பாலபாரதியின் ‘சாமியாட்டம்’

சமூக ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் கொண்ட பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு ‘சாமியாட்டம்’.


பன்னிரெண்டு சிறுகதைகளை கொண்ட இந்த தொகுப்பினூடே பயணிக்கும் போது சில கதைகள் புலம் பெயர் வாழ்வின் வெம்மையையும் சில மாலை நேரத்து மழை குளிர்ச்சியையும் தருகின்றது.

இச்சிறுகதைகளின் வழியாய் ஆசிரியரின் அகவுலகை எளிதாய் தரிசிக்க முடிகிறது.

‘அம்மாவின் கை உணவிற்கு ஏங்கும் வாலிபனாய்’
‘சாதிய படிநிலையை கண்டு சாடும் முற்போக்குவாதியாய்’
‘ஊரின் நினைவை தன்னோடு சுமந்து திரியும் தேசாந்திரியாய்’
‘பால்யத்தில் ஒளித்து வைத்த கதைகளை சொல்லத் துடிக்கும் கதைச்சொல்லியாய்’
‘உலகமயமாக்கலுக்கு எதிராய் குமுறும் சோசலிசவாதியாய்’
‘போலி நம்பிக்கைகளை வெறுக்கும் பகுத்தறிவாதியாய்’
‘விளிம்பு மனிதர்களின் பிரதிநிதியாய்’
‘குழந்தையாய் மாற துடிக்கும் வளர்ந்த குழந்தையாய்’
என தொகுப்பை முழுதும் வாசிக்கும் போது ஆசிரியருக்கு பின்னிருக்கும் பரிமாணம் பிரமாண்டமாய் நீள்கிறது.

இத்தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த மூன்று சிறுகதைகள் ‘தண்ணீர் தேசம்’ , ‘சாமியாட்டம்’ மற்றும் ‘துரைபாண்டி’. மூன்று கதைகளுமே எந்த பிரச்சார நெடியும் இல்லாமல் சொல்ல வந்த கருத்தை பொட்டில் அறைந்து சொல்கிறது.

நாம் அறியாமலே உலகமயமாக்கலின் தாக்கம் நம் வீடு வரை எப்படி வந்து நிற்கிறது என்பதை கடல் முட்டி நிற்கும் தீவில் உள்ள ஒரு நண்பரது வீட்டின் உபசரிப்பின் மூலம் பதிவு செய்திருக்கிறார் ‘தண்ணீர் தேசம்’ கதையில்..

ஒரே கோயிலில் திருவிழா கொண்டாடி, ஒரே சாமியை கும்பிட்டு இருக்கும் சாமானிய மக்களிடையே சாதியம் என்ற அழுக்கு எவ்வளவு ஆழமாக பதிந்து இருக்கிறது என்பதை வலியுடன் பேசுகிறார் ‘சாமியாட்டத்தில்’

ஒரு இளைஞனுக்கும், சிறுவனுக்குள்ளும் எழும் இயல்பான சிநேகத்தையும், வறுமையின் நிமித்தம் மொழி தெரியாத ஊரில் பரிதவிக்கும் ஏழை சிறுவனின் வாழ்க்கையை அருமையாய் சொல்லி இருக்கும் கதை ‘துரைபாண்டி’. இறுதியில் துரைபாண்டிக்கு என்னவாகி இருக்குமோ என வாசிப்பவனை பதபதைப்புக்குள்ளாக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை.

இத்தொகுப்பில் நெருடலான விஷயமாக எனக்கு தெரிவது ‘கோட்டி முத்து’ கதையில் கோட்டிமுத்துவுக்கும் அந்த சிறுவர்களுக்குமான உறவை இன்னும் நெருக்கமாக உருவாக்கி இருந்தால் அந்த முடிவு இன்னும் நம்மை இறுக்கமாகி இருக்கும் என்று தோன்றுகிறது..அதுபோல ‘கடந்து போதல்’ சிறுகதையின் தலைப்பு அக்கதை உருவாக்கும் வலிக்கு பொருத்தமானதாக இல்லை என்பதும் எனது அனுமானம். ஆனால், மற்ற சிறுகதைகளில் கிடைக்கும் நிறைவு இக்குறைகளை கடந்து போகவே செய்கிறது..

இச்சிறுகதை தொகுப்பின் சிறப்பே ஒரே பேசுபொருளை பேசாமல் வெவ்வேறு கருத்தியல்களோடு பயணிப்பது தான். ஒவ்வொரு சிறுகதையை வாசித்து முடிக்கும் போதும் அதன் கிளை கதைகள் நம் அனுபவங்களிலிருந்து பீறிட்டு கிளம்புவதை தவிர்க்க முடியவில்லை. அதுதான் இத்தொகுப்பின் வெற்றியாக நான் நினைக்கிறேன்..

எளிமையான மொழியினூடே வலிமையாய் பல முற்போக்கு கருத்துகளை வைத்திருக்கும் இப்புத்தகத்தை அனைவரும் வாங்கி படிக்க பரிந்துரைக்கிறேன்..

அதே நேரம்.. நாம் பார்க்காத, கேட்காத எண்ணற்ற மனிதர்களின் கதைகளை மனதில் சுமந்து திரியும் பாலபாரதி தனது சோம்பலை கைவிட்டு தொடர்ந்து எழுத பணிக்கின்றேன்.

புத்தகத்தை இணையம் மூலம் வாங்க…

http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

நன்றி:- http://stalinfelix.blogspot.in/2012/01/blog-post.html


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *