ஆட்டிசம் – சரியும் தவறும்

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் என்பதை தமிழில் மதியிறுக்கம் என்றும் மனயிறுக்கம் என்று சொல்கிறார்கள். வேறு சிலரோ ‘தன்முனைப்பு குறைபாடு’ என்று சொல்லுகிறார்கள். எனக்கும் தன்முனைப்பு குறைபாடு என்பது தான் சரியான சொல்லாகப்படுகிறது. பொதுவாக ஆட்டிசம் குறைபாடுகளை இப்படியானது என்று வரையறுக்க முடியாது. அதே சமயம், இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். இவர்களில் அனேகரும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரக்கூடிய பிரச்சனை என்றால் அது, ’சென்ஸரி பிரச்சனைகள்’ தான்.

இப்பாதிப்புக்குள்ளானவர்களை சமன் நிலைக்குக் கொண்டு வர சென்ஸரி தெரபிகள் மிகவும் முக்கியமானதாகப்படுகிறது. இதுகுறித்தும் போதிய விழிப்புணர்வு இக்குழந்தைகளின் பெற்றோரிடமும், தெரப்பிஸ்டுகளிடமும் கூட இல்லாமல் இருப்பதும் கண்கூடு.

புனைகதைகளும், தவறான பரப்புரைகளும் எல்லா இடங்களிலும் நிகழ்க்கூடியது தான் என்றாலும் மருத்துவத்துறையிலும் அது நிகழ்வது வேதனையானது. ஆட்டிசம் குறித்து பல்வேறு விதமான செய்திகள் உலா வருகின்றன. அவற்றில் சரியானதும், தவறானதும் கீழே..

எல்லா ஆட்டிச பாதிப்புக்குள்ளானவர்களும் ஒன்று போலவே இருப்பார்கள் –

தவறு. உண்மையில் ஆட்டிச பாதிப்பின் தீவிரமே நபருக்கு நபர் வேறுபடும். எல்லா ஆட்டிசக் குழந்தைகளுக்கும் பொதுவான ஒரே விஷயம் அவர்களுக்கு மற்றவர்களோடு பழகுவதில் இருக்கும் சிக்கல்கள் மட்டுமே. மற்ற எல்லா குணாம்சங்களும் நபருக்கு நபர் மாறுபடும். எனவே நாமறிந்த ஒரு ஆட்டிசக் குழந்தையைக் கொண்டு எல்லோரையும் எடை போட முடியாது.

ஆட்டிச பாதிப்புள்ளவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது –

இதுவும் உண்மையல்ல. ஆட்டிசக் குழந்தைகள் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதில் ஒரு குறையும் இருக்காது. ஆனால் அதை வெளிக்காட்டும் விதம் வழக்கமான ஒன்றாக இல்லாது போகலாம்.

இவர்களால் உறவுகளைப் பேண முடியாது –

இதுவும் தவறான கருத்தே. அவர்கள் மிகப்பெரிய நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிடினும் கூட ஒரு சிலரிடமேனும் ஆழ்ந்த, பலமான உறவுகளை நிச்சயம் பேண முடியும். குறிப்பாக தங்கள் குடும்ப அங்கத்தினர்களுடனும், தன்னை ஒத்த தேடல் கொண்ட ஒரிரு நண்பர்களுடனும் தெளிவான, உறுதியான உறவுகளை உடையவர்களாகவே இருக்கிறார்கள். மேலும் பல ஆட்டிச பாதிப்புடைய நபர்கள் காதல் கொண்டு திருமண வாழ்விலும் மகிழ்வாக ஈடுபடுகிறார்கள்.

ஆட்டிசம் உடையவர்கள் ஆபத்தானவர்கள் –

நிச்சயம் இல்லை. நிறைய ஆட்டிச பாதிப்புடையவர்கள் சில நேரங்களில் மூர்க்கமாக நடந்து கொள்வது உண்டு என்றாலும் கூட அது அவர்களது பயம் அல்லது எரிச்சல் காரணமாகவோ இல்லை உடல் ரீதியான சில சிக்கல்களினாலோ ஏற்படுவது மட்டுமே. ஆட்டிசத்தின் காரணமாக அவர்கள் குரூரமான வன்முறைகளில் ஈடுபடுவது என்பது சாத்தியமற்ற ஒன்று.

ஆட்டிச பாதிப்புடையோர்கள் அபாரமான நிபுணத்துவம் உடையவர்கள் –

ஒரு சில ஆட்டிசமுடைய நபர்கள் ஏதேனும் சில துறைகளில் அபாரமான ஞானம் உடையவர்களாக இருப்பது உண்மையே. ஆனால் அதற்காக ஆட்டிச பாதிப்புக்குள்ளான எல்லோருமே நிச்சயம் ஏதேனும் ஒரு துறையில் சிறந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இவர்களிலும் பெரும்பான்மையினர் சாதாரண அளவுக்கே அறிவுத்திறன் உடையவர்கள்தான். ஒரு சிலர் சராசரிக்கும் கீழான திறன் உடையவர்களாகவும் இருக்கக் கூடும்.

பேசும் திறன் இருக்காது –

தவறு. ஒரு சில ஆட்டிச பாதிப்புக்குள்ளானவர்களால் பேச முடியாமலும், சைகைகளால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்படியாகவும் இருப்பது நிஜமே. ஆனால் மிகப் பெரும்பான்மையானவர்கள் ஒரளவு பேசவும், நன்கு எழுதவும் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். சமீப காலங்களில் இவ்வகை பாதிப்படைந்து, கொஞ்சம் இயல்பு நிலைக்கு திருப்பியவர்களில் சிலர் எழுத்தாளர்களாகவும் மிளிர்கிறார்கள்.

ஆட்டிசத்தை முற்றிலுமாக குணப்படுத்தி விட முடியும்

இதுவும் ஒரு தவறான புரிதலே. ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடு. எப்படி மனித உடலுக்கு சர்க்கரை குறைபாடு வந்தாலோ, இரத்தக்கொதிப்பு குறைபாடு வந்தாலோ 100 சதம் குணப்படுத்த முடியாதோ, அது போலத்தான் ஆட்டிசமும். ஆனாலும் ஆட்டிசத்தின் பாதிப்புக்குள்ளானவர்களை தொடர் பயிற்சியின் மூலம் ஒழுங்கு நிலைக்கு கொண்டு வர முடியும்

அடிதான் உதவும்

ஆட்டிசக் குழந்தைகளுக்கான தெரப்பிஸ்டுகளில் சிலர் இக்குழந்தைகளை அடித்து, மிரட்டி அவர்களை சரி செய்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். அடிப்பதன் மூலம் நாம் சொல்வதை செய்ய வைக்க முடியும். ஆனால் இப்பயம் அவர்களின் மனநிலையில் ஏற்படுத்தும் மாறுதல்கள் அக்குழந்தைகளை மிகவும் பாதிக்கும். சாதாரண மனநிலை உள்ள குழந்தைகளையே அடித்து சொல்லித் தருவது தவறான அணுகுமுறை என்ற விழிப்புணர்வு பெருகி வரும் நிலையில் கூட முறையான ஓ.டி படிப்பை முடித்த சில தெரப்பிஸ்டுகளே இது போன்று நடந்து கொள்வதும், பெற்றோருக்கு தவறான வழிகாட்டலை வழங்குவதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

(தொடரும்)

தொடர்வுடைய சுட்டிகள்:-

ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

ஆட்டிசம் வரலாறு

ஆட்டிசம் – உட் பிரிவுகள்

This entry was posted in AUTISM - ஆட்டிசம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

7 Responses to ஆட்டிசம் – சரியும் தவறும்

  1. ரதி says:

    Autism குறித்த தெளிவுபடுத்தல் சமூகத்தேவை.

    //”….புனைகதைகளும், தவறான பரப்புரைகளும்…..”

    மருத்துவத்துறை இந்த குறைபாடு பற்றி பரப்புரை செய்ய இதென்ன அரசியலா 🙂

    மனநல குறைபாடுகள் பற்றிய புனைகதைகள் சினிமாவிலும், தவறான வழிநடத்தல்கள் மருத்துவ துறையிலும் இருப்பதை கொஞ்சம் விளக்கியிருக்கலாம்.

  2. எளிமையாக எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்துள்ளீர்கள்.. தேவையான சுட்டி இணைக்கப்படுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

  3. amutha says:

    unmai. engal kuzanthaiyai adiththal sariyakiduvan endu engal therapist sonnar. avan murandu pidithal adikkirom.. in adikka mattom. 🙁

    thanks

  4. கலைவாணி செல்வராஜ் says:

    எங்கள் பையனை தெரபிஸ் அடிப்பதைப் பார்த்துள்ளேன். ஆட்டிசம் மூர்க்கமாக இருக்கும் போது அடித்தால் பையனை கட்டுப்படுத்த முடியும் என்றார். சாப்பிட மறுத்து அடம் பிடித்தால் நாங்கள் அடித்து, அவன் அழும் போது வாயில் சோறு ஊட்டுவோம். அப்படித்தான் பழக்கி இருக்கிறோம். இனி அடிக்காமல் இருக்கப் பார்க்கிறோம். இப்படி செய்ய சொன்ன தெரபிஸ்ட்டுகளுக்கு நல்ல புரிதல் தேவையா உள்ளது.

  5. அமுதா, கலைவானி- எல்லா தெரபிஸ்டுகளும் அடி உதவுன் என்ற கோட்பாடு உடையவர்கள் அல்ல. சிலர் அப்படி இருக்கலாம். எதற்கு உங்க ஊரில் வேறு சிலரிடம் அணுகிப்பாருங்கள்.

  6. Vijayakumar Ramdoss says:

    நல்ல தகவல் தல, தொடறேங்க

  7. /– மருத்துவத்துறை இந்த குறைபாடு பற்றி பரப்புரை செய்ய இதென்ன அரசியலா–/

    அரசியல் என்பதை விட மருத்துவமானது இன்றைய நிலையில் வியாபாரம் ஆகிவிட்டதென்பது தேச அளவில் வெட்கக் கேடான விஷயம் இல்லையா ரதி?

    நாம் பிறந்த போது, வீட்டிலுள்ள பெரியவர்கள் எத்தனை தடுப்பூசி போட்டார்கள் என்று கேட்டுப் பாருங்க? இன்றைக்கு மதம் ஒரு தடுப்பூசி போடுகிறார்கள்.

    பணப் பேய்களுக்கு எல்லாம் வியாபாரம். பட்சிலம் குழந்தைகள் கூட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.