(சென்சரி பிரச்சனைகள் பாகம் 2ன் தொடர்ச்சி)

கடந்த பகுதியில் ஏழுவகையான பிரிவுகள் என்னென்ன என்று பார்த்தோம். அவற்றிலும் கூட இரண்டு நிலைகள் இருப்பதை உணர்ந்துகொண்டோம். இதில் அந்த ஏழுவகைப் பிரிவுகளையும், அதன் நிலைகளையும் பற்றிப் பார்ப்போம்.

  1. பார்வை (Sight): இதற்கான உணர்வு வாங்கிகள்(sensory receptors) கண்ணின் ரெட்டினாவில் உள்ளது. இவை ஒளியினால் தூண்டப்படுபவை. இதன் மூலம் நாம் ஒரு பருப்பொருளின் அளவு, நிறம், வடிவம் முதலியவற்றை உள்வாங்குகிறோம். இந்த உணர்வைப் பெறுவதில் ஆட்டிச பாதிப்புடையோர் பின்வரும் சிக்கல்களை, முன்னர் சொன்னது போல, மிகையாகவோ, குறைவாகவோ அடையக்கூடும்.

a. Hypo / Under sensitive

i. பொருட்கள் நிறம் மங்கித் தோன்றும். அல்லது அதன் இயல்புகளில் சில மட்டும் தெரியாது.

ii. மையத்திலிருக்கும் பொருள் மங்கித்தெரிவதும், ஓரங்களில் இருப்பவை தெளிவாகத் தெரியும்.

iii. நேர்மாறாக மையத்திலிருக்கும் பொருள் மட்டும் பெரிதாகத் தோன்றலாம் – ஓரத்திலிருக்கும் பொருட்கள் மங்கலாகத் தெரியும்.

iv. மூன்றாவது பரிமாணத்தை உணர்வதில் சிக்கல் – இதனால் பொருட்களை பிடிப்பது அல்லது வீசி எறிவது போன்றவற்றில் சிக்கலிருக்கும்.

b. Hyper / Over sensitive

i. முழுமையான காட்சியை காண முடியாது போகலாம். பொருட்கள், விளக்குகள் போன்றவை குதிப்பது போல தோன்றலாம்.

ii. காட்சி உடைபட்டுத் தெரியும்.

iii. ஒரு பொருளின் முழுமையான வடிவத்தை பார்ப்பதைக் காட்டிலும் அதன் ஏதாவது ஒரு தன்மையை உற்று நோக்குவதில் மகிழுதல்.

2. சத்தம்:- இக்குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான சென்சரி பிரச்சனை கேட்டலில் ஏற்படுவதுதான். ஏனெனில் சத்தங்களை உள்வாங்காத போது மனிதனின் தகவல் தொடர்புத் திறன் மோசமாக பாதிக்கப்படுகிறது.

a. Hypo / Under sensitive

i. ஒரு காதில் மட்டுமே கேட்கும் திறன் சரியாக இருக்கும். மற்றொன்றில் குறைவாகக் கேட்கலாம் அல்லது முழுமையாக கேட்க முடியாதிருக்கலாம்.

ii. ஒரு சில குறிப்பிட்ட ஒலிகளை மட்டும் உணர முடியாது போகலாம்.

iii. கூட்டமான, சத்தமான சூழல்கள் பிடித்துப் போகும். கதவை அறைந்து சாத்துவது போன்றவற்றை ரசிப்பார்கள்.

b. Hyper / Over sensitive

i. ஒலிகள் மிகைப்படுத்தப்பட்டு கேட்கலாம். அல்லது குழப்பமாகவும், தெளிவில்லாமலும் கேட்கலாம்.

ii. ஒரு சில ஒலிகளினால் மட்டும் பாதிக்கப்படலாம். அல்லது வெகுதூரத்தில் கேட்கும் பேச்சைத் தெளிவாக கவனிப்பது சுலபமாக இருக்கும்.

iii. சூழலில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் உற்று கேட்டு, மற்றவற்றை உதற இவர்களால் முடியாது. பின்னணி ஓசையினால் கவனமிழப்பதால் பேச்சுக்களை கிரகிக்க முடியாமல் போவதை அதிகமும் காணலாம்.

3. தொடுகை:- இதுவும் socializing-ற்கு மிகவும் முக்கியமான ஒரு உணர்வு. ஒரு பொருளைத் தொடுவதன் மூலம்  அது சூடானதா இல்லை குளிர்ச்சியானதா என்பது போன்ற பல விஷயங்களை நாம் உணரலாம். மேலும் வலியை நாம் உணர்வதும் இந்த தொடு உணர்ச்சியின் மூலமே.

a. Hypo / Under sensitive:

i.    மற்றவர்களை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வது அப்படியே தன்னை அடுத்தவர்கள் இறுக்குவதை விரும்புதல்.

ii. அதீதமான வலி தாங்கும் திறன்

iii. தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது

iv. கனத்தை விரும்புதல் – கனமான போர்வைக்கு உள்ளே கிடக்க விரும்புவார்கள்.

b. Hyper / Over sensitive

i. தொடுகை என்பதே வலி உண்டாக்குவதாக அமையலாம். இத்தகையோர் தங்களை அடுத்தவர் தொடுவதையே விரும்ப மாட்டார்கள். இதனால் அதிகமும் தனிமைப்பட்டு போவார்கள்.

ii. கையினாலோ கால்களாலோ எதையும் தொட விருப்பமின்மை.

iii. பல் துலக்குவதிலும், தலைக்கு குளிப்பதிலும் விருப்பமின்மை. (தலை  சீவிக்கொள்வதும் பிடித்தமில்லாமல் போகும்)

iv. ஒரு சில குறிப்பிட்ட துணி வகைகளை அணியப் பிடிக்காது போதல்.


4. சுவை:- நாவிலிருக்கும் சுவை மொட்டுக்களே நாம் வாயில் படும் பொருட்களின் சுவையை மூளைக்கு அறிவிக்கின்றன.

a. Hypo / Under sensitive

i. மிகுந்த காரமான உணவை விரும்புதல்.

ii. கிடைக்கும் எதையும் உண்ணுதல் – புல், மண் என எதுவாயினும் மெல்ல முற்படுவது. இக்குறைபாட்டை pica என்று அழைப்பர்.

b. Hyper / Over sensitive

i. குறிப்பிட்ட சில சுவைகளை மட்டுமே விரும்புவது

ii. குறிப்பிட்ட சில வகை கட்டமைப்பு (texture) உடைய உணவுகளை மட்டுமே உண்பது – மிகவும் மென்மையாக குழைக்கப்பட்ட மசிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே விரும்பலாம்.

5. முகர்தல்:-

a. Hypo / Under sensitive

i. எவ்வித வாசனையையும் உணர முடியாது போதல் – தன் உடம்பிலிருந்து எழும் வியர்வை மணம் போன்றவற்றைக் கூட இவர்கள் பொருட்படுத்துவதில்லை.

ii. சிலர் எல்லாப் பொருட்களையும் நக்கிப் பார்ப்பதுண்டு – அதன் மூலம் அப்பொருட்களை மேலும் துல்லியமாக அறியமுற்படுவர்.

b. Hyper / Over sensitive

i. சில குறிப்பிட்ட மணங்களை வெறுப்பது – ஒரு சில வகை நறுமண திரவியங்கள், ஷாம்பூ போன்ற மணங்களை வெறுப்பதால் அவற்றை உபயோகிப்பவரை அணுக மறுப்பர்.

ii. கழிவறை செல்வதை பயிற்றுவிப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.


6. சமநிலை:- காதின் உட்புறத்திலுள்ள நரம்பு மையம் ஒன்றே நம் உடலின் சமநிலையும், நமது இருப்பையும் நமக்கு உணர்துகிறது.

a. Hypo / Under sensitive

i.    சில சமயங்களில் குதிக்கவோ, சுற்றவோ, ஊஞ்சலாடவோ விரும்புவார்கள். இது போன்ற செயல்கள் அவர்களுக்கு சமநிலையை அளிக்கும்.

b. Hyper / Over sensitive

i.    விளையாட்டு போன்ற நமது உடலை கட்டுப்படுத்த வேண்டிய சூழல்களில் சிரமப்படுவர்.

ii.    ஒரு வேலையை திடீரென நிறுத்துவது போன்ற விஷயங்களில் சிரமம் இருக்கும்.

iii. கார் பயணம் போன்ற சில சந்தர்ப்பங்களில் ஒவ்வாமை

iv. கால்களைத் தரையிலும், தலைய நேராகவும் வைக்காது செய்ய வேண்டிய எந்த செயலையும் செய்ய பயப்படுவார்கள் (குதிப்பது, ராட்டினம் போன்றவற்றில் பயணிப்பது)

7. உடலை உணரும் திறன்:- தசையிலும், மூட்டுக்களிலும் இருக்கும் உணர்வ் வாங்கிகளே இந்த உணர்வை நமக்கு அளிக்கின்றன. நம் கையை முதுகுப்புறம் கொண்டு போகையில் நாம் கையை கண்ணால் காணாவிடினும் நம்மால் அது எங்கிருக்கிறது என்பதை உணர முடியும். அதை இயக்கவும் முடியும். அதற்கெல்லாம் இவ்வுணர்ச்சியே காரணமாகும்.

a. Hypo / Under sensitive

i. மற்றவர்களுக்கு மிக அருகில் போய் நிற்பது – ஏனெனில் தங்கள் உடலின் சரியான அளவுகளை இவர்களால் அனுமானிக்க முடியாது. எனவே எவ்வளவு தூரம் தள்ளி நின்றால் அடுத்தவர் மேல் உரசாது நிற்க முடியும் என்பது போன்ற விஷயங்களை கணக்கிட முடியாது.

ii. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள்.நடக்கையில் நடுவில் வரும் தடைகளை கணக்கிட்டு நடக்க முடியாது.

iii. மற்றவர்கள் மேல் உரசுவது, இடிப்பது போன்றவற்றை உணராமலே நடமாடுவது.

b. Hyper / Over sensitive

i. சின்னச் சின்ன நுட்பமான வேலைகளை(fine motor skills) செய்வதில் சிக்கல் ஏற்படும். ஷூ லேஸ்களை கட்டுவது, பட்டன் போடுவது போன்ற நுண்மையான செயல்களை கற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கும்.

ii. ஒரு விஷயத்தை பார்க்க மொத்த உடலையும் திருப்ப வேண்டியிருக்கும்.

சினெஸ்தீசியா( Synaesthesia):- இது ஆட்டிச பாதிப்புக்குள்ளானவர்களில் வெகு சிலருக்கு வரக்கூடிய சிக்கலாகும். இந்த பாதிப்பு உடையவர்கள் ஒரு வகையான உணர்வை வேறு ஒரு புலன் மூலம் அறியக்கூடும். உதாரணமாக ஒரு  வகை ஒலியை ஒரு நிறமாக உணர நேரிடலாம்.

(தொடரும்)

++++

நன்றி: படங்களின் மேல் கிளிகினால் எடுக்கப்பட்ட இடத்தின் சுட்டியை அறியலாம்

+++
மேலும் ஆட்டிசம் பற்றிய தொடர்புடைய கட்டுரைகளுக்கு:-

http://216.185.103.157/~balabhar/blog/?page_id=25


Comments

2 responses to “ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-3”

  1. ஒவ்வொரு விளக்கமும் அறிந்து கொள்ள வேண்டியவை…

    நன்றி… தொடர்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *