நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம்.

நண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர்.

புளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். மனுசன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுமாசம் ஆச்சாம். தெரியவே இல்லை. 🙁

ஆறுமணிக்கு சற்று முன்னதாக நாஞ்சில், ஜெமோ, சுல்தான், என பலரும் வந்திறங்கினார்கள். அவர்களும் வேட்டியில்! ஏதோ கல்யாணவீட்டில் நிற்பது மாதிரியான உண்ர்வு ஏற்பட்டது. எல்லோரிடமும் அறிமுகமாகிக் கொண்டேன். அரங்கசாமியும் வந்து அறிமுகம் செய்துவைத்தார். பின்னடியே வந்த சிறில் அலெக்ஸ்க்கு என்னைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி! :))

நாங்க எல்லாம் சிந்திப்பதை வாய் வழியாக வெளியே கொண்டு வரும் அதே வேகத்தில் நீங்கள் விரல்வழி கொண்டு வருவது பிரம்மிப்பாக இருக்கு என்றேன் ஜெமோவிடம். பொதுவாக ஒரு சிரிப்பை உதிர்த்தார். வேட்டியில் மாப்ள மாதிரி இருக்கீங்க என்றேன். அதற்கும் ஒரு சிரிப்பு. அவ்வளவு தான். 🙂

அடுத்து, சிரித்த முகத்துடனே இருந்த விழா நாயகன் அண்ணாச்சி நாஞ்சிலிடம் பேசத்தொடங்கியபோது, ’திருவண்ணாமலையில் பவா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் பேசிட்டு வந்துட்டேன். ஆனா.. இங்கே கொஞ்சம் டென்சனா இருக்கு’ என்றார். இப்போது நான் பொதுவாக சிரித்து வைத்தேன். 🙂

கேட்போருக்கெல்லாம் சிரித்தபடியே கையொப்பம் போட்டுக்கொடுத்தார் அண்ணாச்சி.

அவரின் நேற்று வெளியிடப்படவிருந்த கான்சாகிப் சிறுகதை தொகுதியை நீட்டி கையெழுத்து கேட்டேன். புத்தகத்தை திருப்பிப் பார்த்தவர்.. ’இன்னிக்குதான் இது வெளியீடு. இருங்க இன்னும் நான் நூலைப் பார்க்கவே இல்லை’ என்று கூறி, சில நிமிடங்கள் புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு, பின் கையெழுத்து போட்டுக்கொடுத்தார். அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டோம்.

சுமார் முன்னூறு இருக்கைகள் கொண்ட அரங்கம். எல்லா இருக்கைகளும் நிரம்பி இருந்தன. அது போதாதென சுற்றிலும் வேறு நின்று கொண்டிருந்தார்கள்.

சிறில் வரவேற்புரை நிகழ்த்தினார். (தல, தொடர்ந்து கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கோங்க..) அப்புறம் இலக்கியவட்ட ராஜகோபாலன் நாஞ்சிலின் படைப்புகள் குறித்து தனது அனுபவங்களை பேசினார். முதல் மேடை என்றார்கள். ஆனால்.. மனுசனிடம் நல்ல ஸ்பார்க் இருந்தது. கொஞ்சம் பயிற்சி எடுத்தரெனில் மேடைப்பேச்சுக்கு ஏற்றவராக வருவார்.

வேடிக்கை பார்க்க வந்து மேடையேற்றப்பட்டார் எஸ்.ராமகிருஷ்ணன்,- நாஞ்சிலின் படைப்புக்களோடு தனக்கான உறவை அழகாகச்சொன்னார்.

பாலுமகேந்திரா புனைவாளுமையிலிருந்து ஏன் தான் கதைகளை தேர்வு செய்வதில்லை என்று சொன்னார்.

அடுத்து, பாரதி மணி நறுக்கென பேசி அமர்ந்தார்.

அடுத்து வந்தவர் ஞாநி, அவருக்கு விருது கிடைத்ததை முன்னிட்டே இங்கு கூடியிருக்கிறோம். மரியாதை செய்கிறோம். எனில் விருதிற்கு முந்தைய நாஞ்சில் நாடன் பாராட்டப்படத் தேவையில்லாதவரா அல்லது மரியாதை செய்யப்படத் தேவையில்லாதவரா என்றால் நிச்சயம் இல்லை என்பேன். இவ்வருது வழங்கப்படாவிட்டாலும் கூட நாஞ்சில் பாராட்டப்படவேண்டியவர் தான்.

நல்ல வேளை ஜெயலலிதாவுக்கு தான் ஒரு எழுத்தாளன் என்ற எண்ணாம் எழவில்லை. இல்லாவிட்டால் இப்படியான கூட்டத்தை சசிகலாவை வைத்து தான் நடத்தியிருக்க வேண்டும்- என்றபோது அரங்கம் அதிர்ந்தது.

ராஜேந்திர சோழன் அடுத்ததாக பேசவந்தார். தலைமையுரை என்று சொன்னார்கள். இரண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நினைத்தேன். இப்போது சுருங்க பேசச்சொல்லி இருக்கிறார்கள். அதனால் அப்படியே பேசுகிறேன் என்று தான் தொடங்கினார்.

சாகத்திய அகாடமி அழகான் பொண்ணு மாதிரி, அது இன்னொருத்தன் கூட போகும் போது, நாம சத்தம் போடுவோம். அதே பொண்ணு நம்ம பக்கத்துல வந்து கொஞ்சம் உட்கார்ந்தா உள்ளுக்குள்ள சந்தோசமாக உணர்வோம்- என்றதும் சிரிப்பொலியும் கைதட்டலும் எழுந்தது.

பேசியவர்களின் முழுப்பேச்சையும் இங்கே நான் பதிவு செய்யவில்லை. சில விசயங்களைத் நினைவிலிருந்து தொட்டுச்சென்றிருக்கிறேன் அவ்வளவே. அங்கே பேசியவர்களின் முழுப்பேச்சுக்களும் பத்ரி சார் தன்னுடைய வலைப்பதிவில் வலையேற்றி இருக்கிறார். அங்கே போய் உரைகளை கேட்க/பார்க்க முடியும். அப்பதிவின் சுட்டி இதோ:- http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_04.html

எங்களுக்கு நேரமாகியதால் விழாவின் பாதியில் இருந்தே நழுவிவிட்டோம். அதன் பின் பேசியவர்களின் பேச்சுக்கள் கூட மேற்கண்ட சுட்டியில் உள்ளன.

பொதுவாக இம்மாதிரியான விழாக்களில் அடுத்தவனை குறை சொல்லல் நடக்கும். ஆனால் இங்கே அது இல்லை என்பது இன்னும் ஆறுதல்.

விழாவின் ஒருங்கிணைப்பை கொஞ்சம் சரி செய்திருந்தால் சரியான நேரத்திற்கு விழா முடிந்திருக்கும் என்பது என் எண்ணம். தொடரும் காலங்களில் இதனையும் கவனித்தில் கொள்வது நல்லது. நிகழ்வுக்கு வந்திருந்த பல வசாளிகளுக்கு நீரிழிவு உபாதை இருந்திருக்கும் போல. ஆனால்.. அரங்கில் நிறைந்திருந்த கூட்டமும், எழுந்தால் இடம் கிடைக்காமல் போய் விடும் அபாயம் இருப்பதாக உணர்ந்ததால் பல அசையவே இல்லை. அப்படியும் உட்கார முடியாமல் எழுது வந்த ஒரு பெரியவருக்கு கழிவறை இடத்தை காட்டி விட்டு நகர்ந்தேன்.

3 மணி நேர நிகழ்வு என்று திட்டமிட்டால் இடையில் ஒரு 20 நிமிடங்களாவது இடைவெளி விடுவதை திட்டமிடலாம். பலருக்கும் இது பயனளிக்கும்.

மேடையில் ராஜகோபால் பேசும் போது ஒரு விசயத்தைச்சொன்னார், நாஞ்சில் எப்போது தனது கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிப்பதில்லை என்று. நண்பர்கள் வழி நான் அறிந்த உண்மையும் கூட அது.

நிறைய பதிவர்கள் கலந்துகொண்டார்கள். பல பத்திரிக்கை நண்பர்களையும் பார்க்க முடிந்தது. பெண்கள் கூட்டமும் இருந்தது. பல எழுத்தாளர்கள் அமைதியாக கூட்டத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

நிறைவான விழாவில் கலந்துகொண்ட திருப்தி இருந்தது. விழாவினை ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கு நன்றி!

தொடர்புடைய சுட்டிகள்:

நாஞ்சில் விழாஜெமோவின் தொகுப்பு: http://www.jeyamohan.in/?p=11281

நிகழ்வின் படங்கள் : http://picasaweb.google.com/vishnupuram.vattam/NanjilFunctionChennai#

என் முந்தைய பதிவு-http://216.185.103.157/~balabhar/blog/?p=830

நாஞ்சிலின் படைப்புக்கள் இணையத்தில் படிக்க: http://nanjilnadan.wordpress.com/


Comments

3 responses to “நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்”

  1. கண்டிப்பா இன்னும் பயிற்சி எடுத்து அடுத்த முறை சிறப்பா செய்யலாம். நம்பிக்கை வந்திருக்குது தல. உங்களது பங்களிப்புக்கு நன்றி.

  2. tamizhselvan Avatar
    tamizhselvan

    அறிமுக அளவில் நல்ல பதிவு.6 ஆம் தேதி எக்மோர் இக்சா மையத்தில் தமுஎகச வடசென்னை மாவட்டக்குழு சார்பில் நாஞ்சிலுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நானும் அவசரமாக வந்து பங்கேற்றுத் திரும்பினேன்

  3. தமுஎகச வின் அவ்விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்து என்னால் கடைசி நிமிடத்தில் வர முடியாமல் போனது தோழர். 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *