும் முன்னோடி நிலையில் உள்ளன. அங்கு படைப்புகள் கற்பனை மிக்கதாகவும் கருத்துச்செறிவுள்ளதாகவும் படைக்கப்பட்டு வருகின்றன. ஏனோ தமிழில் தற்போது அப்படி எழுதுகிறவர்கள் குறைவாக இருப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது. இங்கே பலரின் படைப்புகளில் தகவல் பிழையோடு, என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் பற்றிய தெளிவில்லாமலேயே எழுதுகின்றனரோ என்ற சந்தேகம் உள்ளது. ’ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ’ மாதிரி, வேறு வழியின்றி பத்திரிக்கைகளும் இப்படியான படைப்புகளைப் பக்கம் நிரப்பப் பயன்படுத்திக் கொள்கின்றன. அச்சில் ஏறிவிட்டதாலேயே அப்படைப்பு சிறந்தது என்று படைப்பாளிகளும் எண்ணிவிடுகின்றனர்.

ஒரு காலத்தில் தமிழில் சிறுவர் எழுத்தாளர் சங்கமெல்லாம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அதில் 400க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் உறுப்பினராக இருந்துள்ளனர். அவர்களில் எத்தனை பேரை நமக்குத் தெரிந்திருக்கிறது. இன்று பேசப்படுகின்ற அந்தக்கால எழுத்தாளர்கள் எத்தனைபேர் என்பதை எல்லாம் இன்று சிந்தித்துப் பார்க்கிறேன். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது, மற்ற இலக்கிய வகைமைக்குள் எழுதுகிறவர்களுக்கு உடனடியாகப் புகழும், அங்கிகாரமும் கிடைத்துவிடும். ஆனால் சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தவரை  புகழும், அங்கிகாரமும் கிடைப்பதற்குச் சுமார் இருபது ஆண்டுகளாவது ஆகும். தெளிவாகச் சொல்வதானால், ஒரு படைப்பைத் தன் சிறுவயதில் படிக்கும் சிறுவனோ, சிறுமியோ தனது பதின்பருவத்தைத் தாண்டி இருபது, முப்பது வயதுகளில் அப்படைப்பைப்பற்றிய ஓர்மையுடன் இருப்பதும்,  அதைப் படித்தபோது தான் அடைந்த மகிழ்ச்சியை நினைவு கூர்வதுமே சிறார் எழுத்துக்கான அங்கிகாரம். அப்படி நிகழவேண்டுமென்றால் சமரசம் செய்யாமல், பக்கங்களை நிரப்புகின்ற வெற்று வார்த்தைகளாக இல்லாமல், தான் எழுதுகிற படைப்புக்கு நேர்மையாக அந்த எழுத்தாளர் இருக்கவேண்டும். ஆண்டு இறுதியில் வழங்கப்படுகின்ற விருதுகளைத் திட்டமிட்டு எழுதுவது என்பதெல்லாம் இருக்கக்கூடாது என்ற நம்பிக்கையுடையவனாக இருக்கிறேன்.

இன்று தமிழ் சிறுவர் இலக்கியத்தின் பல படைப்புகள் வெறும் தகவலாக நின்று போய்விடுவதை நீங்கள் பார்க்கமுடியும். ஒரு படைப்பு எங்கே, எப்போது கதையாகிறது என்ற தருணம் நல்ல வாசகனுக்கே தெரியும். அது எழுத்தாளனுக்கும் தெரிந்திருக்கவேண்டும். அது தெரியாதபோது, அப்படைப்பு முழுமையாகமால் வெறும் எழுத்துக்களாகவும் தகவல்களைச்சொல்லும் செய்தியாகவும் மட்டுமே நின்றுவிடுகிறது.

தகவல்தொழில் நுட்பம் பெருகிவிட்ட, இன்றையச் சூழலில் வளரும் குழந்தைகள் மிகவும் புத்தி கூர்மையுடன் இருக்கின்றனர். வௌவாலை நாம் பறவை என்று சொன்னால், இணையத்தில் தேடி சில நிமிடங்களில் அது பறவை இனமல்ல. பாலூட்டும் விலங்கினம் என்று திருத்தும் அளவிற்கு வாசிப்பதில் கவனமுடன் உள்ளனர். என் சிறுவயதில் நான் இருந்ததைப்போல அவர்கள் இன்று இல்லை. காலம் மாறி இருக்கிறது. பரபரப்பு மிக்க சூழலில் வளர்கிறார்கள். எதைக்கேட்டாலும் நொடியில் கொட்டுகின்ற இணைய உலகில் இருப்பவர்களுக்குத் தகவல் பிழைகளோடு கதை எழுதினோம் என்றால் அவர்களை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம் என்று பொருள். இங்கே நாம் சிறார்க்கு எழுதும் போது கூடுதல் சிரத்தை எடுத்து, விழுமியங்களையும் விட்டுவிடாமல், வாசிப்பு சுவாரசியத்திற்கும் குறைவில்லாமல் எழுதவேண்டும் என்ற தெளிவு எழுதுவோர்க்குத் தேவை என்றே கருதுகிறேன்.

