நேற்று மாலை ஒர் ஆட்டிசக்குழந்தையின் தாயார் போன் செய்திருந்தார். அவருடைய 17வயது மகனுடன் ஒரு ஷாப்பிங் மால் போய் இருக்கிறார்.

வாகனம் நிறுத்துமிடத்தில் தனது காரை பார்க்கிங் செய்துவிட்டு, பையனுடன் வெளியில் வந்துகொண்டிருக்கும் போது, ரிவர்ஸ் எடுத்த ஒரு காரில் இருந்த ஹார்ன் சத்தம் இவனை தொந்தரவு செய்துவிட்டது. சில அடிகள் தூரம் நடந்து, மாலின் வாசலில் நுழையும் இடத்தில், திடீரென உணர்ச்சிப்பெருக்குக்கு ஆட்பட்டவன் விழுந்து புரண்டபடி சத்தம் எழுப்பத்தொடங்கி உள்ளான். இவரால் அவனை சமாளிக்க முடியவில்லை. எப்படியும் சில வினாடிகளுக்குள் நார்மலுக்கு வந்துவிடுவான் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கூட்டம் கூடி விட்டதாம்.

குழந்தையை ஒழுங்கா வளர்க்கத்தெரியல அதனாலதான் இப்படி அடங்காம அலையுறான், லூசு புள்ளைய பெத்துட்டு ஏன் வெளியில எல்லாம் கொண்டு வர்றீங்க, என்று ஆளாளுக்கு அட்வைஸ்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். என்ன மேடம் இப்படி டிஸ்டர்ப் பண்ணுறான் என்று அங்கிருந்த செக்யூரிட்டி ஆட்கள் அவனை அமுக்க, அவன் திமிர என்று ஒரே களேபரம் தான். கொஞ்ச நேரத்தில் அவன் இயல்பு நிலைக்கு வந்ததும் ஷாப்பிங் செய்யாமலையே வெளியே வந்துவிட்டதாகவும் சொல்லும் போதே அவருக்கு அழுகை வந்துவிட்டது.

பொதுவாக அனேக ஆட்டிசக்குழந்தைகளுக்கும் உணர்ச்சிப் பெருக்கு எனப்படும் tantrum பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இதனை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்திவிடமுடியாது. எப்போது இப்படியான உணர்ச்சிப் பெருக்குக்கு ஆட்படுவார்கள் என்பதையும் கணிப்பது சிரமம். இது வராமல் தடுப்பதும் நம்கையில் இல்லை.

இதன் காரணமாக வீட்டுக்குள்ளேயே ஆட்டிசக்குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே முடக்கி விடுவதும் சரியான காரியமல்ல. மருத்துவர்களும், தெரபிஸ்ட்டுகளும் தொடர்ந்து சொல்லும் அறிவுரை இவர்களை ஒரே இடத்தில் அடக்கி வைக்காதீர்கள். பொது இடங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள் என்பது தான்.

கீழ்க்காணும் வீடியோக்களை ”முழு ஒலி அளவுடன்” முழுமையாக காணுங்கள். சில நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோக்கள் உங்களை நிச்சயம் சிரமப்படுத்தும். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இப்படி வாழவேண்டிய/கேட்கவேண்டிய நிலையில் உள்ள ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையையும், அவர்தம் பெற்றோரையும் நினைத்துப்பாருங்கள்.(பல பெற்றோர் மரத்துப்போய் இச்செயல்களை நகைச்சுவையுடன் கடந்து போக முனைகிறார்கள்)

https://en.wikipedia.org/wiki/File:Toddler_throwing_a_tantrum.ogg?fbclid=IwAR2cQLEC1-Zakw1VmXHCXgGWR6_8e2XPal1HMITmQmaEf2qfBqVNOAp5piI

பொது இடங்களில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எதிர்படும் போது, அவர்களை கட்டுப்படுத்தவோ, காயப்படுத்தவோ வேண்டாம். கொஞ்சம் அமைதியாக இருக்கவிட்டாலே இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள். நம்மூர் மக்கள் இதுபோன்ற புரிதல்களுக்கு வரும் போது அவர்களின் வாழ்க்கையும் நெருக்கடி இல்லாமல் இருக்கமுடியும். இங்கே வேண்டுவது எல்லாம் இரக்கம் அல்ல. சகமனித நேசிப்பு மாத்திரமே!

ஆட்டிசம், #autism

அறிவுசார் குறைபாடு உடையவர்களும் மாற்றுத்திறனாளிகளே!
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நாள்!

(2016 டிசம்பர் 3ஆம் நாள் பேஸ்புக்கில் எழுதிய குறிப்பு)