13. ஆட்டிசம்- சிகிச்சை முறைகளில் பெற்றோர் / கவனிப்பாளரின் பங்கு

 

சாதாரணமாக ஏதேனும் நோய் வந்தால் நாம் ஒரு மருத்துவரை நாடி அவரிடம் நம் உடல் நலம் பற்றிய பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர் தரும் மருந்துகளை அவர் சொல்லும் கால அளவுகளில் உட்கொள்வதோடு நாம் நிம்மதியாக இருந்துவிடலாம். அதிகபட்சம் உணவில் கொஞ்சம் பத்தியத்தை கடைபிடிக்கவேண்டியிருக்கலாம்.  அதற்கு மேல் அந்த நோயைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் நோயாளிக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ இருப்பதில்லை.

ஆனால் ஆட்டிசத்தை பொறுத்த வரையில் சிகிச்சை என்பது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது மட்டுமே அல்ல. மிக விரிவான பயிற்சிகள் மட்டுமே இக்குழந்தைகளை மீட்க இயலும். மேலும் ஒவ்வொரு குழந்தையின் பிரச்சனையும் மிக நுண்ணியதான வேறுபாடுகள் கொண்டது என்பதால் முழுக்க முழுக்க அக்குழந்தையை அறிந்த ஒருவரின் துணையுடனேதான் அதற்கான சிகிச்சைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

அத்துடன் பயிற்சிகள் அக்குழந்தையால் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது, குழந்தையின் நடத்தையில் அதனால் எந்தளவு முன்னேற்றம் ஏற்படுகிறது போன்றவற்றை உடனுக்குடன் பயிற்சியாளருக்கு தெரிவிப்பதும் முக்கியமானது. அப்போது மட்டுமே பயிற்சியாளர் குழந்தைக்கு கொடுக்கப்பட்டு வரும் பயிற்சி முறைகளில் மாற்றம் தேவை எனில் செயல்படுத்த இலகுவாக இருக்கும். எனவே ஆட்டிச சிகிச்சையில் பெற்றோரின் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

 

அவசியத்தேவை அதிரடி செயல்பாடு

தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று கண்டறிந்த உடனே பெற்றோருக்கு ஒரு மலைப்பும், ஒருவித வெறுமையும் வருவது இயற்கை. அப்படி இருப்பதினால் எவ்வித மாற்றங்களையும் கொண்டு வரமுடியாது. வேண்டுதல்களால் ஆக்க்கூடிய காரியமல்ல. அதே சமயம் உடனடியாக பெற்றோர் தங்களை தேற்றிக் கொள்ள வேண்டியதும், முழு மூச்சுடன் செயல்பட ஆரம்பிக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விதிகள்.

 

 1. ஆட்டிசம் பற்றி புரிந்து கொள்ளுங்கள் : ஆட்டிசத்தின் தன்மைகள், கிடைக்கும் சிகிச்சைகள் போன்றவற்றை பற்றி தொடர்ந்து தேடிப் பிடித்து கற்றுக் கொண்டே இருங்கள். சிகிச்சை அளிக்கும் டாக்டர், தெரப்பிஸ்ட் போன்றோரிடம் எந்த கேள்வியைக் கேட்கவும் தயங்க வேண்டாம். அதே போல் சிகிச்சை முறைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் தெளிவாக அவர்களிடம் தெரிவிக்க தயங்காதீர்கள்.
 2. உங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்: உங்கள் குழந்தையின் ஆட்டிச பாதிப்பின் அளவு, அக்குழந்தையின் தனித்திறமை என்ன, என்னென்ன வகையான சென்சரி பிரச்சனைகள் இருக்கிறது, அவர்களின் விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை புரிந்து கொள்வது அவர்களின் சிகிச்சையை எளிதாக்கும்.
 3. உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்: உங்கள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் அவமானகரமான விஷயம் எதுவும் இல்லை. எனவே இந்த உண்மையை மறைக்க வேண்டியதில்லை. உறவினர்களிடமும் நண்பர்கள் வட்டத்திலும் குழந்தை ஆட்டிசத்தால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லிவிட்டால், தேவையற்ற தயக்கங்களை களைய முடியும்.
 4. நம் குழந்தையை மற்ற சாதாரண குழந்தைகளுடன் ஒப்பிட்டு மனம் சோர்வுறவும் தேவையில்லை. நம் குழந்தை எதையெல்லாம் செய்யவில்லை என்று யோசித்து சோர்வுறாமல் அவனது சின்னச் சின்ன செயல்களையும், வெற்றியையும் கூட கொண்டாடப் பழகுங்கள்.
 5. மனந்தளராது செயல்படுங்கள்: ஆட்டிச பாதிப்பு என்பது வரையறுக்கப் பட முடியாதது. எனவே எந்த கட்டத்திலும் இதற்கு மேல் நம் குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். வாழ்நாளின் ஏதேனும் ஒரு கணத்தில் அக்குழந்தைகள் எதையேனும் சாதிக்க முடியும். எனவே மனதை தளர விடாது தொடர்ந்து அவர்களை கற்க ஊக்குவியுங்கள்.
 6. பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்கு தொடர்ந்து அளியுங்கள். இசை, நடனம், ஓவியம், புதிர்கள் அடுக்குதல், ஸ்கேட்டிங்க் என எல்லா வகை வகுப்புகளையும் மெல்ல மெல்ல அறிமுகப் படுத்துங்கள். அக்குழந்தையுள் ஒளிந்திருக்கும் ஏதேனும் ஒரு திறனை நீங்கள் அறிய நேரிடலாம். அது குழந்தையின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாகலாம்.

 

சாதாரணமாக குழந்தைகள் சூழலை கவனித்து இயல்பாகக் கற்றுக் கொண்டுவிடக் கூடிய சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நாம்தான் இக்குழந்தைகளுக்கு சொல்லித் தந்தாக வேண்டும். எனவே சலிப்புறாமலும், திட்டமிட்டும் இவர்களை பயிற்றுவிக்க வேண்டும்.

 

 

 

 

மேலும் சில..

 

 1. ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையைப் பின்பற்றுங்கள்.  ஆட்டிசக் குழந்தைகள் எப்போதும் மாற்றத்தை விரும்ப மாட்டார்கள். எனவே பல் துலக்குவதிலிருந்து, பள்ளி செல்வது, தெரப்பிகளுக்குப் போவது, உணவு நேரம், தூங்கும் நேரம் என எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி தொடர்ந்து ஒரே கால அட்டவணையைப் பின்பற்ற முயலுங்கள். தவிர்க்க இயலாத மாற்றங்கள் வரும் போது, பல முறை சொல்லிச் சொல்லி அந்த மாற்றத்திற்கு அக்குழந்தையை முன்பே தயார் செய்யத் தொடங்குங்கள்.
 2. ஊக்கப் பரிசுகள் மூலம் கற்பித்தல்: குழந்தை சரியாகச் செய்யும் எந்த ஒரு செய்கைக்கும் அக்குழந்தைக்கு ஏதேனும் ஒரு பாராட்டையோ பரிசையோ தாருங்கள். அதற்காக சாக்லேட்டுகளை அடிக்கடி தருவது போல ஏதேனும் வேறு ஒரு விரும்பத்தகாத பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டாம். பெரும்பாலும் கைதட்டி, வெரிகுட், பிரமாதமாப் பண்றியே என்பது போன்ற பாராட்டுரைகளைத் தருவதே போதுமானது. வெளியே பூங்காவிற்கு அழைத்துப் போவது, விருப்பமான பொருளை விளையாடத் தருவது என அவர்களை ஊக்குவிக்கும் செயல்களைச் செய்யும் போது “இது நீ அன்னிக்கு நல்லா பாடினியே, அதுக்காக” என்பது போல மனதில் பதிய வைப்பதன் மூலம் அவர்களுக்கு நன்னடத்தை என்பதை பிடித்தமான ஒரு செய்கையாக மாற்ற முயலுங்கள்.
 3. சமிக்ஞைகளை உணருங்கள்:- குழந்தையின் விருப்பு, வெறுப்பு, மன அழுத்தம் போன்றவற்றை அவர்கள் உடல் மொழியில் வெளிப்படுத்தும் விதத்தை உற்று நோக்கி புரிந்து கொள்ள முயலுங்கள். குழந்தைகளின் சமிக்ஞைகளை உணர்ந்துகொள்ளுவதால்,  அடுத்த முறை அவர்கள் கோபத்தை முன்கூட்டியே உணர்ந்து கட்டுப்படுத்த நமக்கு உதவியாக இருக்கும்.
 4. சென்சரி டயட்டை எப்போதும் சரிபாருங்கள் – உங்கள் குழந்தையின் சென்சரி பிரச்சனைகளுக்கு சரியான தீனி கொடுக்கப்படுவதை எப்போதும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஒருபோதும் அதில் சமரசமே வேண்டாம்.
 5. விதிகளாக மாற்றி கற்பியுங்கள்: சமூக ஊடாட்டத்திற்கான எல்லா செயல்களையும் இக்குழந்தைகளுக்கு எளிய விதிகளாக மாற்றி கற்பியுங்கள். கோவிலுக்குப் போனால் எப்படி நடந்து கொள்ள வேண்டும், விருந்தினர் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சமவயதுக் குழந்தைகளை சந்தித்தால் என்ன செய்ய வேண்டும், யாரேனும் முகமன் சொன்னால் அதற்கு பதில் தருவது எப்படி இப்படி எல்லா விஷயங்களையும் ஒவ்வொரு விதிமுறையாக அவர்கள் மனதில் பதிய வையுங்கள். எல்லா விதிகளையும் அடிக்கடி நினைவுபடுத்துங்கள்.
 6. பிரித்து சொல்லிக்கொடுங்கள்: ஒவ்வொரு செயலையும் துண்டுகளாக்கி சொல்லிக் கொடுங்கள் – எந்த ஒரு செயலையும் படிப்படியாக, பல நிலைகளில் சொல்லிக் கொடுங்கள். இதன் மூலம்  அவர்களுக்கு எந்தவொரு செயல்/செய்தியை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
 7. தன்னிச்சையாக இயங்கப் பழக்குங்கள் – முதலில் எந்த செயலையும் கூட இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் மெல்ல மெல்ல நமது உதவிகளை குறைத்துக் கொண்டே வர வேண்டும். முதலில் நாமே பல்தேய்த்து விட ஆரம்பிக்கிறோம். பிறகு பேஸ்ட், பிரஷ் எல்லாம் எடுத்துக் கொடுத்து கூடவே குளியலறைக்குப் போய் பக்கத்தில் நின்று கொண்டு அவர்களது கையால் தேய்க்க வைக்க வேண்டும். அடுத்த கட்டத்தில் நாம் ஹாலில் இருந்து கொண்டே பேஸ்ட் எடு, பிரஷ் எடு, பாத்ரூம் போ, இப்போ பல் தேய் என்று கட்டளைகள் கொடுத்து, அவர்கள் சரியாகச் செய்வதை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக போய் பல் தேய்த்துவிட்டு வா என்ற ஒரே கட்டளையில் அவர்கள் இந்த முழுச்செயலையும் செய்யும் நிலையைக் கொண்டு வர வேண்டும்
 8. சக பெற்றோருடன் தொடர்பில் இருங்கள் – இது மிகவும் முக்கியானதாக எனக்குப் படுகிறது. நம் குழந்தை போலவே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளின் பெற்றோருடன் தொடர்பிலிருங்கள். உங்கள் குழந்தையை விட வயது மூத்த குழந்தையைக் கையாளும் இன்னொரு பெற்றோரின் அனுபவம் உங்களுக்கு நிச்சயம் உதவக்கூடும். அதோடு, ஃபோரம்களில் இணைவது, அல்லது தெரப்பிகளுக்குப் போகையில் சந்தித்துப் பேசுவது போன்ற செயல்கள் உங்களுக்கு ஆறுதலையும்,  நல்ல தெரப்பிகள், டாக்டர்கள், பள்ளி போன்றவற்றைப் பற்றிய தகவல்களும் கிடைக்கும்.

 

++++++++++

மேலும் ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளுக்கு சுட்டியைச் சொடுக்குக:-

http://216.185.103.157/~balabhar/blog/?page_id=25

 

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 13. ஆட்டிசம்- சிகிச்சை முறைகளில் பெற்றோர் / கவனிப்பாளரின் பங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.