ஆட்டிசம் – உட் பிரிவுகள்

கடந்த பகுதியின் இறுதியில் ஆட்டிசம் குறித்து நிலவும் தவறாக கருத்துக்களை அடுத்த பகுதியில் பார்ப்போம் என்று சொல்லி இருந்தேன். அதற்கு முன், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் எனும் பெயருக்கடியில் வரும் எல்லா குறைபாடுகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை அவசியமாகிறது. அதனால் முதலில் அதைப் பற்றி அறிந்துகொள்வோம்!

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) எனும் பெரிய குடையின் கீழ் குழந்தைகளில் மூளை வளர்ச்சியில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பான குறைபாடுகள் வகைப்படுத்தப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் எப்போதும் தனித்தனி பெயர் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதாலும், இவைகள் கிட்டதட்ட, ஒரே குடும்ப குறைபாடுகள் (மனித குடும்பங்கள் அல்ல, இவை மருத்துவக்குடும்பம்) என்பதாலும் இக்குறைபாடுகளை பொதுவாக ஆட்டிசம் என்று சொல்லுகிறார்கள்.

ஆட்டிசம் என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது. குறிப்பாக மற்றவர்களோடு தொடர்பு கொள்ளுதல், மற்றவர்களோடு சேர்ந்து இயங்குதல் முதலியவற்றில் குறைபாடுகள் இருப்பின் அக்குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதாகக் கொள்ளலாம். இக்குழந்தைகள் ஒரே மாதிரியான விஷயங்களை திரும்பத் திரும்ப செய்வது, சுழலும் பொருட்களை அலுப்பின்றி பார்ப்பது என சில மாறுபட்ட நடவடிக்கைகளோடு இருப்பார்கள். மூன்று முதல் ஐந்து வயது வரை தான் இவர்களது ஆட்டிச குணாதிசியங்கள் வளரும் என்று சொல்லப்படுகிறது. (அதற்குள் ஆட்டிச குணாதிசியம் உச்சத்தை எட்டி விடும்.)

இயல்பான மனிதர்களுக்கு பார்ப்பது, கேட்பது, தொடு உணர்ச்சி இவற்றின் மூலம் உணரும் விஷயங்களை மூளை அலசி பின் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளும். ஆனால் ஆட்டிச பாதிப்புக்குள்ளானவர்களின் மூளை இது போன்ற உணரும் விஷயங்களை உள்வாங்கி தொடர்புறுத்தி புரிந்து கொள்ளும் தன்மையை இழப்பதனால் அவர்களின் செயல்பாடுகள் வித்தியாசமாக அமைகிறது.

ASD – பிரிவின் கீழ் வரும் குறைபாடுகள்

1. ஆட்டிசம் (Autism)
2. அஸ்பெர்ஜர் ஸின்ட்ரோம் (Asperger Syndrom)
3. பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள் (PDD)
4. பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள் என்று வரையறுக்க முடியாதவை (PDD –Nos)
5. ரெட் ஸின்ட்ரோம்(Rett Syndrome)
6. குழந்தைப்பருவ ஒத்திசைவின்மைக் குறைபாடு(Childhood Disintegrative Disorder – CDD)

ஆட்டிசம் :-

மூன்று வயதுகுட்பட்ட குழந்தைகளிடம் கீழ்கண்ட வளர்ச்சிக் குறைபாடுகள் அல்லது வித்தியாசமான நடவடிக்கைகள் காணப்பட்டால் அது ஆட்டிசம் எனக் கொள்ளலாம்.

1. கருத்துக்களை சைகையாலோ வார்த்தையாலோ வெளிப்படுத்த முடியாது இருத்தல்
2. மற்றவர்களோடு கலந்து பழகாமல் இருப்பது
3. சில குறிப்பிட்ட செயல்களை மட்டும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் செய்வது, வெகு சில விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுவது போன்ற செயல்கள்

இந்தக் குழந்தைகள் தன் வயதொத்த குழந்தைகளோடு கலந்து பழகுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். சைகைகளாலோ வார்த்தைகளாலோ தன் எண்ணத்தை வெளிப்படுத்த முன் வர மாட்டார்கள். மற்ற குழந்தைகளோடு விளையாடுவதோ, சேர்ந்து மகிழ்வதோ இருக்காது. (மேலும் விபரமாக இங்கே: ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள் )

அஸ்பெர்ஜர் ஸின்ட்ரோம் :-

இந்த குறைபாடு பெரும்பாலும் பதின்ம வயதுகளிலேயே கண்டறியப்படுகிறது. காரணம் இக்குறைபாடுள்ள குழந்தைகள் பேசுவதிலும், புரிந்து கொள்ளும் திறனிலும் எந்தக் குறைபாடும் இருக்காது. சொல்லப்போனால் இக்குறைபாடுள்ள குழந்தைகள் பெரும்பாலும் சராசரிக்கும் மேற்பட்ட அறிவுத் திறன் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

அவர்களது மிகப்பெரிய பிரச்சனையே மற்றவர்களோடு கலந்து பழக முடியாது என்பதுதான். எனவே வளர வளரத்தான் இந்த பிரச்சனையைக் கண்டுபிடிக்க முடியும். (உலகில் மிகவும் பிரபலமான பல புள்ளிகள் இக்குறைபாட்டினால் பாதிப்படைந்தவர்களாக இருக்கிறார்கள்.) இந்த குறைபாட்டை கீக் சின்ட்ரோம்(Geek Syndrome) அல்லது லிட்டில் புரபசர் ஸிண்ட்ரோம்(Little Professor Syndrome) என்றும் கூறுவதுண்டு.

PDD-Nos:-

இவ்வகையில் மற்ற ஆட்டிச குறைபாடுகளுக்கான வரையரைக்கு முழுமையாக உட்படாத ஆனால் ஆட்டிசக் குணாம்சங்களுள்ள குழந்தைகளை வகைப்படுத்தலாம்.

ரெட் ஸின்ட்ரோம்:-

இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை. தலை வளர்ச்சி மிகவும் மெதுவாக இருப்பது, கைகளை முழுமையாக பயன்படுத்த முடியாமலிருப்பது போன்றவை இதன் அடையாளங்கள். இது பெரும்பாலும் மரபணு மூலமாக கடத்தப்படுகிறது. மேலும் ரெட் மட்டுமே ஆட்டிசம் தொடர்பான குறைபாடுகளில் மருத்துவ ரீதியாக சோதித்து கண்டறிய முடிவதாக உள்ளது

CDD:-

இவ்வகைக் குறைபாடு உள்ள குழந்தைகள் மற்ற ஆட்டிசக் குறைபாடுகள் போலின்றி ஒரு குறிப்பிட்ட வயது வரை இயல்பான குழந்தைகள் போலவே பேசவும், மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள். திடீரென இவர்களது பேச்சுத் திறன், பழகுந்திறன் ஆகியவற்றை இழந்து ஆட்டிச நிலைக்குள்ளாவார்கள்.

இவை போன்ற வகைப்படுத்தல்கள் ஒரளவுக்கு ஆட்டிசத்தைப் பற்றிய புரிதலை நமக்குத் தரலாம். ஆனாலும் இந்த ஸ்பெக்ட்ரத்திலிருக்கும் குறைபாடுகளின் வகைகளை நாம் துல்லியமாக வரையறுத்துவிட முடியாது என்பதே உண்மை.  ஒவ்வொரு வகையிலும் கூட  அதற்கான அறிகுறிகளின் அளவும் குழந்தைக்கு குழந்தை மாறுபடுகிறது. சமூகத்தோடு தொடர்பு கொள்ளல், மொழி/சைகை மூலம் தன் எண்ணத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்கள் மட்டுமே இவ்வகைக் குறைபாடுகளின் பொதுவான அம்சமாகும்.

(தொடரும்)

தொடர்புடைய சுட்டிகள்

ஆட்டிசம் வரலாறு

ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

This entry was posted in AUTISM - ஆட்டிசம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள் and tagged , , , , . Bookmark the permalink.

8 Responses to ஆட்டிசம் – உட் பிரிவுகள்

  1. rajesh says:

    நல்ல பயன் உள்ள தகவல்.

  2. ஆட்டிசம் என்பது மிக அரிதான ஒரு நோய்

    ஆனால்

    emotional quotientல் high normal, low normal ஆக இருக்கும் குழந்தைகளை கூட autism என்று பெயரிட்டு வருவது தற்காலத்தில் நடந்து வருகிறது

  3. velan says:

    Hi Bala

    My 2 1/2 years old son having autism, And I am in chrompet,chennai .
    could you please tell me any good doctors near chrompet to train my son.

  4. வேலன் தனியே மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.

  5. ஆட்டிசம் பற்றிய கட்டுரைகள் சில படித்தேன். மின்னஞ்சலில் உங்கள் சுய விவரங்களையும் தொலைபேசி எண்ணும் அனுப்பவும். பேசும்போது மேல் விவரங்கள் தருகிறேன். நன்றி.

  6. Pingback: » ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-1

  7. vijayaselvan says:

    wonder full work .
    refer this torrent for some valuable books for autism
    http://thepiratebay.se/torrent/7841434/

  8. Pathma says:

    Thank you for your informations

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.