துரைப்பாண்டி (சாமியாட்டம் – பாலபாரதி)

ஒரு வலைப்பதிவருக்கும் எழுத்தாளருக்கும் என்ன வேறுபாடு? ஒரு வலைப்பதிவுக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு? சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் போது ‘துரைப்பாண்டி’யைப் படிக்கும் போது தோன்றிய கேள்வி.

‘துரைப்பாண்டி’ ஒரு சிறந்த பதிவு என்பதைத் தாண்டி போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக் கொண்ட, கிடைத்த கனமான விஷயத்தின் அனைத்து பரிமாணங்களையும் ஊடுருவாமல் ஒற்றைக் கோட்டில் நகர்ந்து முடிந்து விடுகிறது.

‘தொறப்பாண்டி’ கதை சொல்லியை விட சிறியவன், பரிதாபத்துக்குரியவன் என்பதற்கு ‘பதினொரு வயது நிரம்பியவன், கட்டையான உருவம், மெலிந்த தேகம், ஏக்கம் வழியும் கண்களுடையவன்’ என்பதும் ‘பால் முகம் மாறாத அவனது பருவமும் உருவமும்’ என்பதும் நிச்சயம் போதுமானதாக இருக்கவில்லை.

கடைசியில் துரைப்பாண்டி சொல்லச் சொல்ல எழுதப்பட்ட கடிதத்தைப் படிக்கும் போதுதான் அவனது அறியா பருவமும் குழந்தை மொழியும் தெரிகிறது. அதுவரை நடக்கும் உரையாடல்கள் எல்லாம் ஏதோ, இரண்டு சகவயதினர் டீக்கடையில் சந்திக்கும் போது தமது வாழ்க்கையைப் பற்றி அலுத்துக் கொள்ளும் விதத்தில்தான் பாதிக்கின்றன.

கடிதம் எழுதிய பிறகு அவன் கண்களில் தெரியும் ‘தான் எப்படியும் மீட்கப்பட்டு விடுவோம்’ என்ற நம்பிக்கைக்குத் தேவையான அழுத்தம் அதற்கு முன்பு ஏற்பட்டிருக்கவில்லை. அதனால், பதினெட்டு வயது இளைஞனோடு துரைப்பாண்டி நடக்கத் தொடங்கியதும் அவன் ‘சமுத்திரத்தால் விழுங்கப்படுவது’ போன்ற சோகம் ஏற்படவில்லை.

கண்ணில் பட்ட, காதில் விழுந்த சம்பவங்களை பதிவு செய்வது வலைப்பதிவு. அவற்றுக்குள் புகுந்து தனது அனுபவங்களையும் வாசிப்பையும் வைத்து மறைந்திருக்கும் உணர்வுகளையும், திரை மறைவு நிகழ்வுகளையும் கண்டுபிடித்துச் சொல்வது சிறுகதை என்று சொல்லலாமா?

கோட்டிமுத்து
பாரதியின் ஒரு பாட்டு
பொம்மை
கடந்து போதல்
தண்ணீர் தேசம்

நன்றி- http://bookimpact.blogspot.com/2012/01/blog-post_26.html