சமீபத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் – குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்பற்றியும், அதற்கான தீர்வுகளை முன்வைத்தும் பேசுகிறது. குழந்தைகளின் மீதான வன்முறை அவர்கள் வாழ்வில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்றில்லை. எந்த வன்முறையும் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கவே செய்யும்.

வார்த்தைகளின் வீரியம் பற்றி அறியாதவர்களாகவே நமது சமூகம் இருக்கிறது. உடல் ரீதியிலான தாக்குதல் ஏற்படுத்தும் அதே அளவு காயத்தையும், வலியையும் வார்த்தைகளும் ஏற்படுத்தும் என்பதை ஆசிரியர்களும், பெற்றோரும் உணர்வதில்லை.

குடும்பத்துடன் ஒரு விபத்தில் சிக்கும் ஒரு குழந்தை, காயங்களின்றித் தப்பிப் பிழைக்கலாம். ஆனால் அது மனதளவில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும். அதிலிருந்து அக்குழந்தையை மீட்டெடுக்கவும், இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவரவும் மனநல ஆலோசகரின் உதவியோ, மனநல மருத்துவரின் உதவியோ தேவைப்படலாம். ஆனால் இதுபற்றிய புரிதல் படித்த பெற்றோரிடமோ, ஆசிரியர்கள், அரசிடமோ கூட இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு விபத்தில் காயமின்றித் தப்பிக்கும் குழந்தையின் நிலையே இப்படி இருக்குமென்றால், வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளும் அவர்களின் அருகில் இருக்கும் மற்ற பிள்ளைகளும் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள்? அவர்களால் சாதாரணமாக வெளியில் சொல்லத் தயங்குகின்ற பிரச்சினைகளைப்பற்றியும் அவர்களிடம் நாம் தெளிவாகப் பேசவேண்டிய சூழலில் இருக்கிறோம்.

இன்று படிப்பதில் தொடங்கி, விளையாட்டு, கலை ஆர்வம் என எல்லா இடங்களிலும் ஒரு குழந்தை மற்ற குழந்தைகளினால் மன அழுத்தத்திற்கு (peer group pressure)  ஆளாகும்படி மாற்றி வைத்துள்ளோம். குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களைப் பற்றிய புரிதல் இங்கே இன்னும் வளரவேண்டும். அதன் தேவையும் இருக்கிறது. அவைபற்றியும் படைப்புகள் இங்கு இன்னும் வேண்டும்.

பிள்ளைகளிடம் தொடர்ந்து சக உயிர்களை நேசிப்பதும், அன்பு காட்டுவதும் அவசியமென்பதை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியது எவ்வளவு தேவையோ அதைப்போன்றே உரையாடலின் வழி பாலியல் கல்வியையும், ஆண், பெண் சமத்துவத்தை என்று சொல்லியபடியே இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. இல்லையெனில் நம் பிள்ளைகள்,  பிற மனிதர்கள் மீது நம்பிக்கையற்றவர்களாகவும், எப்போதும் ஏதோ ஓர் அச்ச உணர்வு கொண்டவர்களாகவும்தான் வளர்வார்கள். மேலும் தான், தனது, தனக்கு என்று தன்னைப்பற்றிய சிந்தனைகளை மட்டுமே கொண்டவர்களாகவும் சுருங்கிப்போவார்கள்.

குழந்தைகளின் உரிமை மறுக்கப்படுவதாக நினைக்கிறீர்களா? அவர்களை ஒடுக்கப்பட்டோராகக் (Suppressed) கருதவேண்டிய தேவை இருக்கிறதா?

ஏற்றுக்கொள்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலுமே கூட ஆம் என்பதுதான் உண்மையான பதிலாக இருக்கமுடியும். ஒடுக்கப்பட்டவர்களாக கருதுவதாலேயே அவர்களை பாதுகாக்க உலகம் முழுவதிலும் ஏகப்பட்ட, சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியா மாதிரியான தேசத்தில் சட்டங்களை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கலாம். இங்கே குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன என்பதை அரசின் புள்ளிவிபரங்களே சொல்கின்றன. கடத்தப்படுவதும், பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதும், போர், உள்நாட்டுக்கலவரம், இயற்கைப்பேரிடர், செயற்கையாக நிகழும் பெரும் விபத்துக்கள் என எங்கும் முதலில் பலியாகின்றவர்கள் குழந்தைகளாகவே இருப்பது கண்டு, இன்னும் இன்னும் என நாம் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், நலனுக்காகவும் உழைக்கவேண்டியதிருக்கிறது.

2012ஆம் ஆண்டு, தமிழக அரசு ஒரு அரசானையை பிறப்பித்தது. அதில்,  பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை (அ) கொடுமைகளை ஏற்படுத்தும் ஆசிரியரோ, பள்ளி இதர ஊழியர்களோ எவராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு, அவர்கள் படித்த கல்விச்சான்றிதழ்கள் அத்தனையும் செல்லாதவையாக அறிவிக்கப்படும் என்றது.

அப்படியும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கிறதா என்ன? நடந்துகொண்டுதானே இருக்கிறது. இவ்விஷயத்தில் பெற்றோர், குழந்தைகளின் உரிமைகளுக்காக களத்தில் நிற்போருடனும் சிறுவர் எழுத்தாளர்களும் இணைந்து கைகோர்க்கவேண்டும். இன்றைய சூழலில் கதை எழுதுவது மட்டும் சிறுவர் எழுத்தாளரின் வேலை அல்ல.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழில் சிறார் இலக்கியம் குறித்த கவனம் அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

விழுமியங்களை உணராமல் வளர்ந்து, சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறையை பார்த்துப் பயந்த பெற்றோர், தன் பிள்ளைகளுக்கு நாலு ‘நல்ல’ விஷயங்களைச் சொல்லி வளர்க்கவேண்டும் என்று நினைக்கத்தொடங்கி இருக்கலாம். அதோடு, என்னைப்போல பல புதியவர்கள் இத்துறைக்குள் வந்ததும்,  நிறைய பதிப்பகங்களும் சிறார் படைப்புக்களை வெளியிடத்தொடங்கியதும் அவற்றை நல்ல முறையில் சந்தைப்படுத்துவதும்கூட காரணமாக இருக்கலாம். இப்படிப் பல ‘லாம்’-களின் அடிப்படையிலேயே என்னால் இதற்குப் பதில் சொல்லமுடிகிறது என்பது வருத்தமே!

சிறார் இலக்கியத்தில் என்ன மாதிரியான வாய்ப்புகள் இன்னும் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

துறைசார்ந்த நூல்கள், செய்முறை அறிவியல், நவீன விஞ்ஞானத்தை எளிமையாகச் சொல்லும் படைப்புக்கள் என்பது தொடங்கி, பதின்பருவத்தினருக்கான காதல், பாலியல் கல்வி, விழுமியங்கள், அரசு, அரசியல் இப்படி படைப்பாளிகள் செயலாற்றவேண்டிய இடங்கள் இன்னும் காலியாகவே இருப்பதாக உணர்கிறேன்.

பதின் பருவத்தினருக்கு 90-களுக்கு முன்னர் எழுதிய படைப்புக்களையே இன்றும் சொல்லும்படியான நிலையே நீடிக்கிறது. அவ்வப்போது, சில படைப்புகள் பதின்பருவத்தினருக்கான முயற்சிகள் தமிழில் நடந்து வருகின்றன. அதுவும் கூட இளையோர் இலக்கியமாக இல்லாமல் சிறுவர் இலக்கிய வகைமைக்குள்ளேயே நின்று விடுகிறது. ஒரு நாவலைப் படித்தேன். அது சிறப்பான இளையோர் படைப்பாக வந்திருக்கவேண்டியது. ஆனால் அந்த இடத்தை அடையாமல் சிறுவர் இலக்கியமென்ற இடத்திலேயே நின்றுவிட்டது. அதுபற்றி அப்படைப்பாளியிடன் பேசும்போது குறிப்பிட்டேன். ”அப்படியா” என்றொரு எதிர்க்கேள்வியை வீசினார். ஏனெனில் அவர் அதை சிறுவர் இலக்கியப்படைப்பு என்றே கருதினாராம். இதுபோல் எது இளையோர் இலக்கியம் என்ற குழப்பமும் தெளிவின்மையும் நீடிக்கவே செய்கிறது. ஆக,  இங்கே படைப்பாளிகளுக்கும் போதிய புரிதல் தேவையாய் இருக்கிறது.

தாங்கள் மூன்றாம் பாலினத்தவர் சந்திக்கும் நெருக்கடிகள்பற்றி எழுதிய ‘அவன் – அது = அவள்’ நாவல் எழுதியதின் பின்னணிகள் என்ன?

அந்நூலின் முன்னுரையிலேயே குறிப்பிட்டதுபோல, எனது தந்தை அவர் நடத்திக்கொண்டிருந்த உணவகத்திற்கு யாசகம் கேட்டு வரும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவளித்து அனுப்புவார். அதேபோல எங்கள் ஊரில் கடற்கரையில் இயங்குகின்ற நிறைய மீன் கம்பெனிகளில் சமையல்வேலைகளை இவர்களே செய்துவருவார்கள். இப்படி மூன்றாம் பாலினத்தவர்களில் இரு பிரிவினரையும் பார்த்திருக்கிறேன். மும்பையில் செய்தியாளனாக பணியாற்றிய சமயம், அவர்களைப்பற்றி கட்டுரை எழுதவேண்டும் என்ற எனது எண்ணத்தை ராஜாசாமி என்றொரு தம்பியிடம் சொன்னேன். அவர் கோலிவாடா என்ற பகுதியில் வசித்துவந்தார். அவரின் வீட்டின் அருகிலேயே பல திருநங்கைகள் வசித்து வந்தனர். அவர்களிடமிருந்தே பேட்டியெடுத்து பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதினேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அவர்களுடனே இருந்து பார்த்துத்தால்தான் உணரமுடியும். விளிம்பு நிலை என்பதை எல்லாம் எழுத்தில் மட்டுமே படித்து அறிந்திருந்த எனக்கு இவர்களின் வாழ்க்கையை நெருக்கத்தில் பார்த்தபோது வலியும், வேதனையும் அதிகமானது. அப்படி அறிமுகமான திருநங்கைத்தோழி ஒருவர், டாக்சி ஓட்டுனர் ஒருவனை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அவனோடு தனி வீடு எடுத்து, ஒரு குடிசைப்பகுதியில் வாழ்ந்துவந்தார். அந்த வாழ்க்கை அவருக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தனது கணவன் செய்யும் கொடுமைகளைப்பற்றி புலம்பியபடியே இருப்பார். ஒரு நாள் தீக்குளித்து இறந்துபோனார். அவரது மரணம் என்னை உலுக்கியதைவிட, அம்மரணத்தை தற்கொலை என்று பதிவு செய்வதற்கு மாறாக விபத்து என்று பதிவுசெய்து கோப்பை மூடியது காவல்துறை. இது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. பின்னாளில் ஒரு காவல் அதிகாரியிடம் இதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் என்னை மேலும் அதிச்சிக்குள்ளாக்கியது. தற்கொலை என்றால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து அதன் பின்னனியைக் கண்டுபிடித்து, காரணமானவர்களை கைது செய்யவேண்டியதிருக்கும். எதற்கு அலைச்சல் என்று அவர்கள் அதை விபத்து என்று முடித்திருப்பார்கள் என்றார் அவர். அந்த திருநங்கையின் மரணத்திற்குக் காரணமான அவளது கணவன் தனது சொந்த ஊருக்கு ஓடிப்போய்விட்டான். இந்தச் சம்பவம் என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகுதான் அவர்களின் வாழ்க்கையின் துன்பங்களை, திருமணத்திற்கு முன், அதற்குப்பின் என எழுத நினைத்தேன். தெரிந்த வாழ்க்கைமுறைதான் என்றாலும் தொடர்ந்து நிறையபேரை பேட்டி கண்டேன். ஊர் சுற்றினேன். மும்பை, குஜராத், வாரணாசி, தில்லி என்று பணி நிமித்தம் சென்ற எல்லா இடங்களிலும் பல திருநங்கைகளை பேட்டி எடுத்துக்கொண்டே வந்தேன். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் 300 பேரை சந்தித்து பேசி இருப்பேன். அதன் பின் நாவல் எழுதத்தொடங்கியபோது, பக்கத்தில் இருந்து பார்த்த, அறிந்துகொண்ட எல்லா விஷயங்களையும் அந்த நாவலில் இறக்கிவிடமுடியவில்லை. நாவலை எழுதத்தொடங்கியதும், அது தனக்கு என்ன தேவையோ அதைமட்டும் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டது.

ஒரு பத்திரிக்கையாளராக இருந்துகொண்டு படைப்புகளை எழுதும்போது இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

முதல் சிக்கல் மொழி. தெரிந்தோ தெரியாமலோ படைப்புக்குள் ஒரு கட்டுரைத்தன்மை எட்டிப்பார்த்துவிடும். மற்றவர்கள் எழுதும்போது கதையை மட்டும் நினைத்துக்கொண்டு எழுதினால் போதுமானது. ஆனால் பத்திரிக்கையாளனாக இருந்துகொண்டு புனைவெழுத்து எழுதும்போது, சற்றே கூடுதல் கவனம் எடுத்து எழுதவேண்டியதிருக்கும்.

அடுத்ததாக நான் சந்திக்கும் இன்னொரு சிக்கல், ஒரு ஊரைப்பற்றியோ, ஒரு திருவிழாவைப் பற்றியோ காதால் கேட்டுமட்டும் எழுதிவிடமுடிவதில்லை. சம்பந்தப்பட்ட ஊருக்கோ, அந்த திருவிழாவையோ நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அப்பகுதியை இலகுவாக எழுதமுடிகிறது. பத்திரிக்கையாளனாக ஒரு செய்தியை எழுதும்போது, அதுபற்றிய உண்மைகளை ஆராய்ந்து எழுதவேண்டியது இருக்கும். இப்பயிற்சியின் காரணமாகவே படைப்புகளை எழுதும்போது மேற்கண்ட சிக்கல் உருவாகிறது என்று நான் நினைக்கிறேன்.

ஒரு படைப்பை எழுதுவதும், செம்மைப்படுத்துவதும் இரு வேறு வேலைகள் என்றால் செம்மைப்படுத்துவதை வேறோருவர்தான் செய்ய வேண்டுமா? ஆம் என்றால் தமிழில் அதற்கான சூழல் இருக்கிறதா?

செம்மைப்படுத்துவதை படைபாளியே செய்யலாம். ஆனால் அதற்கு நீண்டகாலம் ஆகும். ஏனெனில் எந்தப் படைப்பையும் எழுதி முடித்தவுடன் அது நம்மிடமிருந்து விடைபெற்றுவிடுவதில்லை. காகிதத்திலோ, கணினியிலோ இடமாறினாலும் நம் மனதுக்குள் சுழன்றுகொண்டே இருக்கும். அதிலிருந்து ஒரு படைப்பாளி வெளியேவரச் சிலகாலம் ஆகும். அதன்பிறகு அப்படைப்பை மறந்து, புதிய வாசகன்போல படித்து, செம்மைப்படுத்த வேண்டியதிருக்கும். இதற்கு மாற்றாக ஒருவரின் படைப்பை இன்னொருவர் படித்தால் அது அவருக்கு புதுப்படைப்பு; செய்யவேண்டிய திருத்தங்களை அவர் குறிப்பிட்டுக் கொடுப்பார். இப்போது அப்படைப்பை எழுதியவர் தள்ளி நின்று இன்னொருவர் கொடுத்த திருத்தங்களின் வழி அப்படைப்பை அணுகும்போது, செம்மைபடுத்துதல் எளிமையாக நடைபெறும் என்பது என் கருத்து. தமிழில் அதற்கான சூழல் இருப்பதாகவே கருதுகிறேன். என்ன ஒன்று, படைப்பைப் படித்து கருத்து சொல்லச்சொல்லும் பல படைப்பாளிகள் திருத்தங்களையோ, ஆலோசனையையோ பெரியதாக ஏற்றுக்கொள்வதில்லை.

தாங்கள் எழுத்தாளராய் இருப்பதில் குடும்பத்தின் பங்களிப்பு என்ன?

எங்கள் வீட்டில் இருவருமே எழுதக்கூடியவர்கள்தான். ஆம்! என் மனைவி லக்ஷ்மியும் எழுதக்கூடியவர்தான். கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள் என பல தளங்களில் அவரும் இயங்கியவர்தான். மகன் பிறந்து,  அவனுக்கு ஆட்டிசக்குறைபாடு என்று அறிந்ததும், மென்பொருள் துறையில் பார்த்துக்கொண்டிருந்த பணியைத் துறந்து, மகனை முழுமையாகக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்படியே சிறப்பு ஆசிரியருக்கான மேற்படிப்பை படித்து முடித்தார். தற்போது மகனையும் பார்த்துக்கொண்டு, அவ்வப்போது எழுதியும் வருகிறார். நான் எழுதும்போது அவரும், அவர் எழுதும் போது நானும் மகனின் தேவைகளை கவனித்துக்கொண்டு, அடுத்தவர் எழுதுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறோம்.

ஆட்டிசம் சார்ந்த நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக நடத்திவருகிறீர்கள்? இவற்றின் வெற்றி என்று எதைச் சொல்வீர்கள்?

ஏழு ஆண்டுகளுக்கு முன் அனேக ஆட்டிசநிலை குழந்தைகளுடைய பெற்றோரைப்போல எங்களுக்கும் ஆட்டிசம் என்ற சொல்லே புதியதாக இருந்தது. இணையத்தில் தமிழில் தேடினால் ஆட்டிசம் என்ற பெயரில் ஒரு கட்டுரைகூட அப்போது இல்லை. (மதியிறுக்கம் என்ற பெயரில் இன்னொரு குழந்தையின் தந்தை எழுதிய கட்டுரைகள் இருந்தன- என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்) அதனால் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் படிக்கத்தொடங்கினேன். என் மகனுக்கு தெரபி எடுத்துக்கொண்டிருந்த பெண்மணி அவர் படித்த சில நூல்களை எங்களுக்கு கொடுத்து உதவினார். அவற்றை உள்வாங்கிக்கொண்டு, பெற்றோர் பார்வையில் தமிழில் எளிமையாக  என் இணைய தளத்தில் எழுதத்தொடங்கினேன். இணைய நண்பர்கள் அக்கட்டுரைகளை பகிர்ந்து பரவலாக்கினார்கள்.

இன்று இணையத்தில் ஆட்டிசம் என்று தமிழில் தேடினால் கிடைக்கும் கட்டுரைகளில் பத்தில் ஐந்து நான் எழுதியவையாகத்தான் இருக்கும். என் பெயர் இல்லாமல் பல இடங்களில் பலரும் எடுத்துப் பகிர்ந்துவருகின்றனர். என் பெயரை விட ஆட்டிசம் என்ற குறைபாடுபற்றிப் பரவலான விழிப்புணர்வுக்கு அவை பயன்படுவது மகிழ்ச்சியே!

அதுபோல ஆட்டிச நிலைக்குழந்தைகளின் முதல் பெற்றோர் ஒன்றுகூடலை 2014-ஆம் ஆண்டு நடத்தினேன். தொடர்ந்து நடத்தியும் வருகிறேன். தமிழகம் முழுக்க பல ஊர்களுக்குச் சென்று விழிப்புணர்வு கூட்டங்களில் பேசி வருகிறேன். எல்லா இடங்களிலும் பெற்றோர் ஒன்றுகூடலை அவர்களே முன்னெடுக்க வலியுறுத்தி வருகிறேன். அதன் பயனாகச் சென்னையில் சில பெற்றோர் ஒன்றுகூடி மாதாமாதம் சந்திக்கின்றனர். இவை தவிர,  தமிழின் அனைத்து ஊடகங்களிலும் ஆட்டிசம் குறித்த செய்திகளை வெளியிடுமாறு கோரிக்கை வைத்துவருகிறேன். அதுவும் பல நண்பர்களின் முயற்சியில், அடிக்கடி ஆட்டிசம் பற்றிய செய்திகள் வெளியாகி, மக்களிடம் பரவலான அறிமுகத்தை ஆட்டிசத்திற்கு ஏற்படுத்தின. அதே சமயம் இதுபற்றிய உரையால்கள் தொடர்ந்து நடைபெறவேண்டிய தேவையும் இருக்கிறது. இலக்கியம் என்றில்லாமல் காட்சி ஊடகங்களிலும் இவர்களைப் பற்றி பதிவுகள் வந்துகொண்டே இருக்கவேண்டும். இயன்றவரை இத்துறையில் சிறப்பாகத் தொடந்து பணியாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசையும்கூட!

நேர்காணல் செய்தவர்: சரவணன் பார்த்தசாரதி

++++

நன்றி: மேன்மை மாத இதழ் ஏப்ரல் 2018

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, சிறுகதை, சிறுவர் இலக்கியம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, நேர்காணல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.