ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்!

ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்!

(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்)
திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்காலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களாலும், மக்களாலும் பேசப்படும் நிலையில் மற்றொரு பிரமாண்ட ஊழலை மறைக்க முடிந்திருப்பது ஆச்சரியம்தான். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலுவும், ஆ. ராசாவும் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் கணக்கெடுக்கப்படாத மற்றும் சரிசெய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இருவராலும் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுபடுத்தும் குற்றங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில், டி.ஆர். பாலு கடந்த 1999 அக்டோபர் 13ம் தேதி முதல் 2003 டிசம்பர் 21 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தார். பாலுவைத் தொடர்ந்து ஆ. ராசா 2004 மே 23 முதல் 2007 மே 17 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தார். இதற்கிடையிலான 2006 ஜனவரி மாதத்தில் ஆ. ராசாவின் அறிமுகம், பிரபல தொழில் தரகர் நீரா ராடியாவுக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நீரா ராடியாவிற்கு நெருக்கமான தொழிலதிபர்களின் பல திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி எளிதாக கிடைத்தது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நீரா ராடியாவிற்கு இருந்த செல்வாக்கு அனைவரும் அறிந்த ரகசியம்.


ஆ. ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தபோது அவருக்கும்,  சுற்றுச்சூழல் அனுமதிக்காக அவரை அணுகிய நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்புகளே ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கான வேர்களாகும். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் பிரிவின் இயக்குனராக ஆர்.கே.சந்தோலியா இருந்தபோது நீரா ராடியாவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு சுற்றுச்சூழல் தடைநீக்கச் சான்றிதழ்கள் அதிவேகத்தில் வழங்கப்பட்டன. (பின்னர் ஆ.ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக பதவியேற்றபோது அங்கேயும் ராசாவின் உதவியாளராக இருந்த ஆர்.கே. சந்தாலியாவிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அமலாக்கப்பிரிவு தற்போது விசாரணை நடத்துகிறது)

சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ.ராசா இருந்த காலத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் “இருண்ட காலம்” என்றே சுற்றுச்சூழல் அமைப்புகள் குறிப்பிடுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(Environment Impact Assessment)க்கான அறிக்கை” 1994ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டான 1986 முதல் 2006 வரையிலான 20 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் அமைச்சகம் 4016 பெரும் தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பெரும் தொழில் திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படும்போதும், நவீனப்படுத்தப்படும்போதும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்ற விதி சுற்றுச்சூழல் சட்டங்களில் இருந்தது.


திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது 2006ம் ஆண்டில் இந்த விதி திருத்தப்பட்டது.  இதன்படி விரிவாக்கம் அல்லது நவீனப்படுத்தப்படும் தொழிற்சாலை மத்திய அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டிய தேவையில்லை; அதற்கு பதிலாக தங்களுக்கு தாங்களே சான்றளித்துக் கொள்ளலாம்! என சுற்றுச்சூழல் சட்டங்கள் வீரியம் இழக்கச் செய்யப்பட்டன.
2006ம் ஆண்டில் திருத்தம் என்ற பெயரில் வீரியம் இழக்கப்பட்ட புதிய  சுற்றுச்சூழல் விதிகளின்படி 2006 – 2008 ஆண்டுகளில் மட்டும் 2016 திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது இந்தத் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழலிலும், சமூகத்திலும் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து மாதம் ஒன்றுக்கு 80 முதல் 100 தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு நான்கு அனுமதிகள்! இந்த தொழிற்சாலைகளுக்கு எதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டன என்பது போன்ற  எந்த விவரங்களும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இல்லை. இந்த அனைத்து தகவல்களும் கல்ப விருட்சம் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு 2009ம் ஆண்டு வெளியிட்ட “சுற்றுச்சூழல் அனுமதிக்கான நிபந்தனைகளை கண்காணித்தலும், பின்பற்றுதலும் – மோசடி” என்ற வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது. ஆ. ராசாவின் பதவிக்காலத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட அனைத்து தொழில் திட்டங்களையும் தற்போது தீவிரமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
2006ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA Report) தயாரித்தல், பொதுமக்கள் கருத்தறியும் நிகழ்ச்சி (Public Hearing) ஆகியவற்றுக்கு பின் மதிப்பீட்டு நிபுணர் குழு(Expert Appraisal Committee)விற்கு அந்த அறிக்கைகள் அனுப்பப்படவேண்டும். குறிப்பாக நீர் மூலமான புனல் மின் உற்பத்தி, நிலக்கரி மூலமான அனல் மின் உற்பத்தி, சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.  2005ம் ஆண்டில் பல்வேறு மதிப்பீட்டு நிபுணர் குழுக்களிலும் பங்கேற்ற 64 பேரில் மூன்றில் இரண்டு பங்கினர் டெல்லியை அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். திமுக அமைச்சரவை பொறுப்பில் இருக்கும் போது சுற்றுச்சூழல் குறித்த நிபுணர்களும்கூட திமுகவிற்கு ஆதரவானவர்களே!

ஆ. ராசாவால் 2007ம் ஆண்டில் நதிப்பள்ளதாக்கு மற்றும் நீர்மின்நிலையம் குறித்த மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக பி. ஆப்ரஹாம் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த ஆப்ரஹாம் இதற்கு முன்பு மத்திய அரசின் ஆற்றல்துறை அமைச்சரகத்தில் மத்திய அரசுச் செயலாளராக இருந்தவர். மேலும் நீர்மின்நிலைய திட்டங்களின் ஆதரவாளராகவும் செயல்பட்டவர். எனவே இவரை சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக நியமனம் செய்ததற்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இறுதியாக இன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பதவியேற்றபின் ஆபிரஹாம் தமது பதவியை விட்டு விலகுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.  ஆனால் அவர் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக இருந்தபோது அனுமதி அளித்த திட்டங்களை மறு விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த காலம் நாட்டின் சுற்றுச்சூழலில் பேரழிவு ஏற்படுத்தியது என்றால், அவரது முன்னோடியான டி.ஆர். பாலுவின் பதவிக்காலமும்  இதற்கு சற்றும் சளைத்ததல்ல. தொழில் நிறுவனங்கள் செய்யும் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு அந்த நிறுவனமே பொறுப்பாக்கப்படவேண்டும். ஆனால் டி.ஆர்.பாலு 2003 மார்ச் 13ம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” (Government’s Charter on Corporate Responsibility for Environment Protection – CREP) ஒன்றை வெளியிட்டார்.  அதன்படி சுற்றுச்சூழலை மிக அதிகம் பாதிக்கக்கூடிய சிவப்பு பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 64 தொழில்களிலிருந்து 17 தொழில்களுக்கு டி.ஆர்.பாலு விலக்களித்தார். (தொழிற்சாலைகள் சூழலை அதிகம் பாதித்தால் அது சிவப்புப் பிரிவிலும், நடுத்தரமாக பாதித்தால் ஆரஞ்சு பிரிவிலும், குறைந்த அளவு பாதித்தால் பச்சைப் பிரிவிலும் சேர்க்கப்படுகிறது) 2003ம் ஆண்டில் வரவிருந்த தேர்தலுக்கான நிதியை திரட்டுவதற்காக மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக பெயர் தெரிவிக்க விரும்பாத சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” வெளியிடுவதற்கு முன்னதாக 2002 டிசம்பர் 5 முதல் 2003 ஜனவரி 10ம் தேதிக்குள் 17 கூட்டங்கள் நடைபெற்றன. ஒரே நாளில் நான்கு கூட்டங்கள் வரை நடந்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான இந்த ஆபத்தான அறிவிப்பு தொடர்பான பேரங்கள் 2003 மார்ச் 12ம் தேதி வரை நடந்துள்ளது. இதனை பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல், அதை கண்காணித்தல் குறித்த எந்த விவரமும் இல்லாத இந்த அறிக்கையை வெளியிட்ட டி. ஆர். பாலு, “இந்த அறிக்கையின் அம்சங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் தாமாகவே முன் வந்து செயல்படுத்த வேண்டியவை. அந்த நிறுவனங்கள் அவ்வாறு செய்யத்தவறினால் அதற்காக அந்த நிறுவனங்களை தண்டிக்க மாட்டோம்” என்று மீடியாக்களிடம் கூறினார்.
இவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எந்த பயனுமற்ற ஒரு அறிக்கையை வெளியிட்ட டி.ஆர்.பாலு, வணிக நிறுவனங்களிலிருந்து வெளியாகும் மாசு குறித்து ஆய்வு செய்வதில் அந்த நிறுவன அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை மிகமோசமாக பாதிக்கக்கூடிய சிவப்பு பிரிவில் இருந்து விலக்களிக்கப்பட்ட 17 தொழில்களும் டி.ஆர். பாலு அறிவித்த  “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” திட்டத்தின் கீழ் வந்தன. இந்த 17 பிரிவுகளில் 2098 தொழிற்சாலைகள் இயங்கின. சுற்றுச்சூழலுக்கு பேராபத்து ஏற்படுத்தக்கூடிய 525 சர்க்கரை ஆலைகள், 397 மருந்து நிறுவனங்கள், 232 சாராய ஆலைகள், 150 தோல் தொழிற்சாலைகள், 150 பூச்சி மருந்து தொழிற்சாலைகள், 126 சிமென்ட் ஆலைகள், 111 ரசாயன உரத்தொழிற்சாலைகள், 100 சாயத் தொழிற்சாலைகள், 96 காகிதம் மற்றும் காகிதக்கூழ் தொழிற்சாலைகள், 83 அனல் மின் நிலையங்கள், 51 பெட்ரோலிய நிறுவனங்கள், 35 காஸ்டிக் சோடா நிறுவனங்கள், 17 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், 8 இரும்பு ஆலைகள், 14 அலுமினிய ஆலைகள், 6 தாமிர ஆலைகள், 4 துத்தநாக ஆலைகள் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டன.  இந்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” அனைத்து கழிவுப் பொருட்களையும் எரிஉலைகளில் எரிக்கும் ஆபத்து மிகுந்த ஒரு வழிமுறையை பரிந்துரை செய்தது. கழிவுப்பொருட்கள் எரிஉலைகளில் எரிக்கப்படும்போது மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்த டையாக்ஸின் வாயு வெளிப்படும் என்ற ஆபத்தை புறக்கணித்து, எரிஉலைகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் இந்த அறிவிப்பு வழி வகுத்தது.

இதற்கிடையில் சுமார் 150 பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் அவற்றின் கழிவுகளை பிரித்தெடுத்து, நச்சுப்பொருட்களை நீக்கும்  முறையை கையாள முன்வந்தன. இதுபோல சிமென்ட் தயாரிக்கும் ஆலைகளில் ஒரு பொதுக்கருத்து உருவாகவில்லை. சிமென்ட் ஆலைகள் மிகுந்த அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்த வல்லவை. ஒரு சிமென்ட் ஆலையால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கான எல்லை அந்த ஆலையிலிருந்து 3 கிலோ மீட்டரா அல்லது  7 கிலோ மீட்டரா என்ற பிரசினை எழுந்தபோது, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் விகே துக்கல் என்பவர் தமது தனிச்சிறப்பான கணித அறிவை பயன்படுத்தி அந்த அளவை 5 கிலோ மீட்டர் என்று நிர்ணயம் செய்தார்.

இந்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பா”ல் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மற்ற பிரசினைகளையும் களைவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு எளிய வழியை கண்டுபிடித்தது – தொல்லை தரும் அம்சங்களை அந்த அறிவிப்பிலிருந்து நீக்குவதே அந்த எளிய வழி!  தோல் தொழிற்சாலைகள் அனைத்தும் டிசம்பர் 2004க்குள் ஐஎஸ்ஓ 14000 தரச்சான்று பெறவேண்டும் என்று அந்த அறிவிப்பில் முதலில் கூறப்பட்டிருந்தது.  தோல் தொழில்அதிபர்களின் எதிர்ப்பையடுத்து இந்த அம்சம் பின்னர் நீக்கப்பட்டது. தோல் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து நச்சுப்பொருளான சல்பரை மறு பயன்பாட்டுக்காக பிரித்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டது. எனவே நச்சுப்பொருளான சல்பர் கழிவுகளுடன் கலந்து நீர், நிலம், காற்று ஆகிய அனைத்தையும் மாசுபடுத்த சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இதுபோன்ற செயல்பாடுகளால் குளோரின்-ஆல்கலி தொழில் நிறுவனங்களும் பெரும்பயன் அடைந்தன. இந்த ஆலைகள் அனைத்தும் நச்சுத்தன்மை அதிகம் உள்ள பாதரச செல் தொழில் நுட்பத்தில் இருந்து மெம்ப்ரேன் தொழில்நுட்பத்துக்கு 2005 டிசம்பருக்குள் மாற வேண்டும் என்று அரசு அறிவிப்பு கூறியது. தொழில் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இந்த கெடு தேதி நீக்கப்பட்டது. இந்த கெடு தொடர்ந்திருந்தால் மெம்ப்ரேன் தொழில்நுட்பத்திற்கு அனைவரும் மாறியிருப்பார்கள். இந்த மெம்பரேன் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளுக்கான இறக்குமதி வரியில் 10 சதவீதம் தள்ளுபடிகூட வழங்கப்பட்டது.

அரசு அறிவித்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு”-இன் படி பாதரசம் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் 50 கிராமுக்கும் குறைவான பாதரசம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வரையறை நிர்ணயிக்கப்பட்டது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக அதிக அளவாகும். நம் நாட்டில் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை காஸ்டிக் சோடா தயாரிக்கும்போது சுமார் 25 முதல் 30 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இதே அளவு காஸ்டிக் சோடா தயாரிக்கும்போது மேற்கொள்ளப்படும் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் நச்சுப்பொருளான பாதரசம் 9 டன்னைவிட குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடிய தொழில்களும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் மிகவும் மென்மையாக நடத்தப்பட்டன. சுற்றுச்சூழலை சீரழிக்கும் தொழில்நிறுவனங்களை ஏன் தண்டிக்கவில்லை என அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் கேட்டபோது, “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு, தொழில் நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை வலியுறுத்துகிறது. எனவே தொழிற்துறை தாமாகவே தன்னை சீரமைத்துக் கொள்ளும்” என்று குறிப்பிட்டார்.

இந்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு”-ஐ தயாரிப்பதில் சுற்றுச்சூழல் அமைப்புகளிடமோ,  மற்ற மக்கள் அமைப்புகளிடமோ எந்த வித கருத்தும் கோரப்படவில்லை.  இந்த அறிவிப்பை வெளியிடுவதற்காக டெல்லி அசோகா ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடந்த கருத்தரங்குகூட வணிக நிறுவனங்களின்  நிகழ்ச்சியாகவே நடந்தது.

2003ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட 203 திட்டங்களில் சரிபாதிக்கும் குறைவான திட்டங்களுக்கே சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சூழல் கண்காணிப்பு அறிக்கைகள் (Monitoring Reports) தயாரிக்கப்பட்டன. 150 திட்டங்களுக்கு மட்டுமே அத்திட்ட நிர்வாகிகளால் சுற்றுச்சூழல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிக்கைகள் (Compliance Report) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரின் பதவிக்காலத்தில் சுற்றுச்சூழல் ஆய்வில் மண் அரிப்பு, நிலவளம் குறைதல் போன்ற அம்சங்கள் பரிசீலிக்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டன. இதனால் நாட்டில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான 328.60 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 146.82 மில்லியன் ஹெக்டேர் நிலம் சீர்கேடு அடைந்தது. மேலும் இவர்களின் ஆட்சிக்காலத்தில் 4.4 மில்லியன் டன் அளவிற்கு ஆபத்துமிகுந்த கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள் நஞ்சாயிற்று. பஞ்சாப் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கருவுற்ற தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு உணவு கொடுக்கும் தொப்பூள் கொடியில் 287 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திமுக அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரின் பொறுப்பற்ற மற்றும் ஊழல்படிந்த கொள்கை முடிவுகளால் மனிதர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை கணக்கிட்டால், ஸ்பெக்ட்ரம் ஊழலால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான இழப்பு மிகவும் சிறியதாகவே இருக்கும்.

-சாந்தனு குஹா ரே(டெஹல்கா இணையத்தில் வெளிவந்தது)

ஆங்கில மூலம்: http://www.tehelka.com/story_main47.asp?filename=Ws241110ENVIRONMENT.asp
(ஊழல்களின் தன்மையையும், சுமாரான எண்ணிக்கையையும் மட்டுமே கட்டுரை ஆசிரியரால் எழுத முடிந்திருக்கிறது. இந்த ஊழல்களில் கைமாறிய பணம் குறித்தோ, இந்த ஊழல் காரணமாக சுற்றுச்சூழலுக்கும், இந்தியர்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தோ கணக்கிடுவதற்கான சூப்பர் கம்ப்யூட்டர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை – மொழிபெயர்ப்பாளர்)

—-

நன்றி: வழக்குறைஞர் சுந்தரராஜன் http://lawyersundar.blogspot.com/2010/12/blog-post.html

—-

This entry was posted in அரசியல், சமூகம்/ சலிப்பு, தகவல்கள், மீடியா உலகம், விளம்பரம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.