ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (ASD) என்பதைத்தான், சுருக்கமாக ஆட்டிசம் என்று சொல்கிறோம் நாம். இப்பிரிவின் கீழ் பல நிலைகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும், அத்தனையும் ஆட்டிசம் என்ற ஒரே குடையின் கீழ்தான் வரும்.

pieces-of-the-puzzle-592798_640
படம் நன்றி:- pixabay

நேரடியாக கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது, பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடாமல் இருப்பது, பேசாமல் இருப்பது என்று ஆட்டிசத்திற்கான சில அடையாளங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும், ஆட்டிசம் குறைபாடுகளை இப்படியானதுதான் என்று வரையறுக்க முடியாது.  இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். எல்லோரையும் ஒரேபோல அணுக முடியாது என்பதை, பெற்றோர் நினைவில் கொள்ளுதல் நலம்.

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் இப்படி இருக்கவேண்டும் என்று பொதுவான ஒரு விதி பின்பற்றப்பட்டு வருகிறது. நீந்துவது, தவழ்வது, உட்காருவது, நிற்பது, நடப்பது போன்ற செயல்கள் அந்தந்த மாதங்களில் நடக்கவேண்டும். இந்த வளர்ச்சிப் படிநிலைகளில் மாற்றம் ஏற்படும்போது, குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம் என்று பெற்றோர் முன்னெச்சரிக்கையாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

பிறந்த சின்னக் குழந்தைகளுக்கு, எப்போதுமே அசையும் பொருட்களின்மீது ஒருவித ஈர்ப்பு இருக்கும். தூளியில் ராட்டின பொம்மை கட்டுவதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். அதுபோலவே மின்விசிறி, சுவரில் ஆடும் நாட்காட்டியையும் குழந்தை பார்ப்பதும் மேற்சொன்ன காரணங்களால்தான்! குழந்தையை நாம் கொஞ்சுவதற்குத் தூக்கும்போது, முகத்தில் ஆடும் விழிகளை குழந்தை வியப்புடன் பார்க்கும். ஆனால், ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்குண்ட குழந்தைக்கு இப்படியான கவனித்தல் இல்லாமல் போகும்.

அதுபோலவே, பத்தாவது மாதத்தில் இருந்து ஒரு வயதிற்குள்ளாகவே அத்தை, மாமா, அக்கா, அண்ணா போன்ற ஒருவார்த்தை சொற்களையும், தா, வா, போ, நீ என்ற ஓரெழுத்து வார்த்தைகளையும் குழந்தை இயல்பாகப் பேசத் தொடங்கிவிடும். அப்படிப் பேசாவிட்டால், பெற்றோர் உடனடியாக சுதாரித்து மருத்துவரின் ஆலோசனையை நாடுவது நல்லது. மாறாக, மூன்று வயதாகியும் பேசாத குழந்தைக்காக, ‘வெள்ளியில் நாக்கு செய்து கோவில் உண்டியலில் போடுகிறேன்’ போன்ற வேண்டுதல் மட்டும், நல்ல பலனைத் தராது.

ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் என்று கண்டறியப்பட்டால், அக்குழந்தையின் பெற்றோர் விழிப்புடன் இருந்து செய்யவேண்டிய, செய்யக் கூடாத முக்கியமான அம்சங்களை இங்கு காண்போம்.

பெற்றோருக்குக் கூடுதல் பொறுப்பு

ஒரு பெரிய ஹோட்டல் ஒன்றில் சாப்பிடப் போகிறீர்கள். அங்கே குறிப்பிட்ட உணவு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம். எத்தனை முறை அங்கே போனாலும், குறிப்பிட்ட அந்த உணவின் சுவை மட்டும் மாறாது. தினமும் ஒருவரேதான் சமைப்பாரா என்ன? இல்லை. வேறு, வேறு நபர்கள்தான் சமையல் செய்வார்கள். ஆனால், சுவை மட்டும் எப்படி மாறாமலிருக்கிறது? அதுதான் அந்தத் தலைமை சமையல் கலைஞரின் வல்லமை! ஆம். எது, எவ்வளவு எப்படிச் சேர்த்தால், வழக்கமான சுவை வரும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் ரகசியம்! அதுபோலவே ஆட்டிச நிலைக் குழந்தைகளின் தினப்படி நடவடிக்கைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை, பெற்றோர் நன்கு உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் மற்ற எவரையும்விட, நீங்கள்தான் உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டவராக இருக்கமுடியும்.

அட்டவணை தேவை

பொதுவாகவே ஆட்டிச நிலைக் குழந்தைகள் கொஞ்சம் அசட்டையாக இருப்பார்கள். அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கு, தினப்படி அட்டவணையைத் தயாரித்துக்கொண்டு, அதன்படி தினசரி பணிகளைத் தொடருங்கள்.

காலையில் எழுந்து பல் துலக்குவது தொடங்கி, இரவு படுக்கப்போவது வரையிலான நிகழ்ச்சிகளைத் தொகுத்து, முடிந்தால் படங்களாகவும் சேர்த்து ஓர் அட்டவணை தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த அட்டவணையைக் காட்டி, ‘நாம் இப்படிச் செய்யப்போகிறோம், இதைச் செய்யப்போகிறோம்’ என்று சொல்லிவிட்டு, அப்பணியைத் தொடரவேண்டும். உதாரணமாக, காலையில் பல் துலக்குவதற்கு முன் பிரஷ் படத்தைக் காட்டி, ‘இப்ப நாம பிரஷ் பண்ணப்போறோம்’ என்று சொல்லிவிட்டு, பல் துலக்க வேண்டும். அடுத்து வாளித் தண்ணீர் + சோப்பு படத்தைக் காட்டி, ‘குளிக்கப் போகிறோம்’ என்று சொல்லிவிட்டு, குளிப்பாட்ட வேண்டும். சிற்றுண்டி சாப்பிடப் போகும்முன், இட்லி அல்லது தோசை படம் ஒட்டப்பட்ட அட்டவணையைக் காட்டி, ‘நாம் இப்ப சாப்பிடப் போகிறோம்’ என்று சொல்லிவிட்டு சாப்பிட வைப்பது. இப்படியே ஒவ்வொரு செயல்களையும் குழந்தைக்குச் சொல்லிவிட்டுச் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு, இதற்குப் பின் இது என்ற தினப்படி செயல்பாடுகள் புரியவரும்.

படம் நன்றி:- pixabay
படம் நன்றி:- pixabay

உடனடி பலன்கள் இருக்காது

ஆட்டிச நிலைக் குழந்தைகளை தெரபி வகுப்புக்கு அழைத்துச்செல்லும் பல பெற்றோர், உடனடிப் பலனை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பலருக்கும் அப்படி உடனடியாக முன்னேற்றம் ஏற்பட்டு விடுவதில்லை. சில பிள்ளைகளுக்கு ஒன்றிரண்டு மாதங்களில் மாற்றம் தெரியவரும். இன்னும் சிலருக்கோ ஆறு மாதங்களுக்கு மேலேகூட ஆகும். அதுவரை, பொறுமையுடன் இருப்பது நல்லது.

இதில் இன்னொரு முக்கியமான அம்சம், ஒரே இடத்தில் தெரபி கொடுப்பது என்பது நல்லது. மாறாக, மாதாமாதம் தெரபிக்கான இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தால், குழந்தை எதையுமே கற்றுக்கொள்ளாது போகும். தெரபிஸ்டோடு நல்ல உறவு வந்தபின்னரே, குழந்தை அவர்கள் சொல்லுவதைச் செய்யத் தொடங்கும். இதனை அறியாத பல பெற்றோர் இடத்தை மாற்றிக்கொண்டிருக்கும் தவறை அடிக்கடி செய்கிறார்கள்.

எது நல்ல தெரபி சென்டர்?

இதுதான் ஆட்டிச நிலைக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஏற்படும் அடிப்படை சந்தேகம். எந்த தெரபிஸ்ட் உங்கள் குழந்தையின் நடவடிக்கை பற்றி அப்டேட் கொடுத்து, வீட்டிலும் இதை இதைச் செய்யுங்கள் என்று சில பயிற்சிகளை அறிவுறுத்துகிறாரோ, அவரே நல்ல தெரபிஸ்ட். ஏனெனில், ஒரு தெரபி சென்டரில் குழந்தை இருக்கும் நேரத்தைவிட, வீட்டில்தான் அதிக நேரம் இருக்கிறது. அப்போது குழந்தையை எப்படிக் கையாள்வது என்பதும், எந்த மாதிரி, குழந்தையை பயிற்சிகள் மூலம் பிஸியாக வைத்திருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் (தெரபிஸ்ட்) சொல்லிக் கொடுக்கவேண்டும். அப்போதுதான், குழந்தையிடம் விரைவாக முன்னேற்றத்தைக் காணமுடியும்.

அதுபோல, குறிப்பிட்ட தெரபி வகுப்புக்குக் கிளம்பும்போதோ அல்லது தெரபி வகுப்பின் வாசலிலோ குழந்தை உள்ளே போகமாட்டேன் என்று தொடர்ந்து அழுது அடம்பிடித்தால், அங்கே ஏதோவொன்று சரியில்லை என்று பொருள். இச்சமயத்தில், உடனடியாக இடத்தை மாற்றிவிட வேண்டும்.

ஆட்டிசத்தை இல்லாமல் செய்ய மருந்து இல்லை

உலக அளவில் ஆட்டிசம் குறித்தான ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. இது ஏன் வருகிறது என்பதையே இன்னும் அறுதியிட்டு கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், இதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், இக்குழந்தைகளின் இதர பிரச்சனைகளுக்கு மருந்து கொடுக்கப்படுவதுண்டு. (உதாரணமாக வலிப்பு, ஹைப்பர் நடவடிக்கைகளின் தீவிரத்தைக் குறைக்க, குழந்தைகள் உறங்க இப்படி)

பல மாற்று மருத்துவர்கள், நாங்கள் ஆட்டிசத்தை முற்றிலும் குணமாக்குவோம் என்று விளம்பரம் செய்துவருவதை நீங்கள் காணமுடியும். அப்படி வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். ஆட்டிசம் ஏதோ இங்கே மட்டும் இருப்பதாக நினைக்க வேண்டாம். உண்மையிலேயே ஆட்டிசத்திற்கு மருந்து கண்டுபிடித்திருந்தால், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகிவிடுவார் அம்மருத்துவர். மேலைநாடுகளில் எல்லாம் இவர் புகழ் பரவி, இங்கே படையெடுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால்தான் சொல்கிறேன். போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒருவேளை உண்மையிலேயே இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், செய்திகள் வழியாகவும் உங்கள் குடும்ப மருத்துவர் வழியாகவும் உங்களுக்குச் செய்தி எட்டிவிடும்.

அதற்காக, மாற்று மருத்துவமே வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆங்கில மருத்துவத்துறை கொடுக்கும் மருந்துகள் போன்றே, வலிப்பு, உறக்கமின்மை, பசியின்மை போன்றவற்றுக்கு மாற்று மருந்துகள் நல்ல பலனைக் கொடுப்பதாக பல பெற்றோர் சொல்லி அறிகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

குழந்தைக்கு ஆட்டிசம் என்று அறிய வரும்போது, பல பெற்றோர் முடங்கி விடுகின்றனர். எப்போதும், குழந்தையின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கின்றனர். தங்களைக் கவனித்துக்கொள்ளத் தவறிவிடுகின்றனர். இதன் காரணமாக இரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. சுவர் இருந்தால் மட்டும்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல, பெற்றோரின் உடல் / மனம் நன்றாக இருந்தால்தான் இப்படியான சிறப்புக் குழந்தைகளை நன்கு கவனித்துக்கொள்ள முடியும் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துவது நல்லது.

அதுபோலவே பிற ஆட்டிச நிலைக் குழந்தைகளின் பெற்றோருடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தவரின் அனுபவங்கள் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

குழந்தை பற்றிய கவலையிலேயே எப்போதும் மூழ்கிவிடாமல், தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களுக்கும் நேரம் அறிந்து ஒதுக்கி, அதில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி வருகின்றனர்.

வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தானே ஒழிய, கவலைப்பட்டு சோர்ந்து போய்விடுவதற்கல்ல! நம்பிக்கையோடு நடை பயில்வோம்!


Comments

2 responses to “ஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்”

  1. dhona maha Avatar
    dhona maha

    Awesome one…..

  2. Muthu Avatar
    Muthu

    Thanks for the information. It motivated me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